இலங்கை போர் குற்றத்திற்கு ராஜபக்சே பொறுப்பேற்க வேண்டும் : எரிக் சோல்ஹெயிம் பேட்டி

275

 

 

இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் இடையே சமரசப் பேச்சுவார்த்தை மூலம் அங்கு நடைபெற்று வந்த உள்நாட்டுப் போருக்கு முடிவு கட்ட சுமார் 10 ஆண்டுகளாக சமாதானத் தூதுவராக செயல்பட்டவர், நோர்வே நாட்டின் முன்னாள் அமைச்சர் எரிக் சோல்ஹெயிம்
புதிய தலைமுறைத் தொலைக்காட்சிக்கு பிரத்யேகமாக அவர் அளித்த பேட்டி

 

சமீபத்தில் ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானம் பற்றி உங்கள் கருத்து என்ன ?

 

இது,இலங்கைக்கு சாதகமான நடவடிக்கை என நான் நம்புகிறேன்.அந்தத் தீர்மானத்தை அவர்கள் நிறைவேற்ற வேண்டியது அவசியம்.ஏனென்றால் இதற்கு முன்பு அமைக்கப்பட்ட கமிஷன்கள்,தீர்மானங்கள் நிறைவேற்றப்படாததால்,மக்களிடையே அவநம்பிக்கை உள்ளது.ஆகவே இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அது ஆக்கபூர்வமான மாற்றமாக இருக்கும்.
இந்தத் தீர்மானம் இலங்கை தமிழர்களின் வாழ்க்கையில் மாற்றத்தைக் கொண்டு வருமா ? அவர்களுக்கு நீதி கிடைக்குமா ?

 

இந்தத் தீர்மானத்தால் மட்டும்,இலங்கையின் எல்லாப் பிரச்னைகளையும் தீர்த்து விட முடியாது.வடக்கு,கிழக்கு மாகாணங்களில் தமிழர்களுக்கு சுயாட்சியை ஏற்படுத்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பும்,இலங்கை அரசும் பேச்சு நடத்த வேண்டும்.அதே நேரத்தில் பொருளாதார மற்றும் சமூக மேம்பாட்டுக்கான தேவைகளையும் கவனிக்க வேண்டும்.
தற்போது இலங்கையில் நல்லிணக்கம்,அமைதி இவைகளைப் பற்றி மாத்திரமே பேசப்பட்டு வருகிறது.அப்படியானால்,அங்கு தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட போர்க் குற்றங்களுக்கு யார் பொறுப்பு?

 

இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்களுக்கு இரண்டு தரப்பு பொறுப்பேற்க வேண்டும்.ஒன்று ராஜபக்சே அரசு, இந்தப் பிரச்னையை ராணுவ ரீதியாக கையாண்டதற்கு அவர்கள் தான் காரணம்.அடுத்து தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன்.தற்போது பிரபாகரனும் பல விடுதலைப் புலி உறுப்பினர்களும் இறந்து விட்டார்கள். எனவே தற்போது இந்தப் போர்க் குற்றங்களுக்கு ராஜபசே சகோதரர்கள் பொறுப்பேற்க வேண்டும்.அவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும்.அங்கு நடைபெற்ற மிக மோசமான போரினால், பொருளாதாரத்தில் உச்சத்தில் இருந்த பல தமிழர்கள் ஏழைகளாக மாறியிருக்கிறார்கள்.பல பெண்கள் தங்கள் கணவன்மாரை இழந்துள்ளார்கள்.அவர்களுக்கு எல்லாம் நிச்சயம் நீதி கிடைக்க வேண்டும்.

கடந்த தடவை இலங்கை அரசுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்த அமேரிக்கா,இந்த தடவை அதை நீர்த்துப் போக செய்ததாக நீங்கள் கருதவில்லையா?

 

தற்போது இலங்கையில் ஏற்பட்டிருக்கும் அரசியல் மாற்றத்தில் அமேரிக்கா, இந்தியா போன்ற பல நாடுகளுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.அதனால் தான் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாட்டை அமேரிக்கா கொண்டு வந்ததாக நான் கருதுகிறேன்,ஆனாலும் அமேரிக்கா கொண்டு வந்த தீர்மானம் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறதா என்பதை இந்தியா மற்றும் அமேரிக்கா போன்ற நாடுகள் கண்காணிக்க வேண்டும்.

 

 

கடந்த 10 ஆண்டுகளாக இலங்கையின் சமாதான தூதுவராக நீங்கள் பணியாற்றியுள்ளீர்கள் . ராஜபக்சே அரசின் போர் தந்திரங்கள் பற்றி உங்களுக்கு நன்றாகத் தெரிந்திருக்கும்.இந்த நிலையில் அங்கு நடைபெற்ற இன அழிப்பிற்கு யாரை குற்றம் சாட்டுவீர்கள்?
பிரதான குற்றம் ராஜபக்சே அவரது சகோதர்கள் மற்றும் அவரது அரசில் இருந்த சில தலைவர்களும் தான் காரணம் என்பதை மறுக்க முடியாது.போரை நிறுத்துவதற்கு ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டது.ஆனாலும் அதை ஏற்க இலங்கை அரசு மறுத்துவிட்டது.அப்படி போர் நிறுத்தம் ஏற்பட்டிருந்தால் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களும் விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்களும் காப்பாற்றப் பட்டிருப்பார்கள்.
சர்வதேச நீதிபதிகளை விசாரணைக் குழுவில் அனுமதிக்காவிட்டால் , இலங்கையை தண்டிக்க வேண்டுமா ?

அமேரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் கொண்டு வந்த தீர்மானத்தை இலங்கை அரசு நடைமுறைப் படுத்தவில்லையாயின், சர்வதேச மனித உரிமை சங்கம் கடுமையான நடவடிக்கையை இலங்கை அரசு மீது எடுக்க வேண்டும்

 

 

போர் நேரத்தில்,இந்தியாவின் பங்களிப்பை எப்படி பார்க்குறீர்கள் ?

போர் முடிவதற்கு சில மாதங்கள் முன்னர் வரை, ராணுவ ரீதியாக இலங்கை பிரச்னைக்கு தீர்வு காண முடியாது என கூறி வந்த இந்தியா, அமைதி பேச்சுவார்த்தைக்கு ஆதரவு அளித்து வந்தது.ஆனாலும்,போரில் இலங்கை அரசு வெல்லப்போகிறது என தெரிந்ததும் அவர்கள் விடுதலை புலிகளுக்காக ஒரு சொட்டு கண்ணீரைக் கூட சிந்தவில்லை.

 

 

இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணை மேற்கொள்ளப் பட வேண்டும் என தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.ஆனாலும் அதை இந்திய மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை.7 கோடி தமிழர்களின் உணர்வுகளை புறக்கணிப்பது சரியான நடவடிக்கையா ?

இந்தியாவின் உள்நாட்டு விடயத்தில் தலையிட நான் விரும்பவில்லை.ஆயினும் வெளியில் இருந்து பார்க்கும் போது தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா மற்றும் மோடி ஆகியோர் கூட்டாச்சி முறையில் இலங்கை பிரச்னைக்கு தீர்வு காண தங்களுக்குரிய வழிகளில் ஆக்கபூர்வமாக ஊக்குவிக்கிறார்கள் என நினைக்கிறேன்.
அடுத்த 5 ஆண்டுகள் தமிழர்களுக்கு எவ்வாறு இருக்கும் என நீங்கள் நினைக்கிறீர்கள் ?

அடுத்த 5 ஆண்டுகள் தமிழர்களுக்கு முக்கியமானவை.படித்த அதிகம் திறன் படைத்த தமிழர்கள் நாட்டை விட்டு வெளியேறிவிட்டார்கள்.மிஞ்சியிருந்த தமிழர்கள் பாலியல் கொடுமை, சித்திரவதைகளால் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.எனவே அதிகாரப் பகிர்வின் மூலம் வட கிழக்கு பகுதிகளை தெற்காசியாவிலேயே சிறந்த பகுதிகளாக மாற்ற வேண்டிய கடமை தமிழர்களுக்கு உண்டு

SHARE