
நீண்ட நாள்களாக உடலில் இருக்கும் சளி மற்றும் மலச்சிக்கல், ரத்தசோகை, தைராய்டு சுரபியில் ஏற்படும் பிரச்னைகள் போன்றவற்றால் இளநரை ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உண்டு. முறையற்ற உணவுப் பழக்கங்கள், உடலிலுள்ள ஊட்டச்சத்தின் அளவை மாற்றுகின்றன. இதை, தோல் மற்றும் முடிகளில் ஏற்படும் மாற்றங்களை வைத்தே கணிக்கலாம். வைட்டமின் B12, அயோடின், தாமிரம், இரும்புச்சத்து, புரதச்சத்து, அமீனோ அமிலங்கள் மற்றும் ஃபோலிக் அமிலங்கள் முதலியவை தேவையான அளவில் உடலில் இல்லையென்றால், நரை முடி வரும்.
அதிகப்படியான வெப்பம் மற்றும் ரசாயனங்கள் அதிகம் சேர்க்கப்பட்ட கூந்தல் பராமரிப்புப் பொருள்களை உபயோகிப்பதால், மீண்டும் மீட்டெடுக்க முடியாத அளவுக்குச் சேதமடைகிறது உச்சந்தலை. இளநரைக்கு, புகைப்பழக்கமும் மிக முக்கியமான காரணங்களுள் ஒன்று.
வெந்தயத்தில் இருக்கும் லெசித்தின் மற்றும் அத்தியாவசிய அமீனோ அமிலங்கள் இளநரையைக் கட்டுப்படுத்துகின்றன. 1/2 கப் தேங்காய் எண்ணெயைக் கொதிக்கவைத்து அதில் 1/4 கப் வெந்தயம் சேர்த்து 6-8 நிமிடம் கொதிக்கவிடவேண்டும். சூடு தணிந்து அரை வெப்பநிலைக்கு வந்ததும், வெந்தயத்தை தனியே வடிகட்டி எடுத்துவிட்டு எண்ணெயை மேலும் குளுமைப்படுத்தவேண்டும். இரவில் இந்த எண்ணெயால் மசாஜ் செய்து ஊறவைத்து காலையில் ஷாம்புகொண்டு கூந்தலை அலசலாம். வாரம் இருமுறை இப்படிச் செய்யலாம்.
தற்போது மார்க்கெட்டுகளில் அதிகம் காணப்படும் ஆப்பிள் சீடர் விநிகர்கொண்டும் இந்தப் பிரச்னையைச் சரிசெய்யலாம். இரண்டு டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சீடர் விநிகரோடு இரண்டு கப் தண்ணீர் சேர்த்து நன்கு கலந்துகொள்ள வேண்டும். இந்தக் கலவையை, தலையில் ஊற்றி அனைத்து இடங்களுக்கும் படரவிட்டு 20 நிமிடங்கள் வரை ஊறவைத்த பிறகு ஷாம்புகொண்டு அலசவேண்டும். வாரம் ஒருமுறை இதுபோன்று செய்துவந்தால், இளநரையைத் தடுக்கலாம்.