உயர் கல்வி முறைமையில் மாற்றம்! தொழில்நுட்ப பீடம் அமைக்கவும் திட்டம்!- பிரதி அமைச்சர்

261

உயர் கல்வி முறைமையில் மாற்றங்களை கொண்டுவருவதற்கு நல்லாட்சி அரசு தீர்மானித்துள்ளதுடன் விசேடமாக தொழில்நுட்ப பீடம் அமைக்கப்பட்டு அதனூடாக மேலதிக மாணவர்களை பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கத் திட்டமிட்டுள்ளது. இவ்வாறு உயர்கல்வி பிரதி அமைச்சர் மொஹான் லால் க்ரேரு தெரிவித்தார்.

கொழும்பில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கூறுகையில்,

வருடாந்தம் ஒரு இலட்சத்து 40ஆயிரத்துக்கும் அதிகமான பரீட்சார்த்திகள் உயர்தரப் பரீட்சை எழுதுகின்றனர். எனினும் 26 ஆயிரத்துக்கும் குறைவானவர்களே உயர்கல்விக்காக பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படுகின்றனர். இதனால் மீதமுள்ள மாணவர்கள் சரியான வழிகாட்டல்கள் இன்றி தவறான திசைகளில் செல்கின்றனர்.

அதேவேளை, சர்வதேசத்தரத்தில் ஏற்றுக்கொள்ளக் கூடிய – எதிர்பார்க்கின்ற சில பாடத்திட்டங்களுக்கு நாங்கள் முன்னுரிமை வழங்க வேண்டும். கலைப் பீடங்களில் சில பாடங்கள் எந்தவித பிரயோஜனமும் இல்லை. இதனாலேயே வேலையில்லாப் பட்டதாரிகள் வீதியில் இறங்கிப் போராட்டம் நடத்த வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளில் ஏற்பட்ட சிக்கல்களினால் பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் உள்வாங்குவதற்கு கால தாமதம் ஏற்பட்டது. இன்று ஒன்றரை வருடங்கள் கால தாமதித்தே புதிய மாணவர்களை இணைத்துக் கொள்கின்றோம். இது நமது உயர்கல்வி முறைமையில் உள்ள பெறும் குறைப்பாடாகும். இதனை நாங்கள் வெகுவிரைவில் சீர்படுத்துவோம்.

2015ம் ஆண்டு தோற்றிய மாணவர்களை நவம்பர் மாதத்துக்கு முன்னர் பல்கலைக்கழகத்துக்கு இணைத்துக் கொள்வதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றோம். அத்துடன் அடுத்த வருடத்தில் ஜுன் மாதத்துக்கு முன்னர் இதனை நடைமுறைப்படுத்தவும் உத்தேசித்துள்ளோம்.

மூன்று வருடங்களுக்கு முன்னர் தொழிநுட்ப பாடங்களை பாடசாலை மட்டத்தில் அறிமுகப்படுத்திய போதிலும் உயர்கல்விக்கான ஏற்பாடுகள் எதனையும் செய்யவில்லை. தற்போதுள்ள நிலையில் தொழிநுட்ப பீடத்தின் அவசியம் கேள்வி நிலை எழுந்துள்ளது. இதனை வெகுவிரைவில் நாங்கள் ஏற்படுத்தி புதிய பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்தவுள்ளோம். இதற்கு மேலதிகமாக மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்படுவார்கள்.

அதேவேளை, பல்கலைக்கழக விடயங்கள் தொடர்பில் தீர்மானிப்பதற்கு ஆணைக்குழு ஒன்றையும் அமைக்கத் திட்டமிட்டுள்ளோம். தனியார் கல்வி நிறுவனங்களும் இதன் கீழ் செயற்படும் என்றார்.

SHARE