ஈழத் தமிழ் மக்களால் தந்தை செல்வா என அழைக்கப்பட்ட எஸ். ஜே. வி. செல்வநாயகத்தின் நினைவு தினம் இன்றாகும். ஈழத்துக் காந்தி என பலராலும் அழைக்கப்பட்ட தந்தை செல்வா ஈழத் தமிழர்களின் உரிமைப் போராட்டத்தின் முன்னோடித் தலைவராவர்.
வழக்கறிஞராகவும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்த செல்வநாயகம் மூன்று தசாப்தங்களுக்கு மேல் அரசியல் தலைவராக செயற்பட்டார்.
மலேசியாவின் ஈபோ நகரில் பிறந்த செல்வநாயகம் யாழ்ப்பாணம் தெல்லிப்பழையில் வாழ்ந்தார்.
ஒரு குடிசார் வழக்கறிஞரான இவர் ஜீ. ஜீ. பொன்னம்பலம் அவர்களின் தலைமையின்கீழ் இருந்த அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி மூலம் அரசியலில் நுழைந்தார்.
இலங்கை விடுதலை பெற்ற பின்னர் அமைந்த முதல் அரசாங்கத்தில் சேர்வது மற்றும் இலங்கை இந்தியர் பிரஜாவுரிமைச் சட்டம் முதலியன பற்றி எழுந்த கருத்து வேறுபாடுகளைத் தொடர்ந்து, வேறும் சில தலைவர்களுடன் சேர்ந்து கட்சியை விட்டு விலகிய செல்வநாயகம் தமிழரசுக் கட்சியை உருவாக்கினார்.
இலங்கையின் இனப்பிரச்சினைக்குத் தீர்வாக கூட்டாட்சி அரசியல் முறையை வற்புறுத்திவந்தார். 50 களின் இறுதிப் பகுதியிலும், 60களிலும், 70களிலும், தனது கட்சியை வெற்றிப் பாதையில் வழிநடத்திச் சென்றவர் இவர்.
சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் என்ற முழுப்பெயர் கொண்ட கிறித்தவரான செல்வநாயகம், 90மூக்கு மேல் இந்துக்களைக் கொண்ட காங்கேசன்துறை நாடாளுமன்றத் தொகுதியில் நீண்ட காலம் தொடர்ச்சியாக வெற்றி பெற்று வந்தார்.
இவர் இலங்கை அரசுகளுடன் தமிழர் உரிமை சார்பில் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்த அனுபவத்தால் தமிழர் ஆயுதப் போராட்டத்தை நடத்த நேரிடும் என்றும் எச்சரித்தார்.
இலங்கை அரசுகளுடன் நடத்திய பேச்சுவார்த்தைகளும் சாத்வீகப் போராட்டம் சார்ந்த இவரது அரசியல் அனுபவங்கள் தனிநாடே தமிழருக்கு தீர்வு என்ற நிலையை உருவாக்கியது.