இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு செயற்பாடுகளை நாம் வலுவாக கண்டிக்கின்றோம்.

140
இஸ்ரேலின் செயற்பாடுகளுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலஸ்தீனத்திற்கான ஐ.நா. தூதுவர் றியாத் மன்சூர் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, காஸா மீதான இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு செயற்பாடுகளை வன்மையாக கண்டிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

காஸா எல்லையில் பலஸ்தீனர்களுக்கு எதிரான இஸ்ரேலின் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள நிலையிலேயே அவர் நேற்று (செவ்வாய்க்கிழமை) இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு செயற்பாடுகளை நாம் வலுவாக கண்டிக்கின்றோம்.

சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையிலான இஸ்ரேலின் செயற்பாட்டிற்கு எதிராக ஐ.நா. பாதுகாப்பு சபை அதன் பொறுப்பை சரிவர நிறைவேற்ற வேண்டும் என விரும்புகிறோம்.

ஆனால், துரதிஷ்டவசமாக பாதுகாப்பு சபை முடங்கிக் கிடப்பதுடன், அதன் பொறுப்பை ஏற்கவும் சபை தவறியுள்ளது. ஆனால், இது தொடர்பாக பாதுகாப்பு சபைக்கு நாம் தொடர்ந்து அழுத்தம் கொடுப்போம்” எனத் தெரிவித்தார்.

SHARE