உயிரோடு இருக்கின்றார்களா..? இல்லையா..? நெற்றியில் சூடிய திலகத்தை அழிப்பதா..? சிறிநேசன்

357

 

தமது கணவர்கள், காணாமல் ஆக்கப்பட்டு விட்டார்கள் எனும் நிலையில் அவர்கள் உயிரோடு இருக்கின்றார்களா..? இல்லையா..? என்று தெரியாத நிலையில், கழுத்தில் போடப்பட்டுள்ள தாலியை கழட்டுவதா..?

 a(1)

நெற்றியில் சூடிய திலகத்தை அழிப்பதா..? என்று கூடத்தெரியாமல் இரண்டுக்கும் இடைப்பட்ட நிலையில் நீண்டகாலமாக வாழ்ந்துகொண்டு இருக்கின்றார்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற 2016 ஒதுக்கீட்டு சட்டமூலம் குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

இலங்கையை எடுத்துப்பார்க்கின்ற போது ஏறத்தாழ ஐம்பது வீதத்துக்கும் அதிகமான பெண்கள் இருக்கின்றார்கள்.

ஆதலால் மனித வளத்திலும் அதிகமான பங்கினையும் அவர்களே வகிக்கின்றார்கள். இலங்கையின் முதல் பெண் பிரதம மந்திரி என்பதையும் தாண்டி,

உலகின் முதல் பிரதம மந்திரியாகவும் பதவி வகித்த திருமதி சிறிமாவோ பண்டாரநாயகவையும் பெற்றுத்தந்த பெருமைக்குரிய இந்நாட்டில் பெண்களின் நிலை எவ்வாறு உள்ளது..? என சிந்திக்க வேண்டிய நிலையில் நாம் இருக்கின்றோம்.

இன்றைய நிலையில் இந்நாட்டுக்கு அந்நிய செலாவணியை பெற்றுத்தருவதிலும் கூட பெண்களே அதிகம் முக்கியத்துவம் பெறுகின்றார்கள்.

அந்தவகையில் மத்திய கிழக்கிற்குச்சென்று தமது உடல் உழைப்பினை வழங்கி எமக்கு வருவாயினை தேடித்தருகின்ற பெண்களை எடுத்துப்பாருங்கள்., அத்தோடு மலையகப்பகுதியில் தினமும் குனிந்து நின்று கொழுந்துகளை எடுத்து நாட்டை நிமிர்ந்து நிற்க பாடுபடும் பெண்களை எடுத்துப்பாருங்கள்.

ஆடைத் தொழிற்சாலைகளில் குறைவான வருமானத்தில் நிறைவான தொழில்களை செய்கின்ற பெண்களை எடுத்துப்பாருங்கள்.

இவர்கள் அனைவருமே தமக்கு கிடைக்கின்ற சந்தர்ப்பத்தை பயன்படுத்தி வீட்டை வலுப்படுத்துவதன் ஊடாக நாட்டையும் உயர்த்துகின்றார்கள்.

தம்மைத்தாமே அர்ப்பணித்து உழைப்பினை வழங்கும் இவர்களின் நிலை மிகவும் பரிதாபகரமாகவே இருக்கின்றது.

நான் ஏலவே குறிப்பிட்டது போன்று மலையக பெண்களை எடுத்துக்கொண்டால், அந்நிய வெள்ளையர்களின் ஆட்சியில் அடிமைத்தொழிலாளர்கள் போன்று இங்கு கொண்டுவரப்பட்ட இவர்கள் அன்று தொட்டு இன்றுவரை தங்களது உச்சமான உழைப்பினை இந் நாட்டுக்கு தந்துகொண்டு இருக்கின்றார்கள்.

ஆனால் இவர்களது வாழ்க்கையை எடுத்துப்பார்த்தால் என்றும் லயன் அறைகளிலேயே கழிகிறது. இவ்வரவு செலவுத்திட்டத்தில் அவர்களுக்கான தனித்தனி வீடுகள் அமைத்து கொடுப்பதாக கூறப்பட்டுள்ளமை நல்ல விடயம் வரவேற்கின்றோம்.

அத்தோடு அவர்களின் வாழ்க்கை செழிக்கக் கூடிய விதத்தில் மென் மேலும் பல, நலத்திட்டங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

அதேவேளை எமது வடக்கு கிழக்கு பிரதேசங்களை எடுத்துக்கொண்டால் மொத்தமாக ஒரு இலட்சத்து இருபத்து நான்காயிரத்து நாற்பத்தொரு பெண்கள் விதவைகளாக வாழ்கின்றார்கள்.

இதில் வடக்கில் மாத்திரம் ஐம்பத்து மூவாயிரத்து இருனூற்று நாற்பத்தொரு பேரும், கிழக்கில் நாற்பத்து ஒன்பதாயிரம் பேரும் விதவைகாளாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

இவர்கள் மறுவாழ்வு அளிக்கப்படாத நிலையிலும் வாழ்வாதார வசதிகள் செய்து கொடுக்கப்படாத நிலையிலும் தங்களது பிள்ளைகளை வளர்க்க சிரமப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

எனவே இந்த பெண்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தாதவரை, இந்த பெண்களின் கண்ணீர் துடைக்கப்படாத வரை, இந்த பெண்களுக்கு மாற்று நடவடிக்கைகள் எடுக்கப்படாதவரை “ஏழைகள் அழுத கண்ணீர் கூரிய வாளையும் உக்கும்” என்று தமிழில் கூறுவார்கள்.

எனவே இவர்கள் அழுதுகொண்டிருக்கும் வரை எமது நாட்டின் பொருளாதாரத்தையோ.! அபிவிருத்தியையோ.! கட்டியெழுப்ப முடியாது. எனவே அந்தப்பெண்களுக்குரிய வாழ்வாதாரத்தை பெற்றுக்கொடுக்க இவ்வரசு முன்வரவேண்டும்.

அத்தோடு தமது கணவர்கள், காணாமல் ஆக்கப்பட்டு விட்டார்கள் எனும் நிலையில் அவர்கள் உயிரோடு இருக்கின்றார்களா..? இல்லையா..? என்று தெரியாத நிலையில்,

கழுத்தில் போடப்பட்டுள்ள தாலியை கழட்டுவதா ..? நெற்றியில் சூடிய திலகத்தை அழிப்பதா..? என்று கூடத்தெரியாமல் இரண்டுக்கும் இடைப்பட்ட நிலையில் நீண்டகாலமாக வாழ்ந்துகொண்டு இருக்கின்றார்கள்.

கணவர் என்று சொல்பவர் ஒரு குடும்பத்தின் தலைவர் அந்தக்குடும்பத்தையே உயர்த்தும் அந்த அரும்பெரும் சொத்துக்களை இழந்த நிலையில் அவர்கள் வாடி, தேடிக்கொண்டிருக்கின்றார்கள் இவர்களுக்குரிய பதில்களை இவ் நல்லாட்சி அரசாங்கம் அளிக்க வேண்டும்.

இப்பாராளுமன்றத்திலும் விதவைத்தாய்மார்கள் அங்கம் வகிக்கின்றார்கள். அவர்களுக்கும் எம்மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பான தெளிவிருக்கும். ஆகவே அவர்கள் உழைத்து வாழக்கூடிய செயல் திட்டங்களை கொண்டுவர வேண்டும்.அதற்காக தொழிற்சாலைகளை அமைத்து கொடுக்கவேண்டும்.

அதேவேளை யுத்த காரணங்களால் உணமுற்றவர்களும் வடக்கு கிழக்கில் பரவலாக காணப்படுகின்றார்கள். இவ்வாறு ஆயிரக்கணக்கானவர்கள் வாழ்கின்றார்கள். இவர்களை பற்றிய விசேட கவனத்தை செலுத்த வேண்டியுள்ளது.

சிறுவர்கள் எம் எதிர்காலங்கள் என பேசப்பட்டாலும் நடைமுறையில் அநாதரவாக்கப்பட்ட நிலையில் பலர் வாடிக் கொண்டிருக்கின்றார்கள். ஏற்கனவே அமைச்சர் விஜயகலா குறிப்பிட்டது போல் சிறுவர்கள் வகை தொகை இல்லாமல் துஸ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்படுகின்றர்கள்.

வடக்கில் இடம்பெற்ற ஒரு துஸ்பிரயோகம் பற்றி பேசிக்கொண்டிருக்கும் போது தெற்கில் ஒரு துஸ்பிரயோகம் நடக்கிறது., தெற்கில் இடம்பெற்ற துஸ்பிரயோகம் பற்றி பேசிக்கொண்டிருக்கும் போது கிழக்கில் ஒரு துஸ்பிரயோகம் நடக்கிறது.

கிழக்கில் இடம்பெற்ற ஒரு துஸ்பிரயோகம் பற்றி பேசிக்கொண்டிருக்கும் போது மலையகத்தில் ஒரு துஸ்பிரயோகம் நடக்கிறது.

எனவே இவற்றை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் வெறும் பேச்சளவில் இருக்காமல் செயல் அளவில் விரைவாக மேற்கொள்ளப்பட வேண்டும்.

வடமாகாணத்தில் ஐந்து மாவட்டங்களில் நாற்பத்தாறு சிறுவர் இல்லங்கள் உள்ளன. இங்கு 1830 பெண்பிள்ளைகளும், 864 ஆண் சிறுவர்களுமாக 2694 சிறுவர்கள் பராமரிக்கப்படுகின்றனர்.

இவற்றில் சில இல்லங்களில் வேலியே பயிரை மேய்வது போல பல சிறுவர்கள் துஷ்பிரயோகப்படுத்தப் படுகின்றார்கள்.

இதில் அதிகப்படியாக யாழ் மாவட்டத்தில் 682 பெண்பிள்ளைகளும் 268 ஆண் பிள்ளைகளும், முலைத்தீவு மாவட்டத்தில் 210 பெண் பிள்ளைகளும் 43 ஆண்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவற்றுக்கான நடவடிக்கைகளையும் விரைவாக மேற்கொள்ள வேண்டும் என இச்சபையில் வேண்டிக்கொள்கிறேன் என்றார்.

SHARE