இலங்கை தேசிய கபடி அணியில் முதன்முதலாக ஒரு தமிழன்

202

மட்டக்களப்பு மாவட்டத்தின் சிரேஷ்ட கபடி வீரர்களில் ஒருவரும், முன்னணி கபடி பயிற்றுவிப்பாளருமாக துரைச்சாமி மதன்சிங், 3வது ஆசிய கபடி (Circle Kabbadi) போட்டிகளில் பங்குபற்றும் இலங்கைக்கான கபடி அணியில் தேர்வு செய்யப்பட்டு சாதனை படைத்துள்ளார்.

2016ம் ஆண்டிற்கான ஆசிய circle கபடி சுற்றுப் போட்டியானது இந்த மாதம் 2ம் திகதி தொடக்கம் 9ம் திகதி வரை பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் கோலாகலமாக ஆரம்பமாகியுள்ளது.

இந்த நிலையில் குறித்த சுற்றுப் போட்டியில் பங்குகொள்ளும் இலங்கை அணியானது ஞாயிற்றுக்கிழமை இலங்கையிலிருந்து புறப்பட்டு சென்றுள்ளது.

அந்த வகையில் குறித்த கபடிப் போட்டியில் இடம்பிடித்துள்ள ஒரே ஒரு தமிழ் வீரரும் எமது மண்ணைச் சேர்ந்தவரும் என்ற பெருமையை துரைச்சாமி மதன்சிங் பெற்றுள்ளார்.

ரி.மதன்சிங் தனது முதலாவது ஆசிய circle கபடி போட்டியில் இலங்கை சார்பாக பங்கு கொண்டதுடன், அப்போட்டித் தொடரில் இலங்கை அணி 3ம் இடத்தை சுவீகரித்தமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

அத்துடன் சாண்டோ சங்கரதாஸ் விளையாட்டுக் கழகத்தின் மல்யுத்த வீரரான இவர் மல்யுத்த போட்டிகளிலும் தேசிய அளவில் பதக்கங்களை சுவீகரித்து மட்டக்களப்பு மண்ணிற்கும், கிழக்கு மாகாணத்திற்கும் தமிழ் பேசும் மக்களிற்கும் பெருமை தேடித் தந்தவருமாவார்.

தனது வாழ்நாளின் பெரும் பகுதியை விளையாட்டிற்காக அர்ப்பணித்துள்ள இவர், இப்போட்டிகளில் பிரகாசித்து அணிக்கும், நாட்டிற்கும், மண்ணிற்கும் பெருமை சேர்க்க மட்டக்களப்பு தமிழ்பேசும் மக்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்கள்.

SHARE