

இளம் நரம்பியல் வைத்தியர் ஹப்ஸா மபாஸ்,
காத்தான்குடியில் 90 நோயளர்களை இரு தினங்களில் குணப்படுத்தி சாதனை.
காத்தான்குடியை அடுத்துள்ள பாலமுனைக் கிராமத்தில் வாழும் நான்கு பிள்ளைகளின் தந்தையான ஏழைக்குடும்பஸ்தர் ஒருவர் நரம்புகளில் பாதிப்பு ஏற்பட்டு பல மாதங்களாக படுத்தபடுக்கையாக இருந்து வந்த நிலையில், தனது வைத்திய சிகிச்சைக்காக உதவி கோரி விடுத்த வேண்டுகோளை மடவளை இணையதளம் மூலமாக அறிந்த கொழும்பு-வெல்லம்பிட்டியவைச் சேர்ந்த இளம் நரம்பியல் டாக்டர். ஹப்ஸா மபாஸ் (D.H.M, B.F.M, M.T) அவர்கள், அந்த நோயாளிக்கு சிகிச்சையளிக்கும் நோக்குடன் கடந்த 20ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை காத்தான்குடிக்கு வருகை தந்தார்.
காத்தான்குடி “சலாகா” விருந்தினர் விடுதியில் தங்கியிருந்த டாக்டரிடம் அந்நோயாளியை அவரது உறவினர்கள் மிகுந்த சிரமத்துடன் கைத்தாங்கலாக அழைத்து வந்தனர்.
அவரது நிலைமையை அவதானித்த டாக்டர் ஹப்ஸா, அவருக்கு சிகிச்சையளித்து அன்றைய தினமே அவரைக் குணப்படுத்தினார். சிரமத்தோடு அழைத்து வரப்பட்ட குறித்த நோயாளி, அன்றைய சிகிச்சையின் பின்னர் தானாக எழுந்து நடந்து சென்றது. பெரும் ஆச்சரியமாக இருந்தது.
இதனை நேரில் அவதானித்த அக்குடும்ப உறுப்பினர்கள் உட்பட அங்கிருந்த பலரும் அழ்ழாஹ்வைப் புகழ்ந்ததுடன் டாக்டரையும் வெகுவாகப் பாராட்டினர்.
ஏற்கனவே டாக்டர். ஹப்ஸா மபாஸ் அவர்களுடன் அறிமுகமாகியிருந்த காத்தான்குடியைச் சேர்ந்த சகோதரர் ஒருவர் டாக்டரிடம் வேண்டிக் கொண்டதற்கமைய இப்பிரதேசத்தில் நரம்பியல் பாதிப்பு நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ள ஏழைகளுக்கு மேலும் இரு தினங்கள வைத்திய ஆலோசனைகள் வழங்கி சிகிச்சையளிப்பதற்கும் அவர் விருப்பம் தெரிவித்தார்.
டாக்டரின் இந்த அரிய சேவை பற்றி இணையதளங்கள். முகநூல் பக்கங்கள். டுவீட்டர் குறுஞ்செய்திகள் மூலம் பகிரங்கப்படுத்தப்பட்டது. இதனடிப்படையில் குறித்த இரு தினங்களிலும் சுமார் 90 நோயாளிகளை அவர் பரிசோதனை செய்து சிகிச்சையளித்துக் குணப்படுத்தினார்.
23ம் திகதி காலையிலும் மேலும் பலர் சிகிச்சை பெற விரும்பி அவரைச் சந்திக்கச் சென்றிருந்த போதிலும், இரு தினங்களாக இரவு பகலாகத் தான் தொடர்ச்சியாக சிகிச்சைகள் வழங்கியதால் வெகுவாகக் களைப்புற்றிருப்பதாகவும், அழ்ழாஹ் நாடினால் மீண்டுமொரு முறை இங்கு வருகை தந்து தனது சேவையை வழங்குவதாகவும் தெரிவித்து அவர் விடைபெற்றுச் சென்றார்.
நரம்புகளின் பாதிப்பினால் ஏற்படக்கூடிய பல்வேறு நோய்களாலும் பாதிக்கப்பட்டு வந்தவர்களுக்கு குறித்த இரு தினங்களிலும் டாக்டர். ஹப்ஸா மபாஸ் பரிவுடன் சிகிச்சையளிப்பதை இங்குள்ள படங்களில் காணலாம்.
ஏழை நோயாளி ஒருவருக்கு சிகிச்சையளிக்கும் நோக்கத்துடன் வருகை தந்த தன்னை பலரும் அறிந்து கொள்ளும் வகையில் தகவல் வெளியிட்ட இணையதளங்கள், முகநூல் நண்பர்களுக்கும், தமக்கு சகல வசதிகளையும் இங்கு ஏற்படுத்திக் கொடுத்த சகோதரருக்கும் நன்றி தெரிவித்த டாக்டர் ஹப்ஸா மபாஸ், நோயளிகளின் பாதிக்கப்பட்ட உடற்பாகங்களை தனது பலங்கொண்ட மட்டும் அழுத்திப் பிடித்து உள்ளழுத்தம் கொடுப்பதன் மூலமாக தடைப்பட்டிருக்கும் நரம்புகளின் செயற்பாட்டை வழமைக்கு கொண்டு வந்து துரிதமாகக் குணப்படுத்த முடிகிறது எனவும் தெரிவித்தார்.