நோர்வேயிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சி.சிவமோகன் அவர்கள் தினப்புயல் இணையத்தளத்திற்கு வழங்கிய கருத்து.
நோர்வே நாட்டின் ஒஸ்லோ தலைநகரிற்கு இலங்கையின் 15பேர் அடங்கிய பாராளுமன்றக்குழு நேற்று முன்தினம் விஜயம் ஒன்றினை மேற்கொண்டது. அந்நாட்டின் அரச இராஜதந்திரிகளுடன் கலந்துரையாடி இலங்கைக்கான தீர்வுத்திட்டங்களை எந்தவகையில் பெறமுடியும் என்றும் அந்நாட்டின் அரசியல் நகர்வுகள் குறித்து ஆராயும் நோக்கோடு இந்தக்குழு நோர்வே புறப்பட்டுச் சென்றது. இவ் விஜயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சி.சிவமோகன் அவர்களும் சென்றிருந்ததுடன் அந்நாட்டு சிட்டி கவுன்சிலின் பிரதி மேயரான ஹம்சாயினி அவர்களைச் சந்தித்து இலங்கையின் தற்போதைய பிரச்சினைகள் பற்றியும் வைத்திய கலாநிதி சி.சிவமோகன் அவர்கள் எடுத்துரைத்தார். மேலும் இவ்விடயங்கள் தொடர்பில் நோர்வே அரசுடன் பேசுவதாகவும் பிரதி மேயர் உறுதியளித்ததுடன் இவர் இந்நாட்டில் யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்த காலத்தில் நோர்வே நாட்டிற்குச் சென்று அங்குள்ள மக்களின் செல்வாக்கைப் பெற்று பிரதி மேயராக தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்பது தமிழ் மக்கள் பெருமையடையக்கூடிய விடயம்.
இச்சந்திப்பினைத் தொடர்ந்து வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சினைச் சேர்ந்த லீசா கோல்டன், மெக்னஸ் லொரிங்டன்ஸ் ஆகிய இரு இராஜதந்திரிகளைச் சந்தித்தோம். இவர்கள் இருவருடனும் கலந்துரையாடி இலங்கையின் தற்போதைய பிரச்சினைகள் தொடர்பாக தெளிவாக சில விடயங்களை அவர்களுக்குத் தெளிவுபடுத்தியிருக்கிறேன். யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற போது இவ்விவகாரங்களுக்கு பொறுப்பாக செயற்பட்டவர்கள் இவ்விருவரும். ஆகவே யுத்தத்தின் தன்மை பற்றியும் அதனது தாக்கம் பற்றியும் இவர்களுக்கு நன்கு தெரியும். இருப்பினும் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் எடுத்துரைத்தேன். தற்போது இலங்கை பாராளுமன்றில் அரசியல் யாப்பு மாற்றத்திற்கான நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 1948க்குப் பிறகு முதன் முதல் பிரதான இரண்டு கட்சிகள் இணைந்து ஆட்சி அமைத்ததும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்க்கட்சியாகவும் வந்திருக்கிறது. இவ்வாறு இணைந்து செயற்படுவது என்பது இதுவே முதல் சந்தர்ப்பம் என்பதையும் இவ்விடத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். எனவே மீண்டும் இவ் அரசியல் யாப்பு விவகாரம் தொடர்பில் நோர்வே நாட்டின் தலையீட்டுடன் இணைந்து செயற்படுத்தவேண்டும் எனவும் இச்சந்திப்பானது ஒரு நம்பிக்கைத் தன்மையை ஏற்படுத்தியிருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.