இளைஞர்கள் அரசியல் தலைமை ஏற்க முன்வரவேண்டும். அதற்கு எந்தகுடும்ப பின்னணியும், இளைஞர் பயிற்சி பாசறையில் திலகர் எம்.பி

162
நோட்டன்  பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன் 

இலங்கையில் ஏனைய சமூகங்களுடன் ஒப்பிடும்போது “தலைவர்” நிலையில் அதிகளவானோர் திகழும் சமூகம் மலையக சமூகமே. ஒவ்வொரு தோட்டப் பிரிவும் குறைந்தது நான்கு தொழிற்சங்க தலைவர்கள், தலைவிகள், இளைஞர் அணி தலைவர்கள், மாதர் அணித்தலைவர் தலைவிகள், கோவில் கமிட்டி தலைவர்கள் என தலைவர்களால் நிரம்பி வழியும். எனினும், குறித்த எல்லைக் கோட்டுக்கு மேலே அவர்களது தலைமைத்துவம் வளரவிடப்படாது ஒரு சில குடும்பங்களுக்கு அது மட்டுப்படுத்தப்பட்டதாக இருந்த நிலையில்தான் இன்று மலையக இளைஞர்களான நாங்கள் அரசியல் தலைமை ஏற்று இருக்கிறோம். எங்களுக்கு இதற்கு முன்னர் எந்த அரசியல் குடும்ப பின்னணியும் கிடையாது. எனவே இளைஞர்கள் அரசியல் தலைமை ஏற்க முன்வர வேண்டும் என தொழிலாளர் தேசிய முன்னணியின் செயலாளர் நாயகமும் நுவரலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.திலகராஜ் தெரிவித்துள்ளார்.

தொழிலாளர் தேசிய முன்னணியின் இளைஞர் அணித்தலைவர் பா.சிவநேசன் தலைமையில் ஹட்டன் பூல்பேங்க் நிலையத்தில் இடம்பெற்ற இளைஞர் பயிற்சி பாசறையில் சிறப்புரையாற்றிய போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், தலைமை என்றவுடன் ஒரு சில குடும்பங்களுக்குள் அல்லது சினிமா கதாநாயகர்களுக்குள் அதனைத் தேடும் மோசமான கலாசாரம் ஒன்று சமூகத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது. தென்னாசிய நாடுகளில், இலங்கையின் தேசிய அரசியலில் இந்த நிலைமையை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இலங்கையின் அடுத்த ஜனாதிபதி யார் என்ற கேள்வி எழுந்ததும் இரண்டு பிரதான கட்சிகளிலும் முன்னாள் ஜனாதிபதிகளின் வாரிசுகளைக் கைகாட்டுவது என்பது ஜனநாயகத்தை கேள்விக்கு உட்படுத்துவதாகும். ஜன நாயகத்தில் மக்களே தலைவர்கள் எனில் மக்களில் இருந்து யாருமே தலைமை ஏற்க வரலாம். அதனை ஒரு குடும்பத்தில் தேட முனைவது அறியாமையினால் ஆகும்.

மலையகத்திலும் இத்தகையதொரு கலாசாரம் வேரூன்றி இருந்த நிலையில்தான் திகாம்பரம், திலகராஜ் போன்றவர்கள் எந்தவொரு அரசியல் குடும்ப பின்னணியும் இல்லாமல் இன்று அரசியல் முன்னணியில் இருக்கிறோம். நாம் நேரடியான தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகள். ஆனால், இன்று அமைச்சராகவும் பாராளுமன்ற உறுப்பினர்களாகவும் உள்ளோம். அந்தப் பதவியை நாம் இலகுவாக அடைந்துவிடவில்லை. அதன் பின்னால் எமது கடின உழைப்பு இருந்தது. 1999 ல் இருந்தே நாங்கள் இளைஞர்களை அணி திரட்டத் தொடங்கினோம். முதல் கூட்டம் தேயிலை மலையில் ஒரு பாறையில் சுற்றி அமர்ந்து இருக்க நாம் மத்தியில் நின்று பேசிய நாள் எனக்கு நினைவு இருக்கிறது. கரப்பந்தாட்ட விளையாட்டின் ஊடாக தோட்டங்கள் தோறும் இளைஞர்களை அணிதிரட்டி அவர்களிடம் அரசியல் கருத்துக்களை முன்வைத்தோம். நானும் அமைச்சர் திகாம்பரமும் முதன் முதலாக சந்தித்துக் கொண்டதே ஒரு கரப்பந்தாட்ட மைதானத்தில்தான்.

தலைமைத்துவத்திற்கு சிறந்த உதாரணத்தை உதைப்பந்தாட்ட விளையாட்டில் இருந்தே நாம் பெறலாம். பந்தினை இலக்கு நோக்கி நகரத்திச் செல்லும் கலையே தலைமைத்துவம். இருப்பது ஒரு பந்து அதனை தனது அணியும் எதிரணியும் இலக்கு நோக்கி நகர்த்த எத்தனை தூரம் திட்டமிட்டு, ஒழுங்கைமைத்து, வழிநடத்தி செயல்படுகின்றனர் என்பதில் தான் வெற்றி தங்கியுள்ளது. தலைமைத்துவம் என்று எழுந்தவுடன் எதிரணி ஒன்று உருவாவது இயல்பு. ஏனெனில், அவர்களும் அதே பந்தினைக் கொண்டு அவர்கள் இலக்கினை அடைய முனைவார்கள். இதன்போது பார்வையாளர்கள் விமர்சன கனைகளைத் தொடுப்பார்கள். அவர்களால் அதைத்தான் செய்யமுடியும். களமாட முடியாது. களமாடுபவரே வெற்றி தோல்வியை அனுபவிப்பர். நமது அறிவு திறமையை சமூகத்திற்காக பயன்படுத்த முன்வரவேண்டும். நான் ஆசிரியராக செயற்பட்டவன். எனக்கு பல்கலைக விரிவுரையாளராக வாய்ப்பு கிடைத்தது. அதனைச் செய்துகொண்டிருந்தால் இன்று எதிர்கொள்ளும் விமர்சனங்களை எதிர்கொண்டிருக்க மாட்டேன். ஆனால் இன்று விமர்சனங்களையும் தாண்டி மக்கள் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது துணிவுடன் தலைமை ஏற்க முன்வந்தமையாலேயே. எனவே, விமர்சனத்தை எதிர்கொள்ளத் தயங்கி அரசியலுக்கு வருவதற்கு படித்த இளைஞர்கள் தயங்க கூடாது. எந்தக் கட்சி ஆனாலும் பரவாயில்லை அரசியலுக்குள் நுழையுங்கள். நம்மை நாம் ஆளவேண்டும் என்பதெல்லாம் அரசியலுக்குள் நுழையாமல் சாத்தியமில்லை என்றும் தெரிவித்தார்.

SHARE