இளஞ்செழியனை இலக்கு வைத்து சுட்டவர் வெளிநாட்டுக்கு தப்பி ஓட்டம்? வெளிவரும் புதிய செய்தி-நாமல் ராஜபக்ஸ

243

நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து நடத்தப்பட்டதாக கூறப்படும் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் உண்மையான சூத்திரதாரி வெளிநாட்டுக்கு தப்பி ஓடியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

பொரளையில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே இதை கூறியுள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாட்டில் மக்கள் சுதந்திரமாக நடக்க முடியாத நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. ஜனநாயகம் மறுக்கப்படுகின்றது. துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன.

அண்மையில் யாழில் நீதிபதி இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. இதன் பிரதான சந்தேகநபர் சரணடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர் என நாமல் தெரிவித்துள்ளார்.

“சுடச்சொன்னார் சுட்டேன்” என குறித்த சந்தேகநபர் வாக்குமூலம் வழங்கியிருந்தார். இந்த நிலையில் யாரை வேண்டுமானாலும் அவர் சுடுவாரா? அப்படியாயின் நாட்டின் தலைவர்கள் அவதானமாக இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

யாழ்ப்பாணத்தில் இருந்து எமக்கு கிடைக்கும் தகவலுக்கு அமைய, நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து நடத்தப்பட்டதாக கூறப்படும் துப்பாக்கிச்சூட்டை நடத்திய பிரதான சூத்திரதாரி இந்த நாட்டை விட்டே தப்பிச் சென்றுள்ளார்.

ஆனால் அவர் சரணடைந்து விட்டதாக பொலிஸார் கூறுகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பில் நீதிபதி, பொலிஸார் மற்றும் தற்போது சரணடைந்த நபர் என மூவருடைய கருத்துக்களும் ஒன்றுக்கு ஒன்று முரண்பட்டு காணப்படுகின்றன.

எனவே இது தொடர்பில் பொலிஸார் உரிய விசாரணைகளை நடத்த வேண்டும் என இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கடந்த சனிக்கிழமை யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியனை இலக்கு வைத்து நடத்தப்பட்டதாக கூறப்படும் துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் நீதிபதியின் மெய்ப்பாதுகாவலர் ஒருவர் உயிரிழந்திருந்தார்.

இந்த சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், பிரதான சந்தேகநபரான முன்னாள் போராளி ஒருவரை பொலிஸார் தேடி வந்தனர்.

ஆனால் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த குறித்த சந்தேகநபர் நேற்று முன்தினம் பொலிஸில் சரணடைந்திருந்தார். இவரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் ஆகஸ்ட் மாதம் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதிவான் சதீஸ்கரன் உத்தரவிட்டிருந்தார்.

யாழ். நல்லூரைச் சேர்ந்த 39 வயதான சிவராசா ஜயந்தன் என்ற விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினரே சரணடைந்த நபராவார்.

SHARE