உண்ணாவிரதமிருத்தல் என்று கூறுவது வெறுமனே வார்த்தையல்ல. ஒரு நாட்டின் அல்லது சமூகத்தின் விடுதலைக்காக, ஏதோவொரு காரணத்தை நோக்காகக்கொண்டு உயிரைக்கூட துச்சமாகக்கருதி உணவு, ஆகாரம் ஏதுமின்றி தான்கொண்ட இலட்சியத்தில் உறுதி தளராமல் மேற்கொள்ளப்படுவதே உண்ணாவிரதமாகும். இவ்வாறான உண்ணாவிரதங்களை மேற்கொண்ட வர்களின் வரிசையில் உலக அளவில் இன்றும் பேசப்படுபவர்கள் ஒருசிலரே. அவ்வரிசையில் ஒரு நாட்டின் விடுதலைக்காக வெள்ளையர்களை எதிர்த்து உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்ட மகாத்மா காந்தியடிகளை இன்றும் உலகம் போற்றுகின்றது.
அதேபோல ஈழத்திலே இந்திய இராணுவம் இலங்கையில் இருந்து வெளியேறவேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்து தியாகி திலீபன் அவர்களால் யாழ்ப்பாணம் நல்லூரில் உண்ணாவிரதம் மேற்கொள்ளப்பட்டு இறுதியில் அவர் வகுத்துக்கொண்ட கொள்கையில் இருந்து சற்றும் தளராமல் தமிழினத்தின் விடுதலைக்காக தனது உயிரையும் துறந்த சம்பவம் மாறாத வடுவாக தமிழர் மனங்களில் பதிந்துள்ளது. அதுமட்டுமல்லாது இந்திய இராணுவம் இலங்கையில் இருந்து வெளியேறுவதற்கு இச்சம்பவமே காரண மாக இருந்தது. நீர், ஆகாரம் அருந்தி உண்ணாவிரதமிருப்பது ஒருவகை. ஆனால் சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பது எனக்கூறிவிட்டு நீர் அருந்தி, சேலைனைப் பெற்றுக்கொண்டு உண்ணாவிரதமிருப்பது தமிழினத்தின் உண்ணாவிரத வரலாற்றை கொச்சைப்படுத்தும் நிகழ்வாகவே கருத முடிகிறது.
உண்மையில் பொருளாதார மத்திய நிலையம் அமைப்பது தொடர்பில் உண்ணாவிரதத்தினை மேற்கொண்டிருந்த ஓமந்தைப் பிரதேசத்தினைச் சேர்ந்த தா.மகேஸ்வரன் என்பவர் சேலைனைப் பெற்றுக்கொண்டு உண்ணாவிரதம் இருந்தமை என்பது உண்ணாவிரதத்தினை கொச்சைப்படுத்தும் விடயமாகும். சேலைன் அல்லது நீர் பயன்படுத்துவதன் அர்த்தம் உண்ணாவிரதம் முடிந்துவிட்டது என்பதே. இச்சம்பவத்தின் பின்னணியில் ஒருசில ஆயுதக்கட்சிகளும், தமிழரசுக் கட்சியும் செயற்பட்டிருப்பது தெரிய வந்துள்ள அதேநேரம், தமது சுயநல அரசியலுக்காக செயற்படும் கட்சிகள் சற்று அவதானமாகச் செயற்படவேண்டும்.
தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் சில அரசியல்வாதிகள் பணத்தினைத் தருவதாகக்கூறி அவர்களை உற்சாகப்படுத்தி உண்ணாவிரதத்திற்கும், ஆர்ப்பாட்டங் களுக்கும் அழைத்துச்செல்வதை அவதானிக்கமுடிகிறது. வவுனியாவில் இடம்பெற்ற உண்ணாவிரதத்தினைப் பொறுத்தவரையில், ஓமந்தையில் பொருளா தார மத்திய நிலையம் அமையவேண்டும் என்பது முன்வைக்கப்பட்டது. தமிழ் மக்கள் மத்தியில் பௌத்த விகாரைகள் வருகை, மீள்குடியேற்றம், அத்துமீறிய குடியேற்றம், அதிகாரப்பரவலாக்கல், இனப்பிரச்சினைக்கான தீர்வு என பல விடயங்கள் இன்னமும் தீர்க்கப்படவில்லை. இதனைப் பெற்றுத்தரும் வகையில் யாராவது உண்ணாவிரதமிருந்தார்களா? தமிழ் அரசியல்கைதிகளுக்காக உண்ணா விரதமிருக்கப்போவதாகக் கூறிய தமிழ் அரசியல்வாதிகள் உண்ணா விரதமிருந்தார்களா? மக்களைத் தூண்டி விட்டு உண்ணாவிரதமிருப்பதைவிட அரசியல்வாதிகளாகிய நீங்கள் உண்ணா விரதமிருந்து மரணித்துப்போகலாம். அத னால் தமிழ் மக்களுக்குத் தீர்வு கிடைத்தால் உண்மையில் உங்களது பெயர்கள் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும்.
தமிழ் மக்களைத் தூண்டிவிட்டு சில தமிழ் அரசியல்வாதிகள் பின்னின்று செயற்படுவதால் என்ன பயன்? தமிழர் வரலாற்றில் உண்ணாவிரதமிருந்து உயிர்துறந்த திலீபனின் தியாகத்தை நாம் கொச்சைப்படுத்தமுடியாது. மக்களைத் தூண்டிவிட்டு, உண்ணாவிரதம் மேற்கொள்ளும் பாணி நிறுத்தப்படவேண்டும் என்பதே எமது வேண்டுகோள்.