
இந்த இளைஞர் மாநாட்டின் பிரதான இலக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தேசிய அரசாங்கத்தின் அபிவிருத்தி திட்டங்களில் இளைஞர், யுவதிகளை பங்காளர்களாக இணைத்துக் கொள்வதே எனவும் பிரதமர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
இலங்கையின் முதலாவது நிறைவேற்றதிகார ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனவின் ஆட்சியின் போதே நாட்டின் இளைஞர் சமுதாயத்தின் திறமைகளுக்கு பட்டை தீட்டும் பொருட்டு தேசிய இளைஞர் சேவைகள் சபை ஆரம்பிக்கப்பட்டது.
அதன் பொறுப்புக்களை ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன இளம் பாராளுமன்ற உறுப்பினராக அன்று அறிமுகமான இன்றைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் ஒப்படைக்கப்பட்டது.
நாட்டிலுள்ள அனைத்துப் பாடசாலைகளிலும் கல்வி பயின்ற மாணவர்கள் பள்ளிப்பருவ இறுதிக்கட்டத்துடன் இளைஞர் அமைப்புகளுடன் இணையும் வாய்ப்பை உருவாக்கி அதனுடாக இளைஞர், யுவதிகளின் திறமைகளை வெளிக் கொண்டுவரும் செயற்திட்டத்தை ரணில் விக்கிரமசிங்க அன்று அறிமுகப்படுத்தினார்.
1977 முதல் ஆட்சி செய்த ஐக்கிய தேசியக்கட்சி அரசாங்கங்கள் தேசிய இளைஞர் சேவை அமைப்பின் வேலைத்திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து வந்தது. ஆண்டு தோறும் தலை நகருக்கு வெளியே பின்தங்கிய பிரதேசங்களில் ‘யொவுன்புர’ மாநாட்டை நடத்தி அப்பகுதிகளை ஒளிபரவும் பிரதேசங்களாக0 மாற்றியமைக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன.
அவற்றினூடாக பயனடைந்த நூற்றுக்கணக்கான இளைஞர்களும், யுவதிகளும் இந்த தேசத்தைக் கட்டியெழுப்பும் பாரிய பணிகளை முன்னெடுத்து வந்தனர். தற்போதைய பாராளுமன்றத்தில் இருக்கும் இளைஞர், யுவதிகள் இளைஞர் சேவைத்திட்டத்தின் மூலம் பட்டை தீட்டப்பட்டவர்களாவர்.
இளைஞர், யுவதிகளின் திறமைகளை சரியான முறையில் பயன்படுத்தி இலக்கு நோக்கிய பயணத்தில் அவர்களை முன்னெடுத்துச் செல்லும் வகையிலேயே இதன் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன. என்றாலும் 18 வருடகால ஐக்கிய தேசியக்கட்சி ஆட்சிக்குப் பின்னர் அதிகாரத்துக்கு வந்த அரசுகள் இளைஞர், யுவதிகளை கண்டு கொள்ளத் தவறின.
இதன் விளைவாக அவர்களின் பயணப்பாதை மீண்டும் திசைமாறும் நிலைக்குத் தள்ளப்பட்டது. அவர்களது உள்ளங்களில் மீளவும் போராட்டக்குணம் மேலோங்கச் செய்தது. அவர்கள் சில சந்தர்ப்பங்களில் ஜனநாயக வழியிலிருந்து விலகிச் செயற்படும் நிலையும் உருவானது.
அத்துடன் சரியாக வழி நடத்தப்படாத இளைஞர்கள் தவறான செயல்களில் ஈடுபட்டனர். போதைப் பொருள் பாவனை, குற்றச் செயல்களில் இளைஞர்கள் ஈடுபடல் இதன் விளைவு கடந்த காலத்தில் நாடு பாரிய பின்னடைவுக்குள் தள்ளப்பட்டது. இந்த பேராபத்திலிருந்து எமது இளைஞர் சமுதாயத்தை மீட்டெடுக்க முடியுமா? என்ற கேள்விக் குறிக்கும் நாடு உள்ளானது.
அன்றைய ஆட்சியின் பயணப் பாதை சீரற்றது, தவறானது என உணரப்பட்ட நிலையில் நாட்டு மக்கள் ஆட்சி மாற்றம் ஒன்றின் அவசியத்தை உணர்ந்தனர். இதன் பிரதிபலன்தான் 2015 ஜனவரி 8ல் மக்கள் ஆட்சி மாற்றத்துக்காக அணி திரண்டனர். அன்று உருவான நூறு நாள் ஆட்சி அதன் பின்னர் நடந்த தேர்தலின் மூலம் தேசிய அரசு என்ற நல்லாட்சிக்கு மக்களாணை கிடைத்தது.
இந்த நல்லாட்சியில் அபிவிருத்தித் திட்டங்களில் இளைஞர், யுவதிகளை முழுமையாக உள்வாங்குவது என்ற முடிவுக்கு அரசு வந்தது. அதற்கான பொறுப்பை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தன் கையில் எடுத்துக் கொண்டார்.
இந்த அரசு கடந்த ஒருவருட காலத்துக்குள் இளைஞர், யுவதிகளை ஒரு தளத்துக்குக் கொண்டுவந்தது. சிதறுண்டு கிடந்த இளைஞர்களும், யுவதிகளும் மீண்டும் ஒன்றிணையத் தொடங்கினர். அந்தப் பலத்தினூடாக மீண்டும் இளைஞர் சக்தியை நாட்டின் அபிவிருத்திக்குப் பயன்பெறக் கூடிய விதத்தில் மாற்றியமைக்கும் வேலைத் திட்டத்தை ரணில் தலைமையிலான அரசு ஆரம்பித்தது.
யொவுன்புர இறுதி நாள் நிகழ்வில் ஜனாதிபதியுடன் கலந்து கொண்ட பிரதமர் இளைஞர், யுவதிகளின் எண்ணங்களுக்கு தைரியமூட்டும் விதத்தில் உரையாற்றினார்.
இரண்டு தசாப்தங்கள் இருளில் மூழ்கிக் கிடந்த இளைஞர்களின் எதிர்காலத்தை ஒளிமயமானதாக மாற்றுவதே தமது அரசின் இலக்கு எனவும் நாட்டின் எதிர்காலம் இளைஞர், யுவதிகளினாலேயே கட்டியெழுப்பப்பட வேண்டுமெனவும் அறைகூவல் விடுத்தார்.
புதிய உலகில் பிரவேசிப்பதற்கான கதவுகளை திறப்பதே அரசின் இலட்சியம் என ஜனாதிபதி தெரிவித்த நிலையில் பிரதமர் எதிர்காலத்துக்கு உரிமையுடையவர்களாக இளைஞர்களை மாற்றுவோம். உங்களது வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் நாட்டின் அபிவிருத்திக்காக செலவிடுங்கள்,
நாடு வளமடையும் போதுதான் நாட்டு மக்கள் தலைநிமிர முடியும் அதற்கான பாரிய பொறுப்பு உங்கள் தலைமேல் சுமத்தப்பட்டிருப்பதாக பிரதமர் குறிப்பிட்டிருக்கிறார்.
பிரதமரின் இந்தத் தூர நோக்கு, இலட்சியப் பயணம் வெற்றி இலக்கை எட்டும் என்ற நம்பிக்கையுடன் இளைஞர்களும், யுவதிகளும் ஒன்றாகக் கைகோர்த்து இந்தப் பயணத்தைத் தொடர வேண்டும் அதனையே நாடு எதிர்பார்க்கின்றது.