உடுவில் மகளிர் கல்லூரியின் பதற்றமான நிலைமையால் மாணவிகளின் வருகை குறைவு!

281

 

யாழ்,பிரபல கல்லூரிகளில் ஒன்றான உடுவில் மகளிர் கல்லூரியில் நீடித்து வந்த பதற்றமான சூழ்நிலை மல்லாகம் நீதிமன்ற நீதவான் ஏ. யூட்சனின் நேரடித் தலையீட்டால் நேற்று முன்தினம் வியாழக்கிழமை(08) பிற்பகலுடன் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

கல்லூரியின் முன்னாள் அதிபர், தற்போதைய அதிபர், ஆசிரியர்கள், மாணவிகள் ஆகியோரைக் கல்லூரியில் சந்தித்துக் கலந்துரையாடிய நீதவான் எந்தவிதமான குழப்பங்களும் ஏற்படாமல் இனிப் பாடசாலை ஒழுங்கான முறையில் நடைபெறும் என ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார்.

எனினும் நேற்று (09) புதிதாகப் பதவியேற்ற அதிபரின் தலைமையில் கல்லூரியின் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள் ஆரம்பமாகிய போது 1200 மாணவிகள் மொத்தமாகக் கல்வி பயிலும் இந்தக் கல்லூரியில் சுமார் 70 வரையான மாணவிகளே வருகை தந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பெற்றோர்கள் அச்சம் காரணமாகவே தமது பிள்ளைகளைக் கற்றல் நடவடிக்கைகளுக்காக கல்லூரிக்கு அனுப்ப மறுத்து வருகின்றனர்.

இதேவேளை, நேற்றைய தினம் யாழ். வருகை தந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்த உடுவில் மகளிர் கல்லூரி மாணவிகள் கொண்ட ஒரு குழு தம்மீது இடம்பெற்ற தாக்குதல் தொடர்பாகக் கண்ணீர் விட்டு அழுததுடன் கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றையும் கையளித்திருந்தனர்.

இந்த நிலையில் நேற்று யாழ். மத்திய கல்லூரியில் இடம்பெற்ற 200வது நிறைவுக் கொண்டாட்டத்தின் போது கலந்து கொண்டிருந்த வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்கினேஸ்வரனை சந்தித்து உடுவில் மகளிர் கல்லூரி மாணவிகளின் விவகாரம் தொடர்பில் ஆராய்ந்ததுடன் வடமாகாண முதலமைச்சர் தலைமையில் விசேட விசாரணைக் குழுவொன்றை அமைத்து அறிக்கை சமர்ப்பிக்குமாறும் கேட்டுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

SHARE