இலங்கை திரும்ப தமிழக அகதிகள் தயக்கம்! காரணம் என்ன?

233

201505140112008282_tamils-in-sri-lanka-by-plane-and-took-54-people_secvpf

தமிழர்கள் மீதான இராணுவ அத்துமீறல் தொடர்வதால் உயிருக்கு பயந்து இலங்கை திரும்ப தமிழகத்தில் உள்ள முகாம் அகதிகள் தயங்குகின்றனர் என இந்திய ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், இராணுவத்துக்கும் இடையே நடந்த போரின் போது ஏராளமான தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர்.

உயிருக்கு பயந்த தமிழர்கள் பலர் குடும்பத்துடன் அங்கிருந்து வெளியேறி தமிழகம் உள்பட இந்தியாவிற்குட்பட்ட பல மாநிலங்களில் அகதிகளாக தஞ்சம் அடைந்தனர்.

இவர்களுக்காக தமிழகத்தில் 114 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. இவற்றில் ஒரு லட்சத்திற்கு மேலான அகதிகள் தங்கியுள்ளனர்.

இலங்கையில் தற்போது அமைதி திரும்பினாலும், தமிழர்கள் மீதான அந்நாட்டு இராணுவத்தினரின் தாக்குதல் தொடர்கிறது.

இந்நிலையில் இலங்கை அதிபராக 2014ல் சிறிசேன பதவியேற்றதும், இலங்கை செல்ல விரும்பும் அகதிகள் குறித்த பட்டியலை மத்திய அரசு சேகரித்தது.

இதில் இராமேஸ்வரம் அருகே மண்டபம் முகாமில் தங்கியுள்ள 1,986 அகதிகளில் 96 பேர் விருப்பம் தெரிவித்து மனு கொடுத்தனர். ஆனால் 46 பேர் மட்டுமே இலங்கை திரும்பியுள்ளனர்.

இலங்கையில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டும், தமிழர்கள் மீதான அந்நாட்டு இராணுவத்தினரின் தாக்குதல் தொடர்வதால் உயிருக்கு பயந்து தாயகம் திரும்ப அகதிகள் தயங்கிவருகின்றனர்.

இதற்கிடையே தமிழகத்தில் தங்கியுள்ள அகதிகளுக்கு குடியுரிமை வழங்கப்படும் என முதல்வர் ஜெ., அறிவித்தார்.

இந்த அறிவிப்பு காலதாமதமானாலும் நிறைவேறும் என்ற நம்பிக்கையால் அகதிகள் பலர் தமிழகத்தில் தங்க விரும்புகின்றனர்.

இது குறித்து மண்டபம் முகாம் அகதிகள் கூறுகையில்,

இலங்கையில் தமிழ் இளைஞர்கள், இளம்பெண்கள் மீதான அந்நாட்டு இராணுவத்தினரின் தாக்குதல் தொடர்கிறது.

அங்கு தமிழர்கள் சுதந்திரமாக நடமாட முடியவில்லை.

இலங்கை அரசு அழைக்காமல் சென்றால், அங்கு எங்களுக்கு நிம்மதியான வாழ்வு கிடைக்காது.

இந்தியா, இலங்கை அகதிகள் மறுவாழ்வு திட்டத்தை ஏற்படுத்தினால் இலங்கை செல்ல தயாராக உள்ளோம் என்றனர்.

SHARE