ஈழ அகதி மீதான தாக்குதலுக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என கோரிக்கை!

319

இலங்கை அகதி மீது தாக்குதல் மேற்கொண்ட அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச்செயலாளர் பாரதி, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் வடக்கு மண்டல அமைப்பாளர் கரு. அண்ணாமலை, தமிழ் தேசிய பேரியக்கத்தின் தலைவர் அருண் பாரதி ஆகியோர் கூட்டாக இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளனர்.

சென்னையில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர்கள் இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளனர்.

இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்கள்,

கும்மிடிப்பூண்டியில் உள்ள அகதிகள் முகாமில் இலங்கை அகதிகளான சுபேந்திரன், கண்ணன் ஆகிய இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து தகவல் கிடைத்த சிப்காட் பொலிஸ் அதிகாரிகள் அவர்கள் இருவரையும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு விசாரணை என்ற பெயரில் அவர்கள் இருவரிடமும் கடுமையாக கடந்து கொண்டார்.

இதில் சுபேந்திரனின் இரண்டு கால்களும் செயல்பட முடியாத அளவில் உடைக்கப்பட்டுள்ள அதேவேளை, கண்ணனுக்கு உடல் முழுதும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த இருவருக்கும் முறையான சிகிச்சை அளிக்கப்படாமல் மீண்டும் முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய அதிகாரிகள் அனைவரும் கொலை முயற்சி வழக்கில் கைது செய்ய வேண்டும்.

அத்துடன், மதுரை அருகே உச்சம்பட்டி முகாமின் இலங்கைத் தமிழ் அகதி ரவீந்திரனைத் தற்கொலைக்குத் தூண்டிய வருவாய்த் துறை அதிகாரியை கைது செய்து, குற்ற வழக்கு தொடர வேண்டும்.

இலங்கைத் தமிழ் அகதிகளை நடைமுறையில் குற்றப் பரம்பரையாக நடத்துவதைத் கைவிட வேண்டும். அவர்களின் மனித உரிமைகளுக்கும் கண்ணியத்துக்கும் தக்க மதிப்பளிக்க வேண்டும்.

தமிழ்நாட்டு இலங்கை தமிழ் அகதி முகாம்கள் மீதான வருவாய்த் துறை, உளவுத்துறை, கியூ பிரிவுக் காவல்துறைக் கட்டுப்பாட்டை விலக்கிக்கொள்ள வேண்டும்.

இதேவேளை, இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இடைக்கால இந்திய குடியுரிமை வழங்க வேண்டும்.

இந்திய அரசு திபெத் உள்ளிட்ட பிற நாட்டு அகதிகளோடு ஒப்புநோக்கின் இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு எதிராகப் பாகுபாடு காட்டுவதை கைவிட வேண்டும்.

தமிழ்நாட்டில் தொடர்ந்து சிறை முகாம்களாக இயங்கி வரும் இலங்கைத் தமிழ் அகதிகளுக்கான சிறப்பு முகாம்களை மூட வேண்டும்.

ஒரு சில தொண்டு நிறுவனங்களைத் தவிர வேறு எந்த அமைப்பும் முகாம்களுக்குள் சென்று இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு உதவக் கூடாது என்ற நடைமுறையினை தற்போதாவது நீக்க வேண்டும்.

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் பொறிக்கப்பட்டுள்ள வாழ்வுரிமை, தன்னுரிமை, கருத்துரிமை உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் அனைத்தும் அகதிகளுக்கு உறுதி செய்ய வேண்டும்.

கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் இலங்கைத் தமிழ் அகதிகளுக்கும் உரிய பங்கு கிடைக்கச் செய்ய வேண்டும் என அவர்கள் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர்.

SHARE