“இலங்கை வரலாற்றில் குறிப்பாக, ராஜபக்ஷ காலத்தில்தான் பெரும் ஊடகக் கொலைகள் நடந்தன. அவை பல வகையில் நடத்தப்பட்டன. ஊடகங்களைத் திணறடிக்கும் வகையில் நடந்தன. குறிப்பாக, ராஜபக்ஷ நடத்திய இனப் படுகொலையை, ஊழல் அரசியலைத் தங்குதடையின்றி மேற்கொள்ள அவர் ஊடகங்களின் குரலை நசித்தார்.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் சபையில் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற ஊடகத்துறை, நாடாளுமன்ற விவாதம் ஆகிய அமைச்சுகள் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், “கடந்த காலத்தில் நடந்த ஊடகச் சுதந்திர மறுப்பை முடிவுக்குக் கொண்டுவந்து, ஊடக உரிமையை நிலைநாட்டுவதாக புதிய அரசைச் சார்ந்தவர்கள் தேர்தல் காலத்தில் வாக்குறுதியளித்தனர். மைத்திரிபால சிறிசேன ஊடகச் சுதந்திர மறுப்பால் மற்றும் ஊடகக் கொலைகளால் பாதிக்கப்பட்டவர்களின் கூட்டத்தில் சென்று, அவர்களின் ஆதரவைப் பெறும் நோக்குடன் இவ்வாறு வாக்குறுதியளித்தார். எனவே, கடந்த காலத்தில் நிகழ்த்தப்பட்ட ஊடகச் சுதந்திர மறுப்புக்களுக்குப் பொறுப்புக்கூறும் விதமாக, அச்சம்பவங்களுடனும் கொலைகளுடனும் தொடர்புடைய குற்றவாளிகளைப் புதிய அரசு சட்டத்தின் முன் நிறுத்தவேண்டும்.
இலங்கையில் நடந்த மிக மோசமான மனித உரிமை மீறல்களை மறைப்பதற்காக, மிக மோசமான ஊடகச் சுதந்திர மீறல்களில் இலங்கை அரசு ஈடுபட்டுள்ளது. இந்த விடயங்கள் தொடர்பில், இலங்கையின் புதிய அரசு வெளிப்படையான நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டுமெனக் கேட்டுக்கொள்கின்றேன். அவ்வாறான நடவடிக்கைகளை எடுக்காதபட்சத்தில், அந்த ஊடகச் சுதந்திர மறுப்பை புதிய அரசும் ஓர் அரச இயந்திரமாகச் சாதுரியமாக மறைக்கிறது என்பதையே நாம் முடிவுசெய்ய நேரிடும். ஏனெனில், முன்னைய காலத்தில் இலங்கை அரசே ஊடகச் சுதந்திரத்தை மறுத்து, ஊடகக் கொலைகளைப் புரிந்தது அல்லது தனக்குச் சார்பான குழுக்களை வைத்து அக்கொலைகளை நடத்தியது என்பது யாவரும் அறிந்ததே.
நாம் கடந்த காலத்தில் நடந்த ஊடகச் சுதந்திர மறுப்பைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறோம். அப்படி என்றால், இப்போது ஊடகச் சுதந்திரம் நிலவுகின்றதா? ஆட்சி மாறியும் ஊடகச் சுதந்திரம் இல்லை. குறிப்பாக, இராணுவமும் இராணுவத்தின் புலனாய்வுக் கட்டமைப்புக்களும் தொடர்ந்தும் ஊடகங்களைக் கண்காணித்து வருகின்றன. இந்த நிலை இன்னமும் தொடர்வது கவலையளிக்கின்றது. அத்துடன், பல ஊடகவியலாளர்கள் தொடர்ந்தும் அச்சுறுத்தப்படுகின்றனர். மறைமுகமாக அச்சுறுத்தப்படுவதும் இனந்தெரியாத குழுக்கள் அச்சுறுத்துவதும் தொடர்கின்றன. ஊடகச் சுதந்திரம் குறித்து நம்பிக்கையற்ற, நிச்சயமற்ற ஒரு சூழலே நிலவுகிறது. இராணுவத்தின் கட்டுப்பாட்டிலுள்ள நாடு என்ற வகையில், தொடர்ந்தும் ஊடகச் சுதந்திரம் மறுக்கப்படுகின்றது. இன்று வடக்கு, கிழக்கில் நுட்பமான விதங்களிலும் ஊடகச் சுதந்திர மறுப்பு நிலவுகின்றது.
ஊடகச் சுதந்திரத்தை நிலைநாட்டவேண்டியது ஒரு அரசின் கடமை. ஆனல், அந்த அரசே ஊடக சுதந்திர மீறல்களைப் பாதுகாக்கின்றது. அந்த அரசே ஊடகச் சுதந்திரத்தை நுட்பமாக மீறுகின்றது. அந்த அரசின் இயந்திரமான இராணுவமே ஊடகச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் நிகழ்ச்சியை முன்னெடுக்கிறது. ஊடகவியலாளர்களின் சுதந்திரத்தை உறுதிசெய்ய புதிய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஊடக அமைப்புக்கள் கோரிக்கைவிடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. ஊடக நிறுவனங்களைத் தாக்கியவர்களும் ஊடகவியலாளர்களைக் கொன்று குவித்தவர்களும் இன்றும் சமூகத்தில் சுதந்திரமாக நடமாடித் திரியும்போது, ஊடகவியலாளர்கள் எப்படி முழுச் சுதந்திரத்துடன் செயற்படமுடியும்? அவர்களின் மனங்களில் இருந்து எப்படி அச்சம் விலகும்? ஊடகவியலாளர்களின் பாதுகாப்பும் ஊடக நிறுவனங்களின் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்படாத வரைக்கும் எப்படி முழுமையான ஊடக சுதந்திரம் நிலைநாட்டப்படும்? காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் வழக்கையும், ‘சண்டே லீடர்’ ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் வழக்கையும் மட்டுமே இந்த நல்லாட்சி அரசு விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளது;
அது நல்ல விடயம். அந்த வழக்குகளில் குற்றவாளிகள் கண்டறியப்பட்டுத் தண்டிக்கப்படவேண்டும். உலகின் கவனத்தை ஈர்த்த அந்த வழக்குகளில் மட்டும்தான் அரசு அக்கறையாக இருந்துகொண்டு மற்றைய சம்பவங்களைப் புறக்கணிப்பது ஏற்புடையதல்ல. நீங்கள் நல்லாட்சி என்றுதான் மக்களுக்கு வாக்குறுதியளித்தீர்கள். ஊடகங்கள் மீதும் உடகவியலாளர்கள் மீதும் எத்தனையோ தாக்குதல்கள் கடந்த காலங்களில் நடந்திருக்க, இரண்டு வழக்குகளை மட்டும் விசாரிப்பது குற்றவாளிகளைக் கட்டுப்படுத்த உதவாது. இது சும்மா மக்களுக்கும் உலகத்திற்கும் காட்டுவதற்கான நடவடிக்கை மட்டுமே! எனவே, அனைத்து தாக்குதல்கள் குறித்தும் விசாரணைகள் நடத்தப்படவேண்டும்.
கொல்லப்பட்ட, கடத்தப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பான அத்தனை வழக்குகளும் விசாரிக்கப்பட வேண்டும்; குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். அனைத்தையும் உடனடியாகச் செய்ய முடியாது என்று இந்த அரசு கருதினால், அவற்றை எப்போது செய்து முடிப்பது என்கிற கால அட்டவணை ஒன்றை அரசு அறிவிக்க வேண்டும். அப்போதுதான் மக்களுக்கு நம்பிக்கை வரும்; ஊடகவியலாளர்களுக்கு நம்பிக்கை வரும்; ஊடக நிறுவனங்கள் துணிந்து சுதந்திரமாகச் செயற்பட முன்வரும். இவையெல்லாம் இல்லாமல் முழுமையான ஊடக சுதந்திரம் என்று கூறுவது வெறும் கண்துடைப்பாகத்தான் அமையும்.
கொழும்பிலிருக்கும் ஊடகங்கள் எதிர்கொள்ளாத எதிர்கொள்ளவே முடியாத பயங்கரங்களையெல்லாம் யாழ்ப்பாணத்து ஊடகங்கள்தான் எதிர்கொண்டிருக்கின்றன. அரச பயங்கரவாதம் உள்ளிட்ட எல்லா வன்முறைகளையும் அவைதான் கடந்த காலங்களில் எதிர்கொண்டிருந்தன. ஆனால், அவை குறித்து ஒரேயொரு விசாரணைகூட கடந்த 06 மாதங்களில் இந்த நல்லாட்சி அரசால் முன்னெடுக்கப்படவில்லை.
இலங்கை வரலாற்றிலேயே முதன் முதலில் ஊடக நிறுவனமொன்றுக்குள் புகுந்து அங்கிருந்தவர்களைச் சுட்டுக்கொன்று சொத்துக்களுக்கெல்லாம் தேசம் விளைவித்த சம்பவம் 2006 ஆம் ஆண்டு மே மாதம் 02 ஆம் நாள் சர்வதேச ஊடக சுதந்திர தினமான மே 03 ஆம் திகதிக்கு முதல் இரவு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. ‘உதயன்’ பத்திரிகை அலுவலகத்திற்குள் நுழைந்த ஆயுததாரிகள் வெறியாட்டம் நடத்தி இரண்டு ஊழியர்ச் சுட்டுக் கொன்றார்கள் 3 பேரைக் காயப்படுத்தினார்கள்.
ஒரு கோடி ரூபா அளவிலான சொத்துக்களை நாசமாக்கினார்கள். இலங்கையின் ஊடக வரலாற்றையே அதிர்ச்சியால் புரட்டிப்போட்ட இந்தச் சம்பவம் குறித்து இதுவரையில் எந்த விசாரணையும் இல்லை. இந்த நல்லாட்சி அரசின் கீழும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அந்தத் தாக்குதல் இராணுவத்தினரின் ஆசீர்வாதத்துடனும், ஆதரவுடனும்தான் நடத்தப்பட்டதென்றாலும் அதனை நேரடியாகச் செய்தவர்களின் தலைவர் தாக்குதலின் சூத்திரதாரி முன்னைய ஆட்சியில் அமைச்சராக இந்தச் சபையில் இருந்தார். இன்று நாடாளுமன்ற உறுப்பினராக சுதந்திரமாகச் செயற்படுகிறார்.
தான் செய்த கொலைகளுக்காக, ஊடக நிறுவனங்களைத் தாக்கியமைக்காகத் தன்மீது வழக்கு விசாரண மேற்கொள்ளப்படுமென்றோ, சிறையில் அடைக்கப்படுமென்றோ எந்த அச்சமுமின்றி இங்கு அமர்ந்திருக்கும்போது, வெளியே ஊடகவியலாளர்களும் ஊடக நிறுவனங்களும் எப்படி முழுமையான சுநத்திரத்தை அனுபவிக்க முடியும்? அந்தக் குற்றவாளி அரசின் பங்காளிக் கூட்டணி ஒன்றிலேயே உப தலைவராக இருக்கும்போது ஊடகவியலாளர்களால் எப்படி சுதந்திரமாகச் செயற்பட முடியும்? நல்லாட்சி அரசின் கீழும் இப்படியான குற்றவாளிகள் பாதுகாக்கப்படுகிறார்கள் என்கின்றபோது ஊடகவியலாளர்களால் எப்படி முழுமையான சுதந்திரத்துடன் செயற்படமுடியும்? எல்லா ஆட்சிகளும் இப்படிப்பட்ட குற்றவாளிகளுக்குச் சாதகமாக நடந்துகொள்ளும்போது ஊடகவியலாளர்கள் சுய தணிக்கைக்குள் கட்டுண்டு கிடப்பதைத்தவிர வேறு என்ன வழிவகை இருக்கப் போகிறது? இப்போதும் அதுதான் நடந்துகொண்டிருக்கின்றது. தாங்கள் விரும்புபவற்றை எழுதவோ, பேசவோ முன்னர் ஒன்றுக்குப் பல தடவை யோசிக்கவேண்டியவர்களாகத்தான் ஊடகவியலாளர்கள் இருக்கின்றனர்.
அந்த நிலைமை மாற வேண்டுமென்றால் குற்றவாளிகள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும். அந்த விடயத்தில் இந்த அரசு நேர்மையுடன் செயற்படவேண்டும். வடக்கில் பிரபல ஊடகவியலாளராக விளங்கிய நிமலராஜன் அவரது வீட்டில் வைத்து அவரது குடும்பத்தினர் முன்னிலையில் படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக ஈ.பி.டி.பி. யின் முக்கியஸ்தர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டனர். பின்பு அவர்கள் சட்டமா அதிபரின் சம்மதத்துடன் பிணையில் விடப்பட்டனர்.
இவ்வழக்கில் பிரதான எதிரியான ஈ.பி.டி.பி. உறுப்பினர் வெளிநாட்டுக்குத் தப்பியோடிவிட்டதாகக் கூறப்படுகின்றது. இன்றுவரை அவர் கைது செய்யப்படவோ அல்லது அவரைக் கைது செய்ய ‘இன்டர்போல்’ அமைப்பைக் கோரவோ நடவடிக்கை எடுக்கப்படவில்லை. கிழக்கில் ஊடகவியலாளர்கள் சுகிர்தராஜன், நடேசன் போன்றோரின் கொலைகளுக்கும் நீதி கிடைக்கவில்லை.
இதுபோன்று ஏராளமான தமிழ் ஊடகவியலாளர்களின் குடும்பங்கள் நீதியை எதிர்பார்த்து ஏங்கி நிற்கின்றன. இந்த அரசாவது அதனை செய்யுமென்று அவர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால், இந்த அரசு அதில் இன்னமும் அக்கறை காட்டவில்லையென்பது கவலைக்குரியது. கடந்த 10 வருடங்களில் கொழும்பில் ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டதற்கும், ஊடக நிறுவனங்கள் தாக்கப்பட்டதற்கும் மேலாக வடக்கு, கிழக்கில சம்பவங்கள் நடந்துள்ளன. ஆனால், இந்த அரசு அவற்றில் ஒன்று குறித்துக்கூட இதுவரையில் விசாரணை நடத்தியதில்லை. ஏன்? தமிழ் ஊடகங்கள் அல்லது தமிழ் ஊடகவியலாளர்கள் என்ற பாரபட்சமா? இந்தப் பாரபட்சம்தான் கடந்த 60 ஆண்டுகளாக இந்த நாட்டைச் சீரழித்தது என்பதை இந்த அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும். நாட்டின் ஏனைய சேவைத் துறையினரைப் போலவே ஊடகவியலாளர்களும் நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் பணிபுரிகிறார்கள்.
இன்னும் சொல்லப்போனால் தமது உயிர்களைப் பணயம் வைத்துப் பணிபுரிகிறார்கள். ஏதோ செய்திகளை எடுத்துப் பிரசுரித்துவிட்டு அல்லது வெளிப்படுத்திவிட்டு அவர்கள் சொகுசாக வாழ்க்கை நடத்துவதாக எவரும் நினைப்பார்களானால் அது மிகவும் தவறான விடயமாகும். அன்றாட வாழ்வில் அவர்களும் மற்றவர்களைப் போலவே கஷ்டங்களை அனுபவிக்கின்றார்கள். அவர்களுக்கும் குடும்பங்கள் இருக்கின்றன; பிள்ளைகள் இருக்கின்றார்கள். குடும்பப் பொறுப்புக்கள் இருக்கின்றன. வீட்டுப் பிரச்சினை, போக்குவரத்துப் பிரச்சினை என்று நிறையப் பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றார்கள். அவர்கள் வெளியிடும் செய்திகள், கட்டுரைகள், படங்கள் போன்றவற்றுக்கு எத்தனையோ விதமான பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றார்கள். ஆபத்துக்களைச் சந்திக்கின்றார்கள்.
இரவு, பகல் பார்க்காமல் உழைக்கின்றார்கள். பல வேளைகளில் சரியான நேரத்தில் சரியாக சாப்பிடாமல் ஒரு பணிஸ், ஒரு வடையைச் சாப்பிட்டுவிட்டு, தேநீர் கோப்பையை அருந்திவிட்டு கடமை புரிகின்றார்கள். சில வேளைகளில் அதிகாரிகளின் கோபம், படையினரின் தாக்குதல், பொலிஸாருடன் முறுகல் என தம் வாழ்க்கையை எப்போதும் ஆபத்துக்குள்ளாக்குகின்றார்கள். இவைகளைக் கவனித்து அவர்களுக்கும் உதவிகளை அளிக்க வேண்டும்”