உசேன் போல்ட்க்கே சவால் கொடுத்த சம்பியன்

247

உசேன் போல்ட் – மின்னல் மனிதன். மொத்த உலகையும் 10 விநாடிகள் தன்னை மட்டுமே பார்க்க வைத்த ஒரு தடகள் சகாப்தம். தொடர்ந்து 3 ஒலிம்பிக் தொடர்களில் தங்கம் வென்று சரித்திரம் படைத்தவர். அவர் ஓடிய அதே களத்தில் இன்னுமொரு உசேன் போல்டை உலகம் கண்டுகளித்துள்ளது. ஆனால் போல்டைப் போல இரண்டு கால்களால் பறந்தவரல்ல இவர். உடலளவில் குறைகள் கொண்டிருந்தாலும் சோதனைகள் வென்று சாதனை படைத்த நாயகர்கள் பங்கேற்ற பாராலிம்பிக் தொடரில் இரண்டாவது ஒலிம்பிக் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார் இங்கிலாந்தைச் சார்ந்த ஜானி பீகாக்.

பாராலிம்பிக் தொடர். மாற்றுத்திறனாளிகளுக்கான உச்சபட்சத் தொடர். வாழ்க்கையில் எத்தனையோ இழந்தாலும் நம்பிக்கையை இழக்காமல் போராடிக் கொண்டிருக்கும் 4,300 வீரர்கள் பங்கேற்கும் 15வது பாராலிம்பிக் தொடர் ரியோவில் நடந்து வருகிறது. இத்தொடரில் நடந்த T44 100 மீட்டர் ஓட்டப்பந்தயப் போட்டியில் 10.81 விநாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்த வெற்றி பெற்றுள்ளார் பீகாக். பாராலிம்பிக் 100 மீட்டர் ஓட்டத்தில் பல வகைகள் உண்டு. T44 என்பது ஒற்றைக் காலில் மட்டும் குறைபாடு கொண்ட வீரர்கள் ஓடுவது. 2012ம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற பீகாக் இரண்டாவது முறையாக தங்கம் வென்று அசத்தியுள்ளார்.

தனது ஐந்து வயதிலேயே மூளைக்காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்ட பீகாக்கிற்கு வலது காலில் தசைகள் பாதிக்கப்பட்டதால் காலை இழக்க நேரிட்டது. சிறு வயதில் கால்பந்தாட்ட வீரராக ஆசைப்பட்டார் பீகாக். ஆனால் இப்படியொரு சிக்கல் ஏற்படவே அவரது மனம் வாடியது. ஆனால் உடல் குறையுள்ளவர்களுக்குத் தனியாக விளையாட்டுப் போட்டிகள் இருக்கிறது என்பதை தான் சிகிச்சை பெற்ற மருத்துவமனையிலேயே தெரிந்து கொண்ட பீகாக், உடனே வெகுண்டெழுந்தார். செயற்கைக் காலினை நம்பிக்கை என்னும் கயிறால் இருக்கிக்கட்டி வேதனைகளையும் சோதனைகளையும் முன்னே ஓடவிட்டு துறத்தத்தொடங்கினார்.

1996 அட்லான்டா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற டேன் ஃபாஃபின் பயிற்சியில் தன்னை மெருகேற்றிய பீகாக் வலிகளை தன் பின்னால் ஓடவிட்டு சாதனைகளைத் துறத்த ஆரம்பித்தார். விளைவு 17 வயதிலேயே உலக சாதனை படைத்தார் பீகாக். அதன்பின்பு பல உலக போட்டிகள், ஐரோப்பிய போட்டிகள் என அனைத்திலுமே பீகாக்கின் ராஜ்ஜியம் தான்.

ரானுவ வீரரான அவரது தாத்தா தான் அவருக்கே எப்போதும் துணை. பீகாக் பிறப்பதற்கு முன்பே அவரது தாத்தா இறந்துவிட்டார். ஆனால் தனது தாத்தாவைப் பற்றியும் அவரது விளையாட்டு ஆர்வத்தைப் பற்றியும் தெரிந்து கொண்ட பீகாக் அவரை மிகவும் நேசிக்கத் தொடங்கினார். ரானுவ வீரரான அவரது தாத்தாவின் மெடலை பீகாக் எப்போதுமே தனது கால் பிளேடுடோடு இனைத்துக் கட்டியிருப்பாராம்.

லண்டன் ஒலிம்பிக்கில் 10.90 விநாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்த தங்கம் வென்ற பீகாக் இந்த முறை தங்கம் வெல்வது கடினம் என்றே அனைவரும் நினைத்தனர். காரணம் கடந்த ஆண்டு அவர் காயத்தால் அவதிப்பட்டு பல போட்டிகளில் இருந்து விலகினார். கடந்த சீசனில் 10.97 விநாடிகளில் ஓடியதே அவரது சிறப்பாக இருந்தது. அதனால் அனைவரும் பீகாக்கின் வெற்றியை சந்தேகித்தினர். பீகாகே தன்னால் முடியும் என்று நம்பவில்லை என்று தான் குறிப்பிட்டுள்ளார். “ கடந்த சீசனில் என்னுடைய சிறப்பான செயல்பாடான 10.97 விநாடிகள் எனக்குத் திருப்தியாக இல்லை. அதுமட்டுமல்லாமல் ஜாரிட்டின் ஃபார்ம் அனைவரின் பார்வையையும் அவரது பக்கம் திருப்பியது. அவர் ஓடிய விதத்தைப் பார்த்த போது 10.50 விநாடிகளிலேயே கடந்துவிடுவாரோ என்று நினைத்தேன். என்னால் முடியும் என்று எனக்கே நம்பிக்கை இல்லாமல் தான் இருந்தது. பந்தயத்தின் தொடக்கத்தில் சற்று சரியாக தொடங்காத போதும் என்னை நானே தள்ளிக்கொண்டிருந்தேன். எனது அனுபவம் என்னை வெற்றி நோக்கி அழைத்து வந்துவிட்டது” என்று மகிழ்ச்சி பொங்கக் கூறினார் பீகாக். அனைவரும் எதிர்பார்த்த ஜாரிட்டால் 5ம் இடமே பிடிக்க முடிந்தது.

லண்டன் ஒலிம்பிற்குக்கு முன்னால் போல்டிற்கும் இப்படியொரு நிலை ஏற்பட்டது. 2011ல் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் போல்ட் தகுதி நீக்கம் செய்யப்பட சக நாட்டவரான யோகன் பிளேக் வெற்றி பெற்றார். அதற்கடுத்த ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக்கில் அனைவரும் பிளேக்கும் காட்லினும் போல்டிற்கு மிகப்பெரிய சவால் என்று கருத, வழக்கம் போல தனது பானியிலேயே அசால்டாக வென்று 100 மீட்டர் ஓட்டத்தில்  இரண்டாவது ஒலிம்பிக் தங்கத்தை வென்று காட்டினார். அவரைப் போலவே பீகாக்கும் அனைத்து சந்தேகங்களையும் உடைத்தெறிந்து பாராலிம்பிக் சாதனையோடு தனது இரண்டாவது தங்கத்தை வென்று அசத்தியுள்ளார்.

இப்போதைக்கு அடுத்த ஆண்டு நடக்கும் உலக சாம்பியன்ஷிப் போட்டி தான் தன்னுடைய இலக்கு என்று கூறும் பீகாக், 2020 டோக்கியோ பாராலிம்பிக்கில் தங்கம் வென்று போல்டைப் போலவே 100 மீட்டர் ஓட்டத்தில் ஹாட்-டிரிக் சாதனை படைப்பார் என்று எதிர்பார்ப்போம்.

SHARE