இழுவைப்படகு மீன்பிடியை தடுக்கும் சுமந்திரன் எம.பியின் சட்டமூலம் நாளை பாராளுமன்றில்

204

இயந்திர இழுவைப்படகு நடவடிக்கைகளை தடை செய்யும் பாராளுமன்ற உறுப்பினர் திரு. எம.ஏ. சுமந்திரனின் சட்டமூல பிரேரணை நாளை பாராளுமன்றில் எடுத்துக் கொள்ளப்படுகின்றது

பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட இயந்திர இழுவைப்படகு நடவடிக்கைகளை தடைசெய்யும் சட்டமூலம் நாளை செவ்வாய்க்கிழமை பாராளுமன்றில் எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

இந்தச் சட்டமூலமானது 1996ம் ஆண்டின் 2ம் இலக்கம் மீன்பிடி மற்றும் நீர்வளங்கள் சட்டத்தில் திருத்தங்களை வலியுறுத்தி நிற்கின்றது.

இந்தச் சட்டமூலமானது நிறைவேற்றப்படுகின்ற போது உலகிலே இந்த நடவடிக்கையை சிலியை தொடர்ந்து தடைசெய்கின்ற இரண்டாவது நாடாக இலங்கை காணப்படும்.

இந்த சட்டமூலமானது இலங்கை கடற்பரப்பில் இழுவை நடவடிக்கைகளை தடை செய்வதை வலியுறுத்துவதுடன் பின்வரும் அம்சங்களையும் உள்ளடக்கியுள்ளது.

1. இழுவை நடவடிக்கைகளுக்கு அனுமதி வழங்கும் சட்டங்களில் திருத்தங்களை கொண்டு வருதல்.

2. இலங்கை கடற்பரப்புகளில் இழுவை நோக்கங்களுக்காக இழுவை வலைகளை வைத்திருத்தல், கொள்வனவு செய்தல், இறக்குமதி செய்தல் போன்றவற்றை தடை செய்தல்

3. மேலே குறிப்பிடப்பட்ட நியமங்களை மீறி இழுவை நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகளை தெளிவாக குறிப்பிடுதல்.

வெளிநாட்டு மீனவர்கள் எமது கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபடுவதால் எமது மீனவர்கள், முக்கியமாக வடக்கு மீனவர்கள் பாரிய நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளார்கள்.

இதை தடுப்பதற்கான நாம் பல்வேறு நடவடிக்கைகளை நாம் மேற்கொண்டுள்ளோம். இதில் ஒருபடியாகவே இந்த சட்டமூலமானது பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த இழுவை நடவடிக்கையால் மிகவும் இலகுவில் அழியக்கூடிய கடல் வளங்களான அருகி வரும் கடல் உயிரினங்களும் பவளப்பாறைகளும் ஒரு சில விநாடிகளில் அழிக்கப்படுகின்றன.

இந்த காரணிகளுக்காகவே 2015ம் ஆண்டு முதல் தடவையாக உலகில் சிலி நாடானது தனது கடல் எல்லையில் இந்த நடவடிக்கையை முற்றாக தடை செய்தது.

இந்தோனேசியா, நியூசீலாந்து, பெலிஸ், மற்றும் ஐக்கிய அமெரிக்கா போன்ற நாடுகளும் தமது கடல் எல்லைகளில் இழுவை நடவடிக்கைகளை மட்டுப்படுத்தி உள்ளது.

அதைப் போலவே இந்தியாவின் தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலங்களில் இந்த பாரிய ஆபத்துக்களை குறைத்துக் கொள்வதற்காக மீன்பிடிப்பதற்கு வருடாந்த தடை நடைமுறைகளை கையாண்டு வருகின்றன

எனவே இந்த சட்டமானது நடைமுறைப் படுத்தபடுகின்ற சந்தர்ப்பத்தில் ஆழ்கடல் இழுவையானது தடை செய்யப்படுவதுடன் அது ஒரு குற்றமாக கொள்ளப்படும். குற்றவாளியாக காணப்படுபவர் இரண்டு வருட சிறைத் தண்டனையை பெறுவதோடு ரூபா 50,000 தண்டப் பணமாக செலுத்த வேண்டிய நிலை ஏற்படும்.

 

SHARE