உங்களைப் போன்று இந்நாட்டு தலைவர்கள் அனைவரும் பேசினால் நாடு உன்னத நிலையை அடையும் இவ்வாறு தெரிவித்ததர் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்.
வளலாயில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற நிகழ்வில் முதலில் ஆங்கில மொழியில் பேசிய அவர் பின்னர் ஜனாதிபதி முன்னிலையில் சிங்கள மொழியில் உரையாற்றிய போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் ஜனாதிபதி அவர்களே, சில வார்த்தைகளை உங்கள் மொழியில் உங்களுக்கு எடுத்துச்சொல்ல விரும்புகின்றேன்.
அண்மையில் உங்கள் கட்சியின் கூட்டமொன்றில் பேசியிருந்தீர்கள். அப்பேச்சு மிகவும் சிறப்பு மிக்கதாக அமைந்திருந்தது. அதேபோன்று இந்த நாட்டின் தலைவர்கள் அனைவரும் பேசத் தலைப்பட்டால் இந்த நாடு 1948 ஆம் ஆண்டில் இருந்தது போல் மிக உன்னத நிலையை அடையக்கூடும் என்பது எனது கருத்து. ஏன் 1948 ஆம் ஆண்டைக் குறிப்பிடுகின்றேன் என்று நீங்கள் நினைக்கக் கூடும். அந்த காலகட்டத்தில்தான் சிங்கப்பூர் பிரதமர் லி குவான்யூ கூறியிருந்தார் “நான் விரைவில் சிங்கப்பூரை ஓர் இலங்கையாக மாற்றிக் காட்டுவேன்” என்று.
அந்தக் காலகட்டத்தில் உலக நாடுகள் இலங்கையை எவ்வாறு மதித்தன என்பதற்கு இது ஓர் எடுத்துக் காட்டு. ஜனாதிபதி அவர்களே உங்கள் அண்மைய பேச்சுக்கு எமது மனமார்ந்த நன்றிகள். – என்றார். இதனையடுத்து விக்னேஸ்வரனுடன் உரையாடிய முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க நீங்கள் மூன்று மொழிகளிலும் சிறப்பாக உரையாற்றுகின்றீர்கள் என பாராட்டினார். அத்துடன் தம்மால் அவ்வாறு உரையாற்ற முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.