உடுவே தேரரின் கைது கவலையளிக்கின்றது – அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல

291
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உடுவே தம்மாலோக தேரர் கைது செய்யப்பட்டுள்ளமை தனக்கு கவலையளிப்பதாக உயர்கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

உடுவே தம்மாலோக தேரரின் கைது தொடர்பாக நேற்று நாடாளுமன்றத்தில் விமல் வீரவன்ச மீண்டும் கேள்வியெழுப்பினார்.

நேற்று முன்தினம் இது தொடர்பான வினாவுக்கு நேற்றைய தினம் பதிலளிப்பதாக ஆளுங்கட்சி சார்பில் உறுதியளிக்கப்பட்டதை நினைவூட்டிய அவர், உடுவே தேரர் கைது குறித்து ஆளுங்கட்சி இன்று சபையில் விளக்கமொன்றை அளிப்பதாக நேற்று உறுதியளிக்கப்பட்டது. ஆனால் உடுவே தம்மாலோக தேரர் மட்டுமன்றி, இன்னும் பல பிக்குமாரும் இந்த அரசாங்கத்தினால் கைது செய்யப்பட்டு சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டுள்ளனர் என்று சுட்டிக்காட்டினார்.

இதற்குப் பதிலளித்த ஆளுங்கட்சியின் முதல்வரும், உயர்கல்வி அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல, இது நீதிமன்ற வழக்கு தொடர்பான விவகாரம். அது குறித்து ஏதேனும் கருத்து வெளியிட்டால் உடுவே தம்மாலோக தேரரை அவமதித்தது போலாகி விடும். எனவே அதுகுறித்து பேசாமல் இருப்பதே சிறந்தது என்று பதிலளித்தார்.

எனினும் மீண்டும் குறுக்கிட்ட விமல் வீரவன்ச, உடுவே தேரர் கைது செய்யப்பட்டிருப்பதுதான் அவருக்கு மேற்கொள்ளப்பட்டுள்ள பாரிய அவமானமாகும். எதிர்வரும் நாட்களில் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கிக் கொள்ள அரசாங்கம் உத்தேசித்துள்ளது. அதன் பின்னர் பாரிய குற்றச் செயல்களில் தொடர்புடைய குற்றவாளிகள் இலகுவாகத் தப்பித்துக் கொள்வார்கள் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர் கிரியெல்ல, உடுவே தேரர் விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளது. எனினும் அவர் கைது செய்யப்பட்டிருப்பது எனக்குப் பெருங்கவலை அளித்துள்ளது. ஆனால் நீதிமன்ற விவகாரத்தில் நாம் தலையிட முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

luxman-55994117-720x480

 

SHARE