உண்ணாவிரதம் இருந்த கைதிகளில் ஆறு பேர் வைத்தியசாலையில்

264

தம்மை விடுவிக்கக் கோரி, வெலிகடை மகசின் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டு வந்த தமிழ் அரசியல் கைதிகளில் ஆறு பேர் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கைச் சிறைகளில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் மேற்கொண்டுள்ள உண்ணாவிரதம் இன்று மூன்றாவது நாளாக தொடர்கின்றது.

தமது விடுதலை குறித்த கோரிக்கையை முன்வைத்தே இவர்கள் இந்த நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.

இதன்படி கொழும்பு மெகசின் சிறைச்சாலை, அனுராதபுரம், மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் மற்றும் களுத்துறை ஆகிய சிறைகளில் வாடும் அரசியல் கைதிகளே இவ்வாறு போராடி வருகின்றனர்.

இதேவேளை, நல்லாட்சியின் எடுத்துக்காட்டாக தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை தொடர்ந்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னெடுக்கும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு சிறைச்சாலையில் உண்ணாவிரத போராட்டத்தினை மேற்கொண்டு வரும் தமிழ் அரசியல் கைதிகளை பாராளுமன்ற உறுப்பினர் இன்று காலை சென்று பார்வையிட்டார்.
இதன் பின்னர் ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்து தெரிவித்த அவர்,

“நீண்டகாலமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் விடுதலையாகி தமது குடும்பத்தினருடன் சுதந்திரமாக வாழவேண்டும் என்று கருதுகின்றனர்.

சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளில் ஏழு குடும்பஸ்தர்கள் உள்ளனர். அவர்கள் தமது பிள்ளைகளின் கல்வி தொடர்பில் பெரும் அவலுடன் உள்ளனர். அத்துடன் பிள்ளைகளுக்கு சரியான கல்வியை வழிகாட்டியவர்கள் கூட அங்கு உள்ளனர்.

இவ்வாறு உள்ள தமிழ் அரசியல் கைதிகள் பொதுமன்னிப்பு அடிப்படையில் விடுதலை செய்யப்பட வேண்டும். அவர்களை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை அரசியல்வாதிகள் மேற்கொள்ள வேண்டும். தங்களை யாரும் கவனிப்பதில்லையென்ற ஆதங்கமும் அவர்களிடம் உள்ளது.

தற்போது ஒரு நல்லாட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, நல்லாட்சியின் கீழ் ஜனாதிபதி பல்வேறு செயற்றிட்டங்கள் மேற்கொண்டு வரும் வேளையில் அதன் அடையாளமாக போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் சிறை பிடிக்கப்பட்டுள்ள கைதிகளுக்கும் சிறந்த ஒரு முடிவினை எடுக்கவேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு வலியுறுத்தி வருகின்ற செய்தியை சிறைக் கைதிகளிடம் தெரிவித்தேன்.

பொது மன்னிப்பு அடிப்படையிலோ வேறு வழிகளிலோ சிறை கைதிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கையினை தமிழ் தேசிய கூட்டமைப்பு மேற்கொண்டுவருகின்றது.

அற்ப சொற்ப விடயங்களுக்காக கைதுசெய்யப்பட்டு நாங்கள் அடைக்கப்பட்டுள்ளோம். விரைவில் விடுதலை பெற்று ஒரு ஜனநாயக சூழலில் வாழ்க்கையை நடாத்தவேண்டும் என்பதில் பெரும் அக்கரையாகவுள்ளனர், என்றார்.

SHARE