இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலரின் இறுதிக்கிரியைகள் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில்..

214

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனை இலக்கு வைத்து நடத்தப்பட்டதாக கூறப்படும் துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த மெய்ப்பாதுகாவலரின் இறுதிக் கிரியைகள் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் தற்போது நடைபெறுகின்றன.

இந்த இறுதிக் கிரியைகளுக்காக மேல் நீதிமன்ற நீதிபதிகளான பிரேம்சங்கர், சசிமகேந்திரன் மற்றும் மா.இளஞ்செழியன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

மேலும், மாவட்ட நீதிபதிகளான பிரபாகரன், அலெக்ஸ் ராஜா, ஜூட்சன், கருணாகரன், ரியாழ், வளன் ஆனந்தராஜா மேலும் பல தமிழ் சிங்கள நீதிபதிகள், நீதிமன்ற உத்தியோகத்தர்கள், வடமாகாண பொதுமக்கள் எனப் பலரும் இறுதிக்கிரியை நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர்.

சரத் ஹேமச்சந்திரவின் சொந்த ஊரான சிலாபம், குமாரகட்டுவில் இந்த இறுதிக் கிரியைகள் இடம்பெற்று வருகின்றன.

சமய அனுஷ்டானங்களை பௌத்த துறவிகள் மேற்கொண்டு வருவதுடன், உயிரிழந்த சரத் ஹேமச்சந்திரவின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக கனிசமான அளவு பொதுமக்கள் திரண்டுள்ளதை காணக்கூடியதாக உள்ளது.

இந்த இறுதிநிகழ்வில் நீதிபதிகள், பொலிஸார், பொது மக்கள் எனப்பலரும் கலந்துகொண்டுள்ளதால் பாதுகாப்பிற்காக விசேட அதிரடிப்படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கடந்த சனிக்கிழமை நீதிபதிஇளஞ்செழியனை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் சரத் ஹேமச்சந்திர என்ற நீதிபதியின் மெய்ப்பாதுகாவலர் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்திருந்தார்.

கடந்த 15 வருடங்களாக நீதிபதி இளஞ்செழியனுக்கு மெய்ப்பாதுகாவலராக இருந்த சிலாபத்தைச் சேர்ந்த 51 வயதாகிய சரத் ஹேமச்சந்திரவே இதில் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

 

 

 

 

 

SHARE