இலங்கை தனிச் சிங்கள நாடு எனில், தமிழரைப் பிரிந்து செல்லவிடுங்கள்: -சுமந்திரன் ஆவேசம்

259

 

இந்த நாடு தனிச் சிங்கள நாடாக இருக்க வேண்டுமாயின் எங்களைத் (தமிழரை) தனியே விட்டு விடுங்கள். நாங்கள் சிங்களவர்கள் அல்லர், நாங்கள் சிங்கள இராஜ்ஜியத்திற்குரியவர்கள் அல்லர்.

hqdefault

நாங்கள் தமிழர்கள். எமக்குச் சொந்த மரபுரிமை உள்ளது. சிங்கள மக்கள் மட்டும் இறைமையை அனுபவிக்க வேண்டும் என்றால் நாங்கள் பிரிந்து செல்ல வேண்டும் என்று நீங்கள்தான் கூறுகின்றீர்கள்.

இலங்கை சிங்கள தேசம் என்றும் நீங்கள்தான் கூறுகின்றீகள். எம்மைப் பிரிந்து போகுமாறும் நீங்கள்தான் கூறுகின்றீர்கள்.

இவ்வாறு ஆவேசமாகத் தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன்.

ஐ.நா. தீர்மானம் உங்களுடையது! நீங்கள் அதற்குச் சொந்தக்காரர்கள். எனவே, அதை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இலங்கை விவகாரம் தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் சம்பந்தமாக நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:

இலங்கை அரசின் இணை அனுசரணையுடன் ஐ.நா. மனித உரிமைகள் பேரøவயில் தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

இது உங்களுடைய தீர்மானம். இதற்கு நீங்கள்தான் முழுச் சொந்தக்காரர். உங்களது இந்த முயற்சிக்கு நாங்கள் பாராட்டுகின்றோம்.

தமது அரசின் மீது நம்பிக்கை வைக்குமாறு ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர குறிப்பிட்டிருந்தார்.

இந்த விடயத்தில் பேச்சளவில் மட்டும் நின்றுவிடாது, அதை செயற்படுத்த வேண்டும். உங்கள் செயற்பாடுகளை மக்கள் காணவேண்டும்.

அவர்கள் இதை அனுபவிக்க வேண்டும். இந்தத் தீர்மானம் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும். இங்கு இறைமைபற்றி குறிப்பிடப்பட்டது.

இறைமை என்பது ஒரு மக்கள் சமூகம் தம்மைத் தாமே ஆள்வதாகும். இங்கு ஒரு தரப்பினர் மட்டுமே இறைமையை அனுபவிக்கின்றனர்.

இதை ஏற்றுக்கொள்ள முடியாது. பல தரப்பினர் இருக்கும் நாட்டில் அனைவரும் இறைமையை அனுபவிக்க வேண்டும். அதிக எண்ணிக்கை கொண்ட ஒரு தரப்பினர் மட்டும் இறைமையை அனுபவிக்க முடியாது.

அரசு உண்மையில் நல்லிணக்கம் தொடர்பில் அக்கறை காட்டினால் பொறுப்புக் கூறல் தொடர்பில் உண்மைத் தன்மையை வெளிபடுத்த வேண்டும்.

ஐ.நா. தீர்மானத்துக்கு அமைய இடம்பெறும் விசாரணைப் பொறிமுறையில் பொதுநலவாய, வெளிநாட்டு நீதிபதிகள், விசாரணையாளர்கள், சட்டத்தரணிகள் உள்வாங்கப்பட வேண்டும்.

அவர்களது பங்களிப்பு அந்த மட்டத்தில் உள்வாங்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் தொழிநுட்ப உதவி என்றால் தொழிநுட்ப உதவியென்று குறிப்பிட வேண்டும்.

இதை தொகுதியாகப் பிரிக்கத் தேவையில்லை. நீதிபதி நீதிபதியின் நடவடிக்கையையும், விசாரணையாளர் விசாரணை நடவடிக்கையையும், சட்டத்தரணிகள் தமது நடவடிக்கையையும் செய்து பங்களிப்பு செய்ய வேண்டும்.

இந்த விடயத்தில் நாம் அக்கறையுடன் இருக்கின்றோம். இந்தப் பொறிமுறை முக்கியத்துவமிக்கதாய் இல்லாவிட்டால் அதில் தோற்றுப்போனதாக அமைந்துவிடும்.

பரணகம ஆணைக்குழுவில் தமிழ் மக்களுக்குத் துளியளவும் நம்பிக்கை இல்லை. இவ்வாறு நம்பிக்கையற்ற ஆணைக்குழுவே போர்க்குற்றம் இடம்பெற்றதாகக் கூறுகின்றது.

அப்படியாயின் அதன் உண்மைத் தன்மை என்ன? சனல் 4 காணொளி குறித்து குறிப்பிட்டுள்ள இந்த ஆணைக்குழு அது தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்த வேண்டும் என்றும் கூறுகின்றது.

வெள்ளைக் கொடியுடன் சரணடைந்தோர், காணாமல் போனோர் குறித்தும் குறிப்பிடுகின்றது. இந்நிலையில்,

தற்போது ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இணைந்து ஆட்சி அமைத்துள்ள அரசு வெளிப்படையாக, நேர்மையாக பாதிக்கப்பட்ட தரப்பினருக்குத் திருப்தியை ஏற்படுத்தும் வகையில் இதைத் தீர்க்க வேண்டும்.

இந்த விடயத்தில் மறைத்து, ஒழித்து செயற்படாமல் வெளிப்படையாகச் செயற்பட வேண்டும்.

ஐ.நா. தீர்மானத்தை அமுல்படுத்துவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது முழுமையான ஆதரவை வழங்கத் தயாராக உள்ளது.

இந்தப் பயணத்தில் உங்களுடன் (அரசுடன்) கைகோத்து செயற்படத் தயார். இனவாதிகளின் குரலுக்கு செவிசாய்க்காமல், இந்த விடயத்தில் நீங்கள் உறுதியாக இருந்து பிரச்சினையைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

SHARE