இலங்கை முஸ்­லிம்­க­ளுக்கு அர­சியல் அடை­யா­ளத்­தினை பெற்­றுக்­கொ­டுத்த மாபெரும் அர­சியல் தலைவர் அஷ்ரப் சஹீ­தாகி 

220

இலங்கை முஸ்­லிம்­க­ளுக்கு அர­சியல் அடை­யா­ளத்­தினை பெற்­றுக்­கொ­டுத்த மாபெரும் அர­சியல் தலைவர் அஷ்ரப் சஹீ­தாகி

இலங்கை சுதந்­திரம் அடைந்­த­தற்கு பின்பு இந்­நாட்டில் இரண்டு தேசிய இனங்கள் வாழ்­கின்­றன. என்றே நம்­பப்­பட்­டது. இந்­நாட்டின் முழு அதி­கா­ரங்­களும் பெரும்­பான்மை சிங்­க­ள­வர்­க­ளிடம் இருக்­கின்ற நிலையில், பன்­னி­ரண்டு சத­வீ­த­மான சிறு­பான்மை தமி­ழர்கள் தங்­க­ளது அர­சியல் உரி­மையை கோரி போராட்­டங்­களை முன்­னெ­டுத்­தார்கள்.

எட்டு சத­வீ­த­மாக வாழ்ந்த இன்­னு­மொரு சிறு­பான்மை இன­மான முஸ்­லிம்கள் ஒரு தனித்­துவ சமய, கலாச்­சார பாரம்­ப­ரி­யங்­களை கொண்ட ஒரு தேசிய இனம் என்ற உண்மை இவ்­வு­ல­கத்­துக்கு மறைக்­கப்­பட்­டி­ருந்­தது. இந்­நாட்டு முஸ்லிம் மக்கள் சிங்­கள, தமிழ் கட்­சி­க­ளிலும், தமி­ழீழ ஆயுத இயக்­கங்­க­ளிலும் இணைந்­து­கொண்டு அக்­கட்­சி­க­ளி­னதும், இயக்­கங்­க­ளி­னதும் கொள்­கை­களில் ஈர்க்­கப்­பட்டு தங்­க­ளது தனித்­துவ அர­சியல் அடை­யா­ளத்­தினை இழந்­த­வர்­க­ளாக காணப்­பட்­டார்கள்.

ஆளும் சிங்­கள தேசிய கட்­சி­களில் அமைச்­சர்­க­ளாக இருப்­ப­வர்­களே முஸ்லிம் மக்­களின் தலை­வர்கள் என்ற நிலை அப்­போது காணப்­பட்­டது. முஸ்லிம் மக்­க­ளுக்கு பிரச்­சி­னைகள் ஏற்­பட்­ட­போது தனது இனத்­துக்­காக குரல் கொடுக்க முடி­யா­த­வர்­க­ளாக அந்த முஸ்லிம் தலை­வர்கள் காணப்­பட்­டார்கள்.

எம்.எச்.எம். அஷ்ரப், முஹம்மத் ஹுசைன், மதீனா உம்மாஹ் தம்­ப­தி­யின் புதல்வனாக 1948.10.23  ஆம் திகதி சம்­மாந்­து­றையில் பிறந்தார். இவ­ருக்கு மூன்று சகோ­த­ரிகள் உண்டு. தனது இள­மைப்­ப­ரு­வத்தில் கல்­மு­னை­கு­டியில் வளர்ந்­தாலும் இவர் அதி­க­மாக பழ­கிய ஊர் சாய்ந்­த­ம­ரு­தாகும். கம்பளையைச் சேர்ந்த பேரியல் இஸ்­மாயில் என்­ப­வரை திரு­மணம் செய்தார். இவ­ருக்கு அமான் என்னும் ஆண் மகன் உண்டு. திரு­ம­ணத்­துக்கு பின்பு கல்­முனை அம்மன் கோவில் வீதியில் தமி­ழர்­களின் எல்லை பிர­தே­சத்­தி­லேயே வாழ்ந்து வந்தார். தமிழ் – முஸ்லிம் இனக்­க­ல­வரம் ஏற்­பட்­ட­போது இவ­ரது வீடு தீக்­கி­ரை­யாக்­கப்­பட்­டது.

தனது ஆரம்ப கல்­வியை கல்­மு­னைக்­குடி அல் அஸ்ஹர் வித்­தி­யா­ல­யத்­திலும், பின்பு கல்­முனை பாத்­திமா கல்­லூரி, கல்­முனை வெஸ்லி உயர் பாட­சாலை, மற்றும் கொழும்பு அலெக்ஸ்­சாண்­டி­ரியா கல்­லூ­ரி­யிலும் கல்வி பயின்றார். பின்பு சட்டக் கல்­லூ­ரிக்கு தெரி­வான எம்.எச்.எம். அஷ்ரப் 1975 ஆம் ஆண்டு அரச சட்­டத்­த­ர­ணி­யாக நிய­மனம் பெற்றார்.

அடக்கி ஒடுக்­கப்­பட்ட ஒரு சிறு­பான்மை இனம் அர­சியல் உரி­மை­யினை பெற்று சுதந்­தி­ரக்­காற்றை சுவா­சிக்க வேண்டும் என்ற அடிப்­படை உணர்­வினை கொண்­டி­ருந்த சட்­டத்­த­ரணி அஷ்ரப் தனது ஆரம்­ப­கால அர­சி­யலை தமிழர் விடு­தலை கூட்­ட­ணி­யி­லி­ருந்து ஆரம்­பித்தார்.
சட்­டத்­த­ரணி அஷ்ரப் நினைத்­தி­ருந்தால் சிங்­கள தேசிய காட்­சி­களில் இணைந்­து­கொண்டு அவர்­களின் சலு­கை­களை பெற்று சுக­போக வாழ்­வினை மேற்­கொண்­டி­ருக்­கலாம்.

ஆனால் அடக்­கப்­பட்­டதும், ஒரே தமிழ் மொழியை பேசு­கின்ற ஒரு சிறு­பான்மை இனத்­தினை பிர­தி­நி­தித்­துவம் செய்­கின்ற கட்­சி­யுடன் சேர்ந்து பய­ணிப்­பதன் மூலம் தமி­ழர்­க­ளுக்கு கிடைக்­கின்ற அதே அர­சியல் உரி­மை­யினை இன்­னு­மொரு சிறு­பான்மை இன­மான முஸ்லிம் மக்­க­ளுக்கும் பெற்­றுக்­கொ­டுக்க முடியும் என்று நம்­பினார்.

தமிழர் விடு­தலை கூட்­ட­ணியின் உயர்­பீட உறுப்­பி­ன­ராக இருந்த சட்­டத்­த­ரணி அஷ்ரப் “அண்ணன் அமிர்­த­லிங்­கத்­தினால் தமிழ் ஈழத்­தினை பெற்­றுத்­த­ரா­விட்டால் இந்த அஷ்ரப் ஆகிய நான் அதனை பெற்­றுத்­த­ருவேன்” என்று மேடை மேடை­யாக முழங்­கினார்.

இந்த நிலையில் 1981 ஆம் ஆண்டு மாவட்­ட­சபை தேர்தல் அறி­விப்பு செய்­யப்­பட்­டி­ருந்­தது. அந்த தேர்­தலில் முஸ்­லிம்­க­ளுக்­காக சில விட்­டுக்­கொ­டுப்­புக்­களை கோரி­யி­ருந்­தனர். அதா­வது முஸ்லிம் மக்கள் அதி­க­மாக வாழும் அம்­பாறை மாவட்­டத்தில், இந்த மாவட்­ட­சபை தேர்­த­லுக்­கான முதன்மை வேற்­பா­ள­ராக ஒரு முஸ்­லிமை நிய­மிக்­கு­மாறு முஸ்லிம் ஐக்­கிய முன்­னணி சார்­பாக தமிழர் விடு­தலை கூட்­ட­ணி­யிடம் வேண்­டுகோள் விடுக்­கப்­பட்­டது.

ஆனால் அந்த வேண்­டு­கோள்கள் நிரா­க­ரிக்­கப்­பட்டு முஸ்லிம் மக்கள் பெரும்­பான்­மை­யாக வாழும் அம்­பாறை மாவட்­டத்தில் தமிழர் ஒரு­வரே முதன்மை வேட்­பா­ள­ராக நிய­மிக்­கப்­பட்டார். தமிழர் விடு­தலை கூட்­ட­ணியின் இந்த ஒரு­த­லை­பட்ச செயற்­பாடு அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யது. அவர்­களின் நீதி­யற்ற செயற்­பாட்­டினால் சட்­டத்­த­ரணி அஷ்ரப் விரக்­தி­ய­டைந்தார்
.
தமிழர் விடு­தலை கூட்­ட­ணியில் அர­சியல் பய­ணத்­தினை மேற்­கொண்­டாலும் முஸ்­லிம்­களின் தனித்­து­வத்­தினை எந்த சந்­தர்ப்­பத்­திலும் சட்­டத்­த­ரணி அஷ்ரப் விட்­டுக்­கொ­டுத்­த­தில்லை. அன்­றைய சில முஸ்லிம் அர­சியல் பிர­மு­கர்­க­ளுடன் சேர்ந்து முஸ்லிம் ஐக்­கிய முன்­ன­ணியில் சட்­டத்­த­ரணி அஷ்ரப் அவர்கள் முஸ்­லிம்­களின் தனித்­துவ அர­சி­யலை முன்­னெ­டுக்க முற்­பட்டார்.

ஆனால் தன்­னுடன் முஸ்லிம் ஐக்­கிய முன்­ன­ணியில் பய­ணித்த அனை­வரும் சிறி­மாவோ பண்­டா­ர­நா­யக்க தலை­மை­யி­லான ஸ்ரீ லங்கா சுதந்­திர கட்­சியில் சங்­க­மித்­தார்கள். அவர்­க­ளது கொள்­கைகள் அனைத்தும் பத­வி­க­ளுக்­காக தடம்­பு­ரண்­டன.

இந்­நி­லை­யி­லேயே தனது சமூ­கத்தின் தனித்­து­வத்­தினை உறு­தி­யாக பேணும் பொருட்டு சட்­டத்­த­ரணி எம்.எச்.எம். அஷ்ரப் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கிரஸ் என்னும் அர­சியல் இயக்­கத்­தினை 1981.09.21 ஆம் திகதி  காத்­தான்­குடி பிர­தான வீதி­யி­லுள்ள பாலர் பாட­சாலை மண்­ட­பத்தில் வைத்து ஆரம்­பித்தார்.

இருந்தும் அப்­பொ­ழுது இக்­கட்சி முஸ்லிம் மக்கள் மத்­தியில் அதிக வர­வேற்பை பெற்று இருக்­க­வில்லை. விரல் விட்டு எண்­ணக்­கூ­டி­ய­வர்­களே கூட்­டத்­துக்கும் சமு­க­ம­ளித்­தார்கள்.

1987 ஆம் ஆண்டு இலங்கை – இந்­திய ஒப்­பந்தம் மூலம் வடக்கும் கிழக்கும் ஒரே­மா­கா­ண­மாக இணைக்­கப்­பட்­ட­போது, இம்­மா­கா­ணங்­களில் செறி­வாக வாழ்ந்த முஸ்லிம் மக்கள் அர­சியல் அனா­தை­யாக்­கப்­பட்­டி­ருந்­தார்கள்.

இந்த சூழ்­நி­லை­யி­லேயே முஸ்லிம் காங்­கி­ரசின் செயற்­பாட்­டினை அதன் தலைவர் சட்­டத்­த­ரணி எம்.எச்.எம். அஷ்ரப் தீவி­ரப்­ப­டுத்தி 1988.02.11 ஆம் திகதி ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கி­ர­சினை ஒரு அர­சியல் கட்­சி­யாக தேர்தல் திணைக்­க­ளத்தில் பதிவு செய்தார்.

முஸ்லிம் காங்­கிரஸ் வட­கி­ழக்கு மாகா­ண­சபை தேர்­தலில் விடு­தலை புலி­களின் அச்­சு­றுத்­தல்­க­ளுக்கு மத்­தியில் தனித்து போட்­டி­யிட்டு 168,038 வாக்­குகள் பெற்­ற­துடன் பதி­னேழு மாகா­ண­சபை உறுப்­பி­னர்­களை முஸ்லிம் காங்­கிரஸ் பெற்­றி­ருந்­தது.

அதா­வது முஸ்லிம் மக்கள் முஸ்லிம் காங்­கி­ர­சுக்கு அங்­கீ­கா­ரமும், ஆணையும் வழங்­கி­ய­துடன், சட்­டத்­த­ரணி அஷ்ரப் முஸ்­லிம்­களின் தலை­வ­ராக ஏற்­றுக்­கொண்­டார்கள்.

அதன் பிர­தி­ப­லிப்­பாக பிர­தமர் ஆர். பிரே­ம­தாசா தலைவர் அஷ்ரப் அழைத்து ஜனா­தி­பதி தேர்­தலில் தனக்கு ஆத­ர­வ­ளிக்­கும்­படி வேண்­டுகோள் விடுத்தார். சந்­தர்ப்­பத்­தினை பயன்­ப­டுத்­திக்­கொண்ட தலைவர் அஷ்ரப் பிரே­ம­தா­சா­விடம் நிபந்­தனை விதித்தார்.

அதா­வது அர­சியல் யாப்பில் இருக்கும் முஸ்லிம் சமூ­கத்­தினை பாதிக்­கின்ற தேர்தல் விகி­தா­சார முறையில் பன்­னிரண்டரை சத­வீ­த­மாக இருந்த வெட்­டுப்­புள்­ளியை ஐந்து சத­வீ­த­மாக குறைக்க செய்­யு­மாறு கோரப்­பட்­டதே அந்த நிபந்­த­னை­யாகும். பாரா­ளு­மன்றம் கலைக்­கப்­ப­டு­வ­தற்கு பத்து நாட்­களே இருந்த நிலையில் தலைவர் அஷ்ரப்பின் வேண்­டுகோள் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்டு ஜே.ஆர் தலை­மை­யி­லான அர­சாங்­கத்தின் மூன்றில் இரண்டு பெரும்­பான்மை ஆத­ர­வுடன் பாரா­ளு­மன்­றத்தில் சட்­ட­மூலம் நிறை­வேற்­றப்­பட்­டது.

தலைவர் அஷ்ரப் இந்த தீர்க்­க­த­ரி­ச­ன­மான செயற்­பாட்டின் மூலம் சிறு­பான்மை சமூக கட்­சிகள் மட்­டு­மல்ல, பெரும்­பான்மை சமூ­கத்தின் சிறிய கட்­சிகள் கூட பாரா­ளு­மன்றம் செல்­லக்­கூ­டிய வாய்ப்பு வழங்­கப்­பட்­டது.

1989ஆம் ஆண்டு நடை­பெற்ற பொது தேர்­தலில் முஸ்லிம் காங்­கிரஸ் முதன்­மு­த­லாக பொதுத்­தேர்தல் ஒன்றில் போட்­டி­யிட்டு நாடு முழு­வ­தி­லு­மி­ருந்து 202,016 வாக்­கு­களை பெற்று நான்கு பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களை பெற்று பாரா­ளு­மன்றம் சென்­றது. தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் அம்­பாறை மாவட்­டத்தில் போட்­டி­யிட்டு முதல்­மு­த­லாக பாரா­ளு­மன்றம் சென்றார்.

அத்­தேர்­தலில் அம்­பாறை மாவட்­டத்தில் மூன்று பாரா­ளு­மன்ற பிர­தி­நி­தித்­துவம் என்ற தலைவர் அஷ்ரப் இலக்கை அடைய முடி­யா­தது ஓர் அதிர்ச்­சி­யான விட­ய­மாகும்.

முஸ்லிம் காங்­கி­ரசின் தோற்­றமும், தொடர்ந்து வந்த வட­கி­ழக்கு மாகா­ண­சபை தேர்தல் மற்றும் பொது தேர்தல் மூல­மாக முஸ்லிம் மக்­களின் ஆணை இக்­கட்­சிக்கு கிடைத்­த­தனால் இலங்­கையில் பேரம் பேசும் சக்­தி­யுள்ள ஓர் அர­சியல் கட்­சி­யாக வளர்ச்­சி­ய­டைந்­த­துடன், அதன் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் ஆளு­மையும், திற­மையும் பல­ரையும் திரும்­பிப்­பார்க்க செய்­தது.

இதனால் காழ்ப்­பு­ணர்ச்­சி­கொண்டு சிலர் தலைவர் அஷ்ரப்பை கொலை செய்­வ­தற்கும் முயன்­றனர்.

அந்­த­வ­கையில் இந்­திய படை­யி­ன­ருடன் ஓட்­டிக்­கொண்டு தனது இனத்­துக்­காக போரா­டிய சகோ­த­ரர்­களை காட்­டிக்­கொ­டுத்து கொலை செய்­து­கொண்­டி­ருந்த ஈ.என்.டி.எல்.எப் என்ற தமிழ் ஆயுத குழு­வினர் 1989.08.22 அம் திகதி மரு­த­முனை பிர­தே­சத்­தில்­ வைத்து தலைவர் அஷ்ரப்பை கொலை செய்­வ­தற்கு துரத்­தி­ய­பொ­ழுது தலைவர் மயி­ரி­ழையில் உயிர் தப்­பி­யி­ருந்தார்.

1989 ஆம் ஆண்டு தொடக்கம் 1994 ஆம் ஆண்டு வரைக்கும் முஸ்லிம் காங்­கிரஸ் பாரா­ளு­மன்­றத்தில் எதிர்க்­கட்சி வரி­சையில் இருந்­து­கொண்டு ஒவ்­வொரு பாரா­ளு­மன்ற அமர்­விலும் முஸ்லிம் மக்­க­ளுக்­காக தலைவர் அஷ்ரப் துணிச்­ச­லுடன் உரை நிகழ்த்­தி­யி­ருந்தார். தலைவர் அஷ்ரப்பின் அய­ராத உழைப்­பினால் முஸ்லிம் மக்கள் இந்­நாட்டில் ஒரு தனித்­துவ தேசிய இனம் என்­ப­தனை உள்­நாட்டில் மட்­டு­மல்ல சர்­வ­தே­சமும் அங்­கீ­க­ரிக்கும் வகையில் தனது செயற்­பாட்­டினை முன்­னெ­டுத்­தி­ருந்தார்.

199௦ ஆம் ஆண்டில் புலி­க­ளுக்கும் பிரே­ம­தா­சா­வுக்­கு­மி­டையில் இடம்­பெற்ற பேச்­சு­வார்த்­தைகள் முறி­வ­டைந்­ததன் பின்பு முஸ்லிம் காங்­கிரஸ் முக்­கி­யஸ்­தர்­களை அழித்­தொ­ழிக்கும் பணியில் விடு­தலை புலிகள் ஈடு­பட்­டி­ருந்­தனர்.

பல முக்­கிய உறுப்­பி­னர்கள் சுட்டு கொல்­லப்­பட்­டார்கள். தலைவர் அஷ்ரப் புலி­களின் கொலை­பட்­டி­யலில் முக்­கிய நப­ராக கொலை அச்­சு­றுத்­த­லுக்கு மத்­தியில் தனது அர­சி­யலை துணிச்­ச­லுடன் முன்­னெ­டுத்தார்.

தலைவர் அஷ்ரப் தனது தீவிர அர­சியல் செயற்­பாட்­டினை ஆரம்­பித்துபல சாத­னை­க­ளையும், வர­லாற்று தட­யங்­க­ளையும் ஏற்­ப­டுத்­தினார். அதே­வேளை, தனது அர­சியல் பய­ணத்­துக்கு தடை­யாக இருந்த துரோ­கிகள் பலரை கட்­சி­யி­லி­ருந்து தூக்கி வீசினார்.

அந்­த­வ­கையில், தலை­வ­ருடன் ஏற்­பட்ட தொடர்ச்­சி­யான கருத்­து­வே­று­பாடு கார­ண­மாக தவி­சா­ள­ராக இருந்த சேகு இஸ்­ஸதீன் முஸ்லிம் காங்­கி­ர­சி­லி­ருந்து விலக்­கப்­பட்டார். இதன் மூலம் கட்­சியில் பிளவு ஒன்று ஏற்­பட்டு புதிய கட்சி ஒன்று உரு­வா­னது.  ஆனாலும் அது முஸ்லிம் காங்­கி­ர­சினை எந்­த­வ­கை­யிலும் பாதிக்­க­வில்லை.

1994.07.01 ஆம் திகதி சந்­தி­ரிக்­கா­வுடன் தலைவர் அஷ்ரப் ஒப்­பந்தம் ஒன்­றினை மேற்­கொண்டு அவ்­வாண்டு நடை­பெற்ற பொதுத் தேர்­தலில் சந்­தி­ரிக்கா தலை­மை­யி­லான பொது­ஜன ஐக்­கிய முன்­ன­ணியை ஆட்­சியில் அமர்த்­து­வ­தற்கு தலைவர் அஷ்ரப்ன் பங்­க­ளிப்பு பிர­தா­ன­மா­ன­தாகும். அத்­தேர்­தலில் முஸ்லிம் காங்­கிரஸ் ஏழு பாரா­ளு­மன்ற ஆச­னங்­களை பெற்­றுக்­கொண்­டது.

யாழ்ப்­பாணம் மாவட்­டத்­தி­லி­ருந்தும் முஸ்லிம் காங்­கி­ர­சுக்கு ஆசனம் கிடைக்­கப்­பெற்­றது. இத்­தேர்­தலில் ஆட்­சியை தீர்­மா­னிக்கும் ஓர் பேரம்­பேசும் சக்­தி­யாக தன்னை இவ்­வு­ல­குக்கு நிரூ­பித்து காட்­டினார்.

பத்­தா­வது பாரா­ளு­மன்­றத்தில் கப்பல், துறை­முக அபி­வி­ருத்தி, புனர்­வாழ்வு, புன­ர­மைப்பு அமைச்­ச­ராக பதவி ஏற்று துறை­முக அதி­கார சபை­யிலும், மற்றும் ஏனைய திணைக்­க­ளங்­க­ளிலும், ஏரா­ள­மான இளைஞ்­ஞர்­க­ளுக்கு தொழில்­வாய்ப்­பினை வழங்­கினார்.

அத்­துடன் இந்­நாட்டில் முஸ்­லிம்­க­ளுக்­கென்று ஒரு பல்­க­லைக்­க­ழகம் இல்­லாத நிலை­யினை உணர்ந்த தலைவர் முஸ்­லிம்­களின் உயர்­கல்­வி­யினை அபி­வி­ருத்தி செய்­யும்­பொ­ருட்டு 1995.10.23 ஆம் திகதி ஒலுவில் பிர­தே­சத்தில் தென்­கி­ழக்கு பல்­க­லைக்­க­ழகத்­தினை உரு­வாக்­கினார்.

பல எதிர்ப்­புக்­க­ளுக்கு மத்­தியில் முஸ்­லிம்­க­ளுக்­காக உயர் கல்­விக்­கென்று ஒரு நிறு­வனம் உரு­வாக்­கப்­பட்­ட­தா­னது நினைத்­து­கூட பார்க்­க­மு­டி­யாத ஒரு வர­லாற்று சாத­னை­யாகும்.

அத்­துடன் ஒலுவில் பிர­தே­சத்தில் துறை­முகம் ஒன்­றி­னையும் அபி­வி­ருத்தி செய்தார்.

இனப்­பி­ரச்­சினை தீர்­வின்­போது முஸ்­லிம்­க­ளுக்­கென்று உரு­வாக்­கப்­பட இருக்­கின்ற தென்­கி­ழக்கு அலகு என்னும் முஸ்லிம் சுய ஆட்சி பிர­தே­சத்தில் ஒரு தனி இராச்­சி­யத்­துக்­கு­ரிய அனைத்து அம்­சங்­களும் அமைந்து இருக்க வேண்டும் என்று விரும்­பினார். அதுவே அவ­ரது கன­வா­கவும் இருந்­தது.

தலைவர் அஷ்ரப் ஒரு சிறந்த அர­சியல் வாதி­யாக மட்­டு­மல்­லாது, சிறந்த சட்­டத்­த­ர­ணி­யா­கவும், சிறந்த கவிஞ­னா­கவும் தன்னை அடை­யா­ளப்­ப­டுத்தி இருந்தார். அவர் எழு­திய கவிதை தொகுப்­பான “நான் எனும் நீ” என்ற கவிதை நூல் 1999.09.26  ஆம் திகதி வெளி­யி­டப்­பட்டு சிறந்த வர­வேற்­பினை பெற்­றி­ருந்­தது.

சந்­தி­ரிக்கா இரண்­டா­வது ஜனா­தி­பதி தேர்­தலை எதிர்­கொண்ட வேளையில் அவ­ரது ஆட்­சியில் தலைவர் அஷ்ரப் அவருக்கு ஏற்­பட்ட கசப்­பு­ணர்­வுகள் கடிதம் மூல­மாக பரி­மா­றப்­பட்டு, இறு­தியில் ஜனா­தி­பதி சந்­தி­ரிக்கா தலைவர் அஷ்ரப்பிடம் மன்னிப்பு கோரியிருந்தார்.
அதனை தொடர்ந்து தலைவர் அஷ்ரப்பின் தயவுடன் மீண்டும் சந்திரிக்கா 1999 ஆம் ஆண்டு ஜனாதிபதியானார்.

அதன் பின்பு 2000 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்காக மீண்டும் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் தலைமையிலான பொதுஜன ஐக்கிய முன்னணியுடன் இணைந்து முஸ்லிம் காங்கிரஸ் தேர்தலில் போட்டியிட்டது.

இந்த நிலையில் தேர்தல் பிரச்சாரத்தில் மும்முரமாக ஈடுபடும்பொருட்டு 16. ௦9. 2௦௦௦ அன்று வானூர்தி மூலம் அம்பாறையை நோக்கி தலைவர் அஷ்ரப் வந்துகொண்டிருந்தபோது யாரும் எதிர்பாராத விதமாக வானூர்தி வெடித்து சிதறியதன் மூலம் சஹீதானார்.

இவரது மரணம் திட்டமிட்ட கொலையா அல்லது விபத்தா என்று இதுவரையில் குழப்பமான நிலை இருந்து கொண்டிருக்கின்றது.

அம்பாறை மாவட்டத்தில் மூன்று பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தினை பெறும்பொருட்டு, அதற்கான வியூகத்தினை வகுத்திருந்த தலைவர் அஷ்ரப் அந்த இலக்கினையும் தாண்டி நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களை பெற்றிருந்தது ஒரு வரலாற்று சாதனையாகும். ஆனால் அந்த வரலாற்று சாதனையை பார்ப்பதற்கு தலைவர் அஷ்ரப் உயிருடன் இருக்கவில்லை.

இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில் உலகம் அழியும்வரைக்கும் மாமனிதர், மர்ஹூம் அஷ்ரப் தனித்துவ ஆளுமையும், அவரது சாதனைகளும் என்றென்றும் பேசப்பட்டுக்கொண்டே இருக்கும். அவரது இழப்பு இந்நாட்டு முஸ்லிம் மக்களுக்கு ஏற்பட்ட ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.

SHARE