உயரதிகாரிகளை அச்சுறுத்துவதற்கு நல்லாட்சி துணைபோகின்றதா?

183

கல்முனை மாநகர சபையின் ஆணையாளர் ஜே.லியாகத் அலி, சாய்ந்தமருது நகரத்தில் வர்த்தகர் ஒருவரினால் அச்சுறுத்தப்பட்டதை கண்டித்தும் குறித்த வர்த்தகரை கைது செய்யக் கோரியும் மாநகர சபை ஊழியர்கள் இன்று முழுமையான பணிப்பகிஷ்கரிப்புடன் ஆர்ப்பாட்டம் ஒன்றினையும் மேற்கொண்டனர்.

மாநகர சபை ஊழியர்கள் அனைவரும் மாநகர சபையில் இருந்து கல்முனை பொலிஸ் நிலையம் வரை பேரணியாக சென்று பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக சுமார் ஒரு மணித்தியாலம் வரை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.டபிள்யூ அப்துல் கப்பார், வருகை தந்து ஆர்ப்பாட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதுடன் ஆணையாளரை அச்சுறுத்தியவரை கைது செய்யும் நடவடிக்கையில் தாம் ஈடுபட்டு வருவதாகவும் அவர் தலைமறைவாகியிருப்பதாகவும் தெரிவித்ததுடன் எவ்வாறாயினும் இன்று மாலை 4.00 மணிக்குள் கைது செய்வதற்கு தீவிர நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார்.

மேலும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் ஆணையாளரை தாக்க முற்பட்ட நபரை கல்முனை பொலிஸார் உடனடியாக கைது செய்து தண்டனை வழங்கவேண்டும் என கோஷம் எழுப்பியதுடன் பதாதைகளையும் தாங்கியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கல்முனை மாநகரசபை ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய், உயரதிகாரிகளை அச்சுறுத்துவதற்கு நல்லாட்சி துணைபோகின்றதா?, நேற்று ஆணையாளர், இன்று ஊழியர் நாளை பொலிஸாரா? என்ற பதாதைகளை ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் ஏந்தியிருந்தனர்.

இதேவேளை பொலிஸார் வழங்கிய வாக்குறுதியினை நிறைவேற்றும் வரை அமைதியான ஆர்ப்பாட்டத்தில் கல்முனை மாநகர சபையின் அனைத்து ஊழியர்களும் தொடர்ந்து வருகின்றனர்.

இதனால் மாநகர சபையின் அனைத்து பணிகளும் ஸ்தம்பிதமடைந்ததுடன் மாநகரசபைக்குட்பட்ட எந்தவொரு பிரதேசத்திலும் குப்பை அகற்றும் சேவையும்இடம்பெறவில்லை. அத்துடன் கல்முனை பிரதேச செயலகம் கல்முனை மாநகர சபை வளாகத்தில் அமைந்திருப்பதால் அதன் பணிகளும் பாதிக்கப்பட்டது.

கடந்த சனிக்கிழமை மாலை சாய்ந்தமருது நகருக்கு சென்ற ஆணையாளர், மோட்டார் விற்பனை செய்யும் கடைக்கு முன்பாக வீதியோர நடைபாதையில், விற்பனைக்கான மோட்டார் சைக்கிள் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டு, காட்சிப்படுத்தப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டி அதனை உள்ளே நகர்த்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பின்னர் அந்த கடையின் உரிமையாளர், ஆணையாளரை மோசமான வார்த்தைகளினால் தூற்றி, அச்சுறுத்தியதுடன் அவரை தாக்க முற்பட்டதாகவும் கல்முனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

625.0.560.320.160.600.053.800.668.160.90 (1) 625.0.560.320.160.600.053.800.668.160.90 (2) 625.0.560.320.160.600.053.800.668.160.90 (3) 625.0.560.320.160.600.053.800.668.160.90 (4) 625.0.560.320.160.600.053.800.668.160.90 (5) 625.0.560.320.160.600.053.800.668.160.90 (6) 625.0.560.320.160.600.053.800.668.160.90

 

SHARE