இலங்கை சுதந்திரமடைந்த காலந்தொட்டு சிங்களத் தலைமைகள் மிக மலிவான அரசியல் நடத்தியதன் பயனை இப்போது அறுவடை செய்து கொண்டிருக்கின்றன.

369

 

இலங்கை சுதந்திரமடைந்த காலந்தொட்டு சிங்களத் தலைமைகள் மிக மலிவான அரசியல் நடத்தியதன் பயனை இப்போது அறுவடை செய்து கொண்டிருக்கின்றன. கிடைத்த சுதந்திரத்தைச் சரியாகப் பேணத் தெரியாமல் எல்லாம் தமக்கே என்ற இனவாதச் சிந்தனையுடன் ஒரு சிலரும் அவர்தம் குடும்பங்களும் வாழ முற்பட்டதன் விளைவே இப்போது சர்வதேச நெருக்கடியாகச் சூழ்ந்திருக்கிறது

1431026933mahinda-india

இலங்கை அரசுக்கு வெளியிடங்களிலிருந்து அழுத்தங்கள் வரும்போதெல்லாம் அது தமிழர்களாலேயே நேர்கின்றதென்று சிங்கள மக்கள் மத்தியில் பரப்புரை செய்து அவர்களின் வாக்குகளைப் பெற்றுக்கொள்வதில் இலங்கையின் அத்தனை ஆட்சியாளர்களும் ஒரே வகையினராகவே இருந்து வருகிறார்கள்.

தமிழர்களின் கோரிக்கைகளை எல்லாம் ஆபத்தானவையாகவே சிங்கள மக்களிடையே திரித்துக்காட்டி அவற்றை முறியடிக்கத் தமக்கே வாக்களியுங்கள் என்று கூறுவது தான் சிங்களத்தின் அரசியலாகிக்கிடக்கிறது.

இப்படித்தான் இவர்கள் காலமெல்லாம் செய்துவந்திருக்கிறார்கள். ஜெனிவாப் பிரச்சினைகளுக்கும், தென், மேல் மாகாணசபைகளின் தேர்தல்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லாதபோதிலும் ஏதோ தொடர்பிருப்பதுபோலச் சிங்கள மக்களை நம்ப வைப்பதில் அரசு ஈடுபட்டு வருகிறது.

நாட்டைப் பயங்கரவாதிகளின் பிடியிலிருந்து மீட்டெடுத்த நாயகரை இழிவுபடுத்த நாம் விடுவோமா என்ற தோரணையில் சாதாரண சிங்கள மக்கள் அரசுக்குச் சார்பாக வாக்களிக்கப் போகிறார்கள். இதனைத் தமது ஆட்சிக்குக் கிடைத்த தொடர் வெற்றி என்றும் ஐக்கியதேசியக் கட்சிக்குக் கிடைத்த படுதோல்வியயன்றும் அரசு தம்பட்டம் அடிக்கப் போகிறது.

இன்றும்கூட இலங்கைப் பிரச்சினை ஜெனிவா செல்வதற்குத் தமிழர்களே காரணம் என்றாற்போல்தான் சிங்கள மக்கள் மத்தியில் பரப்புரைகள் செய்யப்பட்டு வருகின்றன. புலம் பெயர்தமிழர்கள் இலங்கைக்கெதிராகச் செயற்படுகிறார்கள் ; அவதூறு செய்கிறார்கள், வடக்கு, கிழக்குத் தமிழர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பின்னால் நிற்கிறார்கள்.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இலங்கையைப் பிளவுபடுத்த முயல்கிறது, வடக்கு மாகாணசபை போர்க் குற்ற விசாரணையைக் கோரும் தீர்மானத்தை நிறைவேற்றியதன் மூலம் இலங்கைக்குத் தீங்கு செய்திருக்கிறது ; இலங்கையின் சட்டதிட்டங்களை உதாசீனம் செய்திருக்கிறது; வடமாகாணசபைத் தேர்தலை நடத்திய ஜனாதிபதிக்கு எதிராகவே அது செயற்படுகிறது என்றெல்லாம் நியாயங்கள் முன்வைக்கப்படுகின்றன.

இலங்கை அரசு நேர்மையாகச் செயற்பட்டிருந்தால் புகலிடக்கோரிக்கையாளர் என்றொருசாரார் இலங்கையை விட்டுச் செல்லவேண்டிய அவசியம் ஏற்பட்டிராது. ஆனால், அப்போதிருந்த அரசு தமிழர்கள் தொகை இலங்கையில் குறைந்தால்போதும் என்று சந்தோ­சமடைந்தது.

வாக்காளர்களின் எண்ணிக்கை குறைவடைவதன் மூலம் தமிழர்கள் அரசியல் ரீதியாகப் பலவீனப்பட்டுப் போவார்கள் என்று நம்பியிருந்தது. தன்னாட்டு மக்களின் ஒரு பகுதியினர் சொந்த நாட்டில் பாதுகாப்பில்லை என்று வெளியேறுவது சர்வதேச அளவில் நாட்டின் கெளரவத்தைப் பாதிக்கும் என்று அரசு எண்ணவேயில்லை.

அன்று அரசு விட்ட பிழையை இன்று அனுபவித்துக் கொண்டிருக்கிறது. புலம்பெயர் தமிழர்களால் நாட்டுக்கு ஆபத்தென்று புலம்பிக் கொண்டிருக்கிறது.
வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்குத் தமிழர்கள் அனுப்புகின்ற பணம் குறைத்து மதிப்பிடக்கூடியதல்ல.

அது இலங்கையின் பொருளாதாரத்தில் கணிசமான தாக்கத்தைச் செலுத்துகிறது. இப்போதும் கூட அரசு புலம்பெயர் தமிழர்களை இலங்கையில் முதலீடு செய்யத்தூண்டும் கோரிக்கையை அடிக்கடி வெளிபடுத்தி வருவதன்மூலம் புலம்பெயர் தமிழர்களின் பொருளாதார ஆற்றல்களைப் புரிந்துகொள்ளலாம்.

போய்த் தொலைந்தால் போதுமென்று எந்த மக்களை அன்றிருந்த அரசு மகிழ்ச்சியுடன் நாட்டை விட்டுத் துரத்தியதோ அதே தமிழர்கள்தாம் இன்று அரசுக்குத் தலையிடியாக மாறியிருக்கிறார்கள்.

அரசின் இராஜதந்திரத்துக்குச் சவால் விட்டுக் கொண்டு வெளிநாடுகளில் அரசியல் ரீதியாகச் செல்வாக்குச் செலுத்திவருகிறார்கள். இலங்கையின் வடக்கு,கிழக்குத் தமிழர்களும் தனக்குப் பிரச்சினையாக இருப்பதாக அரசு எண்ணுகிறது.

அரசியல் ரீதியாக அவர்கள் செல்வாக்குப் பெற்று விடாதபடி பார்த்துக்கொள்வதில் இலங்கை அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. அடிமை அரசியல் செய்யச் சம்மதித்தால் மட்டுமே தமிழர்கள் வாழலாம் என்ற மனோ நிலையைத் தோற்றுவிப்பதற்கு முயன்று வருகிறது.

ஆனால், வடக்கு, கிழக்குத் தமிழர்கள் அரசு என்ன துன்பம் செய்தாலும் அதனை அசட்டை செய்து தமது கொள்கையில் விடாப் பிடியாக நிற்கிறார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பின்னால் அணி திரண்டு தங்கள் ஆதங்கத்தை அரசுக்கும் உலகுக்கும் முன்வைத்திருக்கிறார்கள்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாட்டைப் பிளவுபடுத்துவதற்கான நகர்வுகளை மேற் கொண்டு வருகிறது என்று சிங்கள மக்களிடம் திரித்துக் கூறியே அரசு காலத்தை ஓட்டி வருகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கேட்பது தனிநாடல்ல, தனியான ஆட்சி அலகே என்பது அரசுக்கு நன்றாகத் தெரிந்திருந்தும் அவ்வாறு ஒன்று உருவாகி விடக் கூடாது என்பதற்காக பிழையான பரப்புரைகளைத் தென்னிலங்கையில் மேற்கொண்டு நிலைமையை மேலும் சிக்கலாக்கித் தமிழர்களையும் சிங்களவர்களையும் பிரித்து ஒருவர்மேல் ஒருவர் சந்தேகம் கொள்ளும்படியான ஆட்சியை செய்துவருகிறது.

தலைவர் ஜீ.ஜீ.பொன்னம்பலம் சமபலப் பிரதிநிதித்துவம் கேட்டபோது, பத்து லட்சம் தமிழர்களின் பலத்தைக் குறைக்கும் தீர்மானத்தை இலங்கை அரசு நிறைவேற்றியது. தந்தை செல்வா இணைப்பாட்சி கேட்டபோது இனக்கலவரங்களை நடத்தி அதில் மகிழ்ச்சி கொண்டது அரசு.

இளைஞர்கள் ஆயுதமேந்தி தமிழர் தாயகம் தமிழருக்கே என்று போராடிய போது உலகஅரசியல் ஒழுங்கைச் சாதகமாக்கிக்கொண்டு முள்ளிவாய்க்கால் அவலத்தை நடத்தி முடித்தது இன்றைய அரசு.

இந்த நிலையிலும் தமிழர்கள் சோரா திருக்கக்கண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சு என்றும் மீள் கட்டமைப்பு என்றும் ஐந்து வருடங்களாகப் பேசிப்பேசிக் காலத்தை அரசு வீணடித்து வருகின்ற நிலையில், தமிழர்கள் மூன்றாந்தரப்பொன்றின் மத்தியஸ்தத்தை நாடுவதில் தவறேதும் இருப்பதாகக் கூறமுடியாது.

அறுபத்தைந்து ஆண்டு காலமாக நியாயமான ஒரு கொள்கைக்காகப் போராடிய தமிழர்களைத் தொடர்ந்தும் புறந்தள்ளிய தோடல்லாமல் முள்ளிவாய்க்கால் அவலத்தின்மூலம் தமிழர்களின் வாழ்வைச் சிதறடித்த அரசிடம் நியாயத்தைப் பெற்றுக்கொள்ள முடியாது என்ற நிலையில்தான் தமிழர்கள் சர்வதேச உதவிகளை நாடியிருக்கிறார்கள்.

முள்ளிவாய்க்கால் அவலத்தின் பின்னர் தமிழர்களின் அபிலாஷைகளைப் புரிந்து செயற்படக் கிடைத்த வாய்ப்பை அரசு தானாகவே தட்டிக்கழித்திருக்கிறது. ஐ.நா. பொதுச் செயலாளர் நாயகம் பான் கீ- மூனின் ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் கேட்டு நடக்க இலங்கை அரசு விரும்பவில்லை.

ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை, கற்றுக்கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை என்பன அரசால் கவனிக்கப்படாமல் கைவிடப்பட்டன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பேச்சு வார்த்தைக்கு அழைத்து வர வேண்டுமென்றே அரசு காலங்கடத்தியது.

இரண்டு தடவைகள் ஜெனிவாவில் மனித உரிமைகள் சபையால் விடுக்கப்பட்ட நல்எண்ணத்தீர்மானங்களை இறைமையின் பெயரால் நிராகரித்தது.

இவ்வளவுக்கும் பின்னர்தான் வட மாகாணசபை போர்க்குற்ற விசாரணை ஒன்றைக் கோரும் தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கிறது. இது சிலர் வியாக்கியானம் செய்வதுபோல் வெறுமனே வடமாகாணசபை உறுப்பினர்களின் தீர்மானமல்ல.

வடக்குத் தமிழர்களின் தீர்மானமுமல்ல. வடக்கு,கிழக்குத் தமிழர்கள் அத்தனை பேரினதும் உள்ளக் குமுறல்களை வெளிப்படுத்தி நிற்கின்ற தீர்மானம். இலங்கை அரசை நம்புவதற்கான நியாயங்கள் துளிகூட கிடையாது என்று முடிவெடுத்த தமிழர்களின் தீர்மானம். இந்தத் தீர்மானம் தொடர்பாகக் குறைகூறுவதற்கு எந்தச் சிங்கள அரசியல் வாதிக்கும் தகுதி இல்லை.

SHARE