80 கிலோ எடையைக் குறைக்க ஜிம்முக்குப் போவது, பேலியோ டயட் இருப்பது, ஏரோபிக்ஸ் செய்வது எனக் கடுந்தவம் இருந்துகொண்டிருப்பவர்கள் இமான் அஹமது அப்துலாட்டியைப் பார்த்து ஆறுதல் அடைந்துகொள்ளுங்கள்.
யார் அவர் என்கிறீர்களா? 36 வயது எகிப்துக்காரரான இமான்தான் உலகில் அதிக எடை உள்ள பெண். எடை அப்படி ஒன்றும் அதிகம் இல்லை, ஜஸ்ட் 500 கிலோதான்.
அதிக உடற்பருமன் காரணமாக கடந்த 25 வருடங்களாக வீட்டைவிட்டு வெளியே வராத, இவர் தற்போது பல்வேறு நோய்களால் உயிருக்கு ஆபத்தான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.
இவர் விரைவில் உடல் கொழுப்பை நீக்கும் அறுவைசிகிச்சைக்காக மும்பை வருகிறார்.
மும்பையை சேர்ந்த பேரியாட்ரிக் அறுவை சிகிச்சை நிபுணர் முஃபசல் லக்டாவால் இமானின் உடற்பருமனைக் குறைக்க, அறுவைசிகிச்சை செய்ய உள்ளார்.
பேரியாட்ரிக் அறுவைசிகிச்சை
“பேரியாட்ரிக் அறுவைசிகிச்சை செய்துகொள்பவர்களது, குறைந்தபட்ச பி.எம்.ஐ. அளவு 40-க்கு மேலும், சர்க்கரை நோய் போன்ற மருத்துவப் பிரச்னை உள்ளவர்களுக்கு பி.எம்.ஐ. அளவு 35-க்கு மேலும் இருக்க வேண்டும்.
இமானுக்கு அடுத்தடுத்து பல அறுவைசிகிச்சைகள் செய்ய வேண்டும். இந்த அறுவைசிகிச்சைகள் மூலமாகப் படிப்படியாக அவரது உடலில் சேர்ந்துள்ள அதிகக் கொழுப்பை அகற்ற எங்கள் குழு திட்டமிட்டுள்ளது.
இந்த அறுவைசிகிச்சைகள் மிகவும் சிக்கலானவை. அறுவைசிகிச்சையின்போது நுரையீரல் பாதிப்பு, தொற்று மற்றும் ரத்தம் உறைதல் போன்ற பிரச்னைகள் ஏற்பாடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
உயிருக்கு ஆபத்தான இந்த அறுவைசிகிச்சை மேற்கொள்ளும்போது ஏதாவது சிக்கல் ஏற்பட்டால் இமான் மரணமடையவும் நேரிடலாம்.
இருந்தாலும் இவற்றைச்செய்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் இமானின் உடல்நிலை இருப்பதால், எங்கள் மருத்துவக் குழு இதனை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு தயாராகி வருகிறது.
முதற்கட்டமாக இமானின் வயிற்றில் சேர்ந்துள்ள அதிகக் கொழுப்பை வெளியேற்ற ஸ்லீவ் அறுவைசிகிச்சை (Sleeve Gastrectomy) மேற்கொள்ளப்படுகிறது.
இதன்முலம், அவரது அடிவயிற்றில் சேர்ந்துள்ள 40 சதவிகித கொழுப்பு அகற்றப்படுகிறது. இதனால் அவரது குடலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.
இந்த அறுவைசிகிச்சையின்போது வயிற்றில் உள்ள பசியைத் தூண்டும் ஹார்மோன் சுரப்புப்பகுதி அகற்றப்படும். இதன் விளைவாக, சுவை ஏற்படுத்தும் உணர்வு குறையும்.
இதனால் அவர் சாப்பிடும் அளவு குறையும். அறுவைசிகிச்சைக்குப்பின், உணவின் அளவு குறைவதால், உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களும் குறையும். இதனை ஈடுசெய்ய ஊட்டச்சத்து நிபுணர், கொழுப்பற்ற ஊட்டச்சத்து உணவுகளைப் பரிந்துரைப்பார்.
அடுத்தடுத்த அறுவைசிகிச்சைகளில் அவரது கை , கால்களில் உள்ள கொழுப்புகள் அகற்றப்படும். 2017-ம் ஆண்டு, இவ்வாறான தொடர் இடைவெளியில் நான்கு முதல் ஐந்து அறுவைசிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர், இமான் 400 கிலோ எடையை இழந்துதிருப்பார்.
அதன்பிறகு உணவுக்கட்டுப்பாடு மற்றும் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்ட உடற்பயிற்சிகள் மூலமாக அவரால் மேலும் எடையைக் குறைக்க முடியும். இன்னும் இரண்டு வருடங்கள் கழித்து இமான், மற்ற பெண்களைப்போல, ஒரு சராசரிப் பெண்ணாக வலம்வருவார் என்ற நம்பிக்கை எங்கள் மருத்துவக்குழுவுக்கு உள்ளது என்று நம்பிக்கையோடு கூறுகிறார் பேரியாட்ரிக் அறுவைசிகிச்சை நிபுணர் முஃபசல் லக்டாவால்.