உரிமையோடு சுடரேற்றி உறுதி எடுக்கும் மாவீரர் நாள் நவம்பர் 27-இரணியன்

349

 


“ஒரு விடுதலை வீரனின் சாவு ஒரு சாதாரண் மரண நிகழ்வல்ல. அந்தச் சாவு ஒரு சரித்திர நிகழ்வு. ஒரு உன்னத இலட்சியம் உயிர் பெறும் அற்புதமான நிகழ்வு. உண்மையில் ஒரு விடுதலை வீரன் சாவதில்லை. அவனது உயிராக இயங்கி வந்த இலட்சிய நெருப்பு என்றுமே அணைந்து விடுவதில்லை. அந்த இலட்சிய நெருப்பு ஒரு வரலாற்றுச் சக்தியாக மற்றவர்களைப் பற்றிக் கொள்கின்றது. ஒரு இனத்தின் தேசிய ஆன்மாவைத் தட்டியெழுப்பிவிடுகின்றது.” -தலைவர் வே.பிரபாகரன்

 belgium-maveerarnal-2016
may-18-2014

1989ம் ஆண்டு நவம்பர் மாதம் 27ம் நாளை முதலாவது தமிழீழ மாவீரர் நாளாகத் தமிழீழம் உணர்வார்ந்த நிலையில் கடைப்பிடித்தது. அன்றிலிருந்து தமிழீழத்தின் மிகப் பெரிய நிகழ்வாக, எழிற்சியாக, புனிதமாக உணர்வார்ந்த நிகழ்வாக தமிழீழ மாவீரர் நாள் மக்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

மயிரிழை வேகமெடுத்துள்ளது. சோகநதிகளாய் தமிழர் கண்ணீரும் சேர்ந்து பெருக்கெடுத்துப் பாய்கிறது. ஆறறோரத்து அகதிமுகாம்கள், வயல்மேட்டின் புற்றுப்பிட்டிகள், வீதியோரங்களென விரிந்திருக்கும் இடப்பெயர்வின் துயர வாழ்வுக்குள்ளும் ஏதோ ஒரு திடமான நம்பிக்கை…மாவீரர் நாள் வரலாறும் தேசியத் தலைவர் பிரபாகரனும்

“எங்களுருக்கு மீண்டும் செல்வோம்” “அந்த மகிழ்வான வாழ்வுகையில் கிட்டும்” “நாங்கள் கொடுத்திருக்கும் விலை கொஞ்சநஞ்சமல்ல.” “போட்ட முதலை செலவாய் எண்ணிவிட முடியாது அறுவடை எடுத்துத்தான் ஆகவேண்டுமென்ற கட்டாயம் எங்களுக்கு…” என்ற உண்ணத்து நம்பிக்கைகளும் உணர்வுகளும் எம்மை வலுவாகவே பற்றி நிற்கின்றன.

இந்தநிலையில் உணர்வுகளில் உறுதி ஏற்றிக்கொள்வதற்காய் எம்முன்னே விரிகிறது இன்றைய நாள் கார்த்திகை 27, மாவீரர்களுக்காய் எடுக்கப்படுகின்ற பெருவிழா அல்ல, அவர்கள் நினைவிடயங்களின் முன்னே உறுதி ஏற்றிக்கொள்கின்ற உன்னத நாள் எங்கள் நம்பிக்கைகளின் மகத்துவங்களாய் மண்ணில் உறங்கும் மானிட தெய்வங்களுடன் மனம்விட்டுப் பேசும் உயிர்ப்புநாள், இந்த நாளுக்காக இன்று தமிழர் மனங்கள் மனமுருகி நின்கின்றன.

 

கார்த்திகை 27 தமிழினத்தின் தீபத்திருநாள்

maveerar_day_2014தமிழீழத்தில் மாவீரர் நாள் என்பது தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பங்குபற்றி தாய்நாட்டுக்காக தமது உயிரை ஈந்த அனைத்து போராளிகளையும் அவர்களோடு சேர்ந்து போரிட்டு உயிர் ஈந்த எல்லைப்படை துணைப்படை வீரர்களையும், நினைவுகூர்ந்து அவர்கள் கல்லறைகளை வணங்கி தீபமேற்றி அந்த ஒப்பற்ற தியாகிகளின் நினைவுகளை நினைந்து நினைந்து அந்த வீரப்புதல்வர்களின் வீரத்தை கண்டு வியந்து ஆறடி ஆழத்தில் துயிலும் அவர்களின் கல்லறைகளை கண்ணீரால் நீராட்டி வழிபடும் ஒரு உன்னதமான நாள.

எமக்காகா போராடி வீழ்ந்தவர்களை மறந்துவிட்டால் நாங்கள் மனிதர்கள் அல்ல மிருகங்கள் என்று சொல்லக்கூட தகுதியற்றவர்கள் காரணம் ஒருகை சோறு வைத்தால் நாய் காலம் முழுவதும் வாலை ஆட்டி நன்றி சொலுத்தும் ஆனால் ஒரு இனம் வாழவேண்டும் என்பதற்காக பல்லாயிரம் போராளிகள் விதைகளாக வீழ்ந்தார்கள் அவர்களை எப்படி மறக்கமுடியும் எனவேதான் தேசியத்தலைவரினால் மாவீரர்களின் ஆராதனைக்குரிய நாளாக நவம்பர் 27 ஆம் நாள் 1989 ஆண்டில் அறிவிக்கப்பட்டது.

ஈழப் போரில் இறந்த போராளிகளை நினைவுகூருவது, மதிப்பது தமது அடிப்படைக் கடமைகளில், கொள்கைகளில் ஒன்றாக ஈழத்தமிழர்கள் கருதுகிறார்கள். மாவீரர் நாளாக நவம்பர் 27 தேசியத்தலைவரால் 1989 அறிவிக்கப்பட்டது. தமிழீழ மாவீரர் நாளாக இந்நாளைத் தேர்ந்தெடுத்ததற்கு தமிழீழ போராட்ட வரலாற்றுடன் இணைந்த ஒரு முக்கிய காரணம் உள்ளது. இந்த நாளில்தான் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முதலாவது போராளியான சங்கர் (செ. சத்தியநாதன்) வீரமரணம் அடைந்தார்.

தொடக்க காலங்களில் மாவீரர் நாளில் ஈகைச்சுடரேற்றுவது நள்ளிரவு 12.00 மணிக்கு என்றிருந்தது. பின்னர் அது மாலை 06.05 மணிக்கு என்று மாற்றப்பட்டு விட்டது. அதற்கும் காரணம் உள்ளது. தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் முதற் களப்பலியான சங்கர் வீரமரணமடைந்தது நவம்பர் 27, 1982 அன்று மாலை 6.05 மணிக்கு. லெப். சங்கர் தனது தாய் நாட்டுக்காக தன் இன்னுயிரை அணைத்துக் கொண்ட அதே நாள், அதே நேரமான 6.05 மணியே தமீழீழ மாவீரர்நாளில் ஈகைச்சுடரேற்றும் நேரமானது கார்மேகம் கூடி விடாது பெய்யும் மழையும் யாரோ கட்டளையிட்டதுபோல அந்த வீரர்களுகு ஈகைச்சுடரேற்றும் நேரத்தில் சற்று ஒதுங்கிக்கொள்ளும் கல்லறைகளும் சற்று கண்விழித்து தன் சொந்தங்களைப்பார்த்து பெருமித்துக்கொள்ளும்

ஈழநிலம் எங்கள் சூரியப்புதல்வனின் கைகளிலே இருந்தபோது மாவீரர் துயிலும் இல்லங்கள் எல்லாம் கோபுரம் இல்லாத கோவில்களைப்போன்று மதிக்கப்பட்டது தன் இனம் தன் சொந்தங்கள் தன் உடன்பிறவா சகோதரர்கள் எல்லாம் சுதந்திரக்காற்றினை சுவாசிக்கவேண்டும் என்பதற்காக காட்டிலும் மேட்டிலும் காற்றில்லா கடலில்நீருள்ளும் அலைந்துதிரிந்து பசிபட்டிணி இருந்து எல்லைதாண்டும் எதிரிகளையும் தாய் மண்ணில் ஏறிவரும் பகைவர்களையும் வெட்டிக்கூறுபோட்டு கதிகலங்கவைத்துவிட்டு களத்திலே வீரமரணமடைந்த மாவீரர்களை அவளவு இலகுவாக மறந்துவிடமுடியுமா ?பொன் பொருள் தேடி அலையும் மானிடப்பேய்களுக்கு மத்தியிலே இனமானம் காக்க பொன்பொருள் இழந்து இளமை இனிமை இழந்து தம் வசந்தகால வாழ்க்கையினை முற்றாக இழந்து வதைமுகாம்களிலும் கொடிய சிறைகளிளும் வதைபட்டு மாண்டுபோன போராளிகள் எத்தனை ஆயிரம் மரணிக்கும் நேரத்திலும் மண்மானம் காக்க மண்டியிட்டுக்கொள்ளாது கழுத்திலே இருக்கும் நஞ்சினை உண்டு தமிழர்களுக்காக வீழ்தவர்கள் எத்தனை ஆயிரம் மஞ்சள் அரைத்து முகத்திலே பூசி பட்டாடையும் பவளமூக்குத்தியும் அணிந்து அன்னநடை நடக்கும் வளக்கத்தினை மாற்றி பாரதிகண்ட புதுமைப்பெண்களாக களத்திலே ஆணுக்குநிகராக போராடிய பெண் போராளிகள் எத்தனை ஆயிரம்? இவர்கள் எல்லோருமே எதற்காக ஆயுதம் ஏந்தினார்கள் ?இத்தனை ஆயிரம் போராளிகளும் எதற்காக ஒருவர் பின் ஒருவராக களத்திலே குதித்தார்கள் தன் மரணத்துக்கான திகதியினை அறிந்தும் அதைப்பற்றி சிறிதளவு கவலையும் இன்றி கொடுக்கப்பட்ட இலக்கின்மீது உடல்முழுக்க குண்டுகளைக்கட்டிக்கொண்டு பாய்ந்து சிதறிப்போன கரும்புலி வீரர்கள் எத்தனையாயிரம்பேர்?

எத்தனை தமிழனின் தலைகளைவெட்டினாலும் எதிர்த்துக்கோழ்விகேட்க யாரும் இல்லை என்று சிங்களப்பேரினவாதம் ஈழமண்ணிலே கொடும் கொலைவெறித்தாண்டவம் போட்டபோது மில்லராக கிட்டுவாக சால்ஸ் அன்ரனியாக அங்கயற்கன்னியாக குமரப்பா புலேந்திரனாக மாலதியாக ஒவ்வொரு தமிழனும் தமிழிச்சியும் புறப்பட்டு வந்தபோது தமிழன் தலைமுடியினைக்கூட தெடுவதற்கு சிங்களப்பேரினவாதம் அச்சப்பட்ட காலங்களும் உள்ளது தமிழினத்தின் பாதுகாவலர்களாக தம் தாய் தந்தை நன்றாக நின்மதியாக உறங்கவேண்டும் என்பதற்காக உறக்கமின்றி ஊர் எங்குமே காவல் நின்ற எங்கள் காவல்தெய்வங்கள் மாவீரர்கள் அப்படிப்பட்ட வீரப்புதல்வர்கள் இனவிடுதலைக்காக வீரமரணமடைந்துள்ளார்கள் இவர்களிற்காக இவர்களின் ஈடாக உலகத்திலே ஏதும் இல்லை

அப்படி இனவிடுதலை ஒன்றே தமது குறிக்கோளாக கொண்டு மரணிக்கும்வரை போராடிய அந்த உத்தமமாம வீரர்களுக்காக என்ன கைமாறு செய்யப்போகின்றது தமிழினம்??இருசூள்ந்த தம் தேசம் விடியமேண்டும் என்பதற்காக் போராடப்புறப்பட்ட பல போராளிகள் விடியாத சிறைகளிலே இன்றுவரை சிக்கித்தவித்துக்கொண்டிருக்கின்றனர்கள் ,கைகளை கால்கள் கன்கள் என்று உடலுறுப்புக்களை எல்லம் இழந்து இன்று எத்தனையோ போராளிகள் ஒழிந்து ஒழிந்து வாழ்ந்துகொண்டிருகின்றனர் இவர்களிற்காக என்ன செய்யப்போகின்றது தமிழினம் ஒரு இனத்தின் விடுதலைக்காக் புறப்பட்ட இனத்திற்று வரும் இழப்புக்களை ஒரு சிலரின் தலையிலே சுமத்திவிட்டு ஒதுங்கிவிடமுடியாது சுதந்திரம் என்பது எல்லோருக்கும் பொதுவான ஒன்று எனவே அந்த சுதந்திரத்திற்காக போராடவேண்டியது எல்லோரினதும் கடமை அதை ஒருசிலரிடம் மட்டும் ஒப்படைத்துவிடமுடியாது மற்றயவர்கள் ஒதுங்கிவிடமுடியாது தம் அடுத்தசந்ததி சுதந்திரமாக நசமாடவேண்டும் சுதந்திரக்காற்றினை சுவாசிக்கவேண்டும் என்று அடுத்தடுத்து மூன்று சந்ததிகள் ஆயுதங்கள் ஏந்திப்போராடிவிட்டன ஆயிரம் ஆயிரம் உடல்கள் விடுதலைக்கான விதைகளாக வீழ்ந்துவிட்டன ஆனால் என்ன சாபக்கேடோ தமிழனுக்கு இன்னவும் விடுதலை மட்டும் கிடைக்கவில்லை

ஈழத்தீவுமூவதும் சிங்களப்பேரினவாதிகளின் முற்றுகைக்குள் அகப்பட்டுக்கொண்டது ஈழவிடுதலைக்காய் போராடிய மாவீரர்களது கல்லறகளும் கால்முளைத்து களமாடுமோ என்றோ என்னவோ துயிலும் இல்லங்களை எல்லாம் துப்பாக்கி ஏந்திய சிங்களச்சிப்பாய்கள் முற்றுகையிட்டு மாவீரர்களின் கல்லறைகளை எல்லாம் உடைத்தெறிந்து கொக்கரித்துக்கொண்டிருக்கின்றனர் அமைதியாக தூங்கிய வீரப்புதல்வர்களின் ஆன்மாக்கள் அலைந்துகொண்டிருக்கின்றது எருக்கலம் காடுகளாகவும் பௌத்தவிகாரைகளாகவும் உதைபந்தாட்ட மைதானமாகவும் இரானுவமுகம்களாகவும் எம் இனம் காத்த வீரர்களின் துயிலுமில்லங்கள் மாறிவிட்டது

நமக்காக போராடப்புறப்பட்ட அந்த வீரர்களின் நினைவிடங்களைக்கூட மீட்டெடுக்க முடியாத பாவிகளா தமிழினம் வேதனைப்பட்டுக்கொண்டிருக்கின்றது தமிழினம் ஆட்சியும் அதிகாரமும் உள்ள சிங்களப்பேரினவாதம் இழுத்த இழுப்புக்கெல்லாம் இசைந்துகொடுக்கவேண்டிய கட்டாயத்துக்குள் தமிழர்களை காலம் தள்ளிவிட்டுள்ளது வார்தைகளால் வர்னிக்கப்படமுடியாத அளவு தியாகங்களை எந்தவித எதிர்பார்ப்புகளும் இன்றி செய்துவிட்டு ஆறடி ஆழத்தில் துயில்கின்ன்ற எங்கள் சுதந்திரப் போராட்ட வீரர்களை சுயநலவாத பயங்கரவாதிகளாகவும் தீவிரவாதிகளாகவும் தூற்ரிக்கொண்டிருக்கின்றது இன்னும் எத்தனையோ இழிவுகளை தமிழினம் ஒவ்வொருநாளும் சந்தித்துக்கொண்டிருக்கின்றது இதிலிருந்து தமிழினம் மிக விரைவாக மீண்டெழுந்துகொள்ளவேண்டும்

ஓடாதமானும் போராடாத இனமும் மீண்டெழுந்ததாக சரித்திரம் இல்லை எனவே எம் விடுதலைக்காக விழ்ந்துபோன வீரர்களின் கனவுகளை நினைவாக்கி தேசியத்தலைவரின் வழிநடந்து மீண்டும் துயிலுமில்லங்களையும் எங்கள் தமிழீழதேசத்தையும் எதிரியிடம் இருந்து மீட்டு நாங்கள் தமிழர்கள் என்று தலைநிமிர்ந்து கொள்வோம் என இந்த கார்த்திகை 27 இல் உறுதிகொள்வோம் கல்லறைகளை எல்லாம் எம் நெஞ்சறைகளில் வைத்து தீபமேற்றுவோம்

எம் மண்காத்த மாவீரர்களிற்காக எங்கள் வீடுகளில் ஒரு தீபமேனும் ஏற்றி அவர்களை ஆராதிப்போம் உறுதிகொள்வோம் கார்திகை 27 இல் நாம் வெல்வது
உறுதி என்று

மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை முடிசூடும் தமிழ்மீது உறுதி!
வழிகாட்டி எம்மை உருவாக்கும் தலைவன் வரலாறு மீதிலும் உறுதி!
விழிமூடி இங்கே துயில்கின்ற வேங்கை வீரர்கள் மீதிலும் உறுதி!
இழிவாக வாழோம்! தமிழீழப்போரில் இனிமேலும் ஓயோம் உறுதி!

தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!
தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!

இங்குகூவிடும் எங்களின் குரல்மொழி கேட்கிதா? குழியினுள் வாழ்பவரே!
இங்குகூவிடும் எங்களின் குரல்மொழி கேட்கிதா? குழியினுள் வாழ்பவரே!

தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!

உங்களைப் பெற்றவர் உங்களின் தோழிகள் உறவினர் வந்துள்ளோம்!
உங்களைப் பெற்றவர் உங்களின் தோழிகள் உறவினர் வந்துள்ளோம்!
அன்று செங்களம் மீதிலே உங்களோடாடிய தோழர்கள் வந்துள்ளோம்!
அன்று செங்களம் மீதிலே உங்களோடாடிய தோழர்கள் வந்துள்ளோம்!

எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்!
எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்!
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்!
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்!

 

கல்லறை மேனியர் கண்திறப்பார்களே கார்த்திகை நாளிலே- காணொளி

maveerar_day_2014

***

காரிருள் நீக்க வந்த பேரொளி! அறுபது அகவை – ச.ச.முத்து

கதைக்கும் ஒவ்வொரு சொல்லும் இன்னொரு முனையில் யாராலோ (ஒட்டு) கேட்கப்பட்டுகொண்டே இருக்கும் என்ற எச்சரிக்கை உணர்வுடனேயே ஒவ்வொரு சொல்லையும் அளந்து கதைக்கும் தாயக உறவு நெஞ்சுக்குள் அடைகாத்து வைத்திருந்த கேள்வியை, ஆதங்கத்தை இறுதியில் அடக்க முடியாமல் கேட்கும் ‘ அண்ணை இருக்கிறார்தானே..அவர் இருக்க வேணும்’ என்று..,

வீடிழந்த, ஊரிழந்த, மண் இழந்த சோகத்தை செரிக்கமுடியாமல் தமிழ்நாட்டு அகதி முகாமில் தினமும் கடலின் முடிவையே பார்த்து கொண்டிருக்கும் முதியவர் கண்களில் நம்பிக்கை பொங்கி வழிய சொல்வார். ‘ தலைவர் நிச்சயம் ஒருநாள் வருவார்…அவர் வரவேணும்…’என்று

நேர்த்திக்காக லூட்ஸ் மாதா போய்வந்த குடும்பம் ஒன்று மிக நம்பிக்கையுடனேயே சொன்னது ‘தலைவருக்கு ஒன்றும் நேரக்கூடாது என்று மாதாவுக்கு மெழுகுவர்த்தி ஏற்றினோம்.. அவர்தான் இந்த இனத்துக்கு தேவை’..

2009 மே மாதத்துக்கு பிறகு சொல்லமுடியாத வறுமைக்குள்ளும், சமூக நிராகரிப்புக்குள்ளும், அன்றாட தேவைகளையே தன் பிள்ளைகளுக்கு நிறைவேற்றிவைக்க முடியாத போராளி தாய் ஒருத்தி.

‘ அண்ணை இப்போ வெளியாலை இருந்தால் எங்களை இப்பிடி விடவேமாட்டார்..அவர் எங்கை இருந்தாலும் எங்களை பற்றியே நினைத்து கொண்டிருப்பார் ‘ என்று சொல்வதும்,

படிப்பின் உச்சங்களை வெகு சாதாரணமாக தாண்டி கலாநிதி பட்டங்களும் மிகச்சிறந்த ஆய்வுகளும் தரும் பல்கலைகழகசமூக அறிவுத்தூண்களில் ஒருத்தர் ‘ இப்போதைய தமிழ் சமூகத்தின் அத்தனை தூசிகளையும் துடைத்தெடுத்து, இதனை சரியான மனிதர்களாக மாற்றுவதற்கு அவர்தான் வரவேணும்’ என்பதும்

எல்லாவற்றிலும் மேலாக நவம்பர் 26ம் திகதி நெருங்கும் போதே ஏதோ தங்கள் வீட்டின் முக்கிய இரத்த சொந்தம் ஒன்றின் பிறந்தநாள் வருவது போல கோடானுகோடி தமிழர்கள் எண்ணுவதும் கொண்டாடுவதும் அந்த மனிதனின் வரலாற்று தேவையை இன்னும் மிகத் தெளிவாகவே உணர்த்தி நிற்கின்றன.

இந்த இனத்துக்கு இருந்துகொண்டிருக்கும் மிகநீண்ட வரலாற்றை கொண்ட மொழியின் மக்கள் என்ற பெருமையோ,

ஆழமான பண்பாட்டு வேர்களையும் அதனூடு எழுந்த செவ்விலக்கியங்களையும் கொண்ட மக்கள் என்ற பெரும் மகிழ்வோ

,உலகில் மிகநீண்ட கால(சோழ) பேரரசு ஒன்றின் ஆட்சிமொழியை பேசும் மக்கள் என்ற பேருவகையோ, எத்தனை இருந்தாலும் அவை எல்லாவற்றையும்விட பிரபாகரன் என்ற மனிதன் பேசும் மொழியை பேசுகின்றோம்,

அவரது இனத்தின் மக்கள் என்பதே உயரிய பெரும் பெருமையாக நினைக்கும் அளவுக்கு அந்த மனிதன் இந்த வரலாற்றின் மிக முக்கிய இயக்கு சக்தியாக வழிகாட்டியாக நிலைத்திருக்கிறார்.

இன்றும் கூட மேலாதிக்க-வல்லாதிக்க சக்திகள் எல்லாம் ஒரு சமன்பாட்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். .அதுதான் போருக்கு பின்பான தமிழினம் எழுவது இப்போதைக்கு முடியாது மட்டுமல்ல.முடியவே முடியாது என்பதுதான் அது.

படைத்துறை வலு,போரிடும் வலு, ஆளணிவலு என்று எதுவுமே இல்லாத ஒரு பொழுதில் வல்லாதிக்கத்தினதும் சிங்கள பேரினவாதத்தினதும் கணிப்பு ஒரளவு சரி என்றே தோன்றும்.

ஆனால் இதனை எல்லாம் உடைத்தெறியக் கூடியது ஒரே ஒரு ஒற்றைக்குரல் என்பதை அவர்கள் சுலபமாக மறந்துவிடுகிறார்கள்.

பிரபாகரன் எனும் அந்த மனிதனது ஒற்றைகுரல் ஒன்று போதும் மீண்டும் இந்த இனத்தின் அத்தனை வலுவும் எழுவதற்கு. இந்த நம்பிக்கையே இன்று உலகம் முழுதும் அத்தனை தமிழ் மக்களதும் நெஞ்சுக்குள் படர்ந்திருக்கிறது.
இந்த நம்பிக்கையை அந்த மனிதன் எவ்வாறு பெற்றுக் கொண்டார்.

அவரது வரலாற்றை ஆழ்ந்து பார்த்தால்,அவரது ஆரம்பவரலாற்றை நேரடியாக பார்த்திருக்கும் ஒரு பேறு கிடைத்ததால் ஒன்றை உறுதியாக சொல்லலாம் ‘ இந்த இனத்தினது நம்பிக்கையை பெற்று கொள்ள வேண்டும் என்பதற்காகவோ,இதன் அங்கீகாரத்துக்காகவோ வலிந்து எதனையும் செய்தவர் அல்ல’ ஆனால் மிகமிக உண்மையாக போராடினார்.

தான் நம்பிய இலட்சியத்தை வென்றடைய முழுமையான அர்ப்பணிப்பு அவரிடம் இருந்தது.அதனைவிட ஓய்வறியாத பயணம் இருந்தது.எதற்கும் சோர்ந்து போகாத வலு இருந்தது.இவை எல்லாவற்றையும் விட இந்த மக்களை தன் உயிரினும் மேலாக நேசித்தார்.அதுவே அவருக்கான அங்கீகாரத்தை மிக இயல்பாக பெற்று தந்தது என்பதை உறுதியாகவே சொல்லலாம்.

தெளிவான அரசியல்ஒன்றை வரித்துக்கொண்ட அவர் அதனை அடைய ஓய்வு ஒளிச்சல் அற்ற செயற்பாடே முக்கியம் என்பதை முன்வைத்து பயணப்பட்டவர்.அவருடைய பயணம் இப்போது அறுபதாவது அகவையில் நிற்கிறது.

எங்கள் எல்லோரினதும் முன்நிலை களப்பயணி அவர்.1973ம் ஆண்டு மார்ச் மாதம் 23ம் திகதி அவர் தனது வீட்டை முழுதாக துறந்து தேசத்துக்கான விடுதலைப்பாதையில் நடக்க ஆரம்பிக்கின்றார். இன்று நாற்பது வருடங்களுக்கும் மேலாகின்றது அவர் போராட புறப்பட்டு. தனது வழிகாட்டி வரலாறு என்றே அவர் சொன்னார்.

எமக்கும் வரலாறுதான் வழிகாட்டி.அவரது வரலாறுதான் வழிகாட்டி.அந்த வரலாறுமுழுதும் எண்ணற்ற சம்பவங்கள் நாம் கற்றுக்கொள்ள, எம்மை கூர்தீட்டி கொள்ள, எம்மை செதுக்கி கொள்ள. அவரது ஆற்றல்கள் அனைத்துமே ஒருவிதமான நுண்ணிய தன்மை கொண்டவை. யாராலும் அளவிடவே முடியாதவையாக அவை இருக்கும்.

அவரது நுண்ணிய ஆற்றல்கள் நிறைந்த அவரது கணிப்புகள். பெரும்பாலும் அது தவறுவதே இல்லை.

ஒருமுறை 80ம் ஆண்டில் வன்னியின் முல்லைத்தீவுக்கு அண்மித்த அடர்காடொன்றில் பண்ணை முறையிலான முகாம் ஒன்றில் இருந்த போது அந்த முகாமில் இருந்து ஐந்து மைல்களுக்கு அப்பால் இருக்கும் கடை ஒன்றுக்கு சாமான்கள் வாங்க சென்ற போராளி ஒருவன் அந்த கடைகாரரிடம் குண்டூசி வாங்க கேட்டபோது அந்த கடைக்காரர் ‘ஏன் பொம் செய்யவா’ என்று கேட்டதாக அந்த போராளி திரும்பி வந்து சாப்பிடும்போது சர்வசாதாரணமாக சொன்னான்.

அந்தநேரம் அந்த முகாமில் செல்லக்கிளிஅண்ணா, கலா, வெங்கிட்டு, பொன்னம்மான் உட்பட பத்துபேர் இருந்தார்கள்.எல்லோரும் இந்த செய்தியை காதில் வாங்கி ஏதும் அர்த்தம் செய்யவில்லை.

ஆனால் எல்லோரும் சாப்பிட்ட உடனே தலைவர் எல்லோருக்கும் கைகளில் 100ரூபா தந்து எல்லோரும் உடனே இந்த முகாமைவிட்டு வெளிக்கிடுங்கோ.அடுத்த தொடர்பு வரும்வரைக்கும் உங்கள் பகுதிகளில் இருங்கோ என்றார்.

அந்த நேரம் முகாமில் இருந்த அனைவருக்கும் அதன் அர்த்தம் புரியவில்லை.எல்லோரும் ‘ யாரோ கடைக்காரன் ஒரு கதைக்காக கேட்டதை ஏன் தலைவர் ஆபத்து என்று நினைக்க வேண்டும் என்று கதைத்தார்கள்.

ஆனால் தலைவர் உறுதியாக சொல்லிவிட்டார் ‘ எல்லோரும் இன்று மாலை இருட்டு வருவதற்குள் வெளிக்கிட்டு விடவேணும்’ என்று.

அந்த நேரம்தான் அந்த முகாமில் அறுவடை செய்யப்பட்டிருந்த உழுந்து மூட்டைமூட்டையாக இருந்தது.

அத்தனையையும் விட்டுவிட்டு எப்படி செல்வது என்று மற்றவர்கள் கேட்டபோது தலைவர் சொன்னார் ‘பொருட்கள் பிறகும் வாங்கலாம்,ஆனால் உங்களில் யாரையும் இழக்க நான் தயாரில்லை’ என்று.

எல்லோரும் புறப்பட்டு சென்று ஒரு கிழமைக்குள் அரசாங்க பத்திரிகை தினகரனில் அந்த முகாம் சிங்கள பொலீஸ்படையால் பிடிக்கப்பட்டு அதில் இருந்த உழுந்துமூட்டைகள் எடுக்கப்படடதான செய்தி வெளிவந்திருந்தது.

இப்போது இதனை நினைத்து பார்த்தாலும் ஆச்சர்யமே மேலெழும்புகிறது. எல்லோரும் கேட்டுக் கொண்டிருந்த ஒரு தகவல் அவருக்கு மட்டுமே விடுதலைக்கான ஏதோ ஒன்றாக இருக்கிறது.

இந்த நுண்ணுனர்வு என்பது அவரது ஆழமான இலட்சிய தாகத்தில் இருந்தே உதயமாவதாக நான் நினைக்கிறேன்.முழுமையான ஈடுபாடு ஒருவிடயத்தில் இருந்தால் இயல்பாகவே அந்த விடயம் சம்பந்தமான உள்ளுணர்வுகள் வந்து விடும் என்பது விஞ்ஞான முடிபு.

இன்னொருமுறை பொலிகண்டி புதியகுடியேற்றத்தின் வீடுகளில் ஒன்றில் 83பெப்ரவரியில் தங்கி இருந்தபோது எல்லோரும் தூங்கி கொண்டிருந்த நேரம்.தலைவரும் தூங்கித்தான் இருந்தார்.

ஆனால் திடீரென எல்லோரையும் எழுப்பி ஒரு வெகுதூரத்தில் ஒரு வாகன சத்தம் வித்தியாசமாக இருப்பதை சொன்னார்.அந்த வீதி வாகனங்கள் அடிக்கடி செல்லும் வீதி என்பதால் மற்றவர்கள் அது சாதாரண வாகனம் என்றே சொல்லி மீண்டும் தூங்க எத்தனித்தனர்.

ஆனால் தலைவரோ ‘ இல்லை அந்த வாகனம் இந்த குடியேற்றத்துக்கு வரும் வழியில் நிற்கிறது’ என்று உறுதியாக சொல்லி இரண்டு போராளிகளை உடனே போய் என்ன என்று பார்த்து வரும்படி சொன்னார்.

போராளிகள் அங்கு சென்றபோது ‘ஒரு ஹையஸ் ரக வான் ஒன்று தலைவர் சொன்ன இடத்தில் நின்றிருந்தது. அது மண்ணுக்குள் புதைந்து நின்றதால் வாகனஓட்டி இன்ஜினை ரேஸ் பண்ணி கொண்டிருந்தார்.

போராளிகளுக்கு தெரிந்த வாகன ஓட்டி என்பதால் அது ஆபத்தான வாகனம் இல்லை என்று திரும்பி வந்தனர்.

மறுநாள் தலைவரிடம் அது எப்படி அத்தனை உறுதியாக அந்த இடத்தில்தான் வாகனம் நிற்கிறது என்று எப்படி இங்கிருந்தே சொன்னீங்கள் என்று கேட்டபோது ‘நேற்று இந்த இடத்துக்கு வரும்போது கவனித்தேன்.

அந்த இடத்தில் பாதையை மூடி மணல் கிடந்தது. அதில் ஏதோ ஒரு வாகனம் புதைந்து நிற்கிறது என்பதை கணித்தேன்’ என்றார்.

எல்லோருக்கும் அது வீதி.தலைவர் அதனையும் எவ்வளவு நுணுக்கமாக கவனித்து இருக்கிறார் என்று அதிசயமாக இருந்தது.

அமைப்பு, அதன் கட்டுபாடுகள், நடைமுறை என்பனவற்றில் கண்டிப்பானவராக இருக்கும் அதே மனிதனது இன்னொரு பக்கம் ஈரம் நிறைந்தது. கிட்டு ஒருமுறை பேட்டியில் சொன்னதுபோல ‘ இளகிய மனம் படைத்தவர்களே மற்றவர்களுக்கு நடக்கும் கொடுமைகள், அநீதிகளை கண்டு பொறுக்க முடியாமல் போராட வருகிறார்கள்.

போராளிகள் இளகிய மனம் கொண்டவர்கள்’ என்று சொன்னது போல தலைவரின் இன்னொரு பக்கம் முழுக்க முழுக்க பாசமும், அன்பும், அரவணைப்பும், நேசிப்பும் நிறைந்தவை.

ஆரம்பநாட்களில் காடுகளில் யாருக்கும் மலேரியா,அல்லது வேறு காய்ச்சல் வந்துவிட்டால் தலைவரே அருகில் இருந்து கவனிக்கும் காட்சிகள் இன்னும் மனதுள் நிற்கிறது.

‘மகனுக்கு என்ன செய்யுது’ மகன் இதை குடி’ ‘இந்த போர்வையை போர்த்து ‘ என்று இருக்கின்ற அற்ப வசதிகளுள் நல்லதை தரும் அந்த மனிதன் எல்லோரையும்விட மிகச்சிறந்த தந்தை போன்றவர். வீடுகளை துறந்து தன்னிடம் வரும் இவர்களுக்கு தானே ஒரு தாயாக தந்தையாக நிற்கவேணும் என்பதே அவரது நடைமுறை.

வெறுமனே ஆயுதங்களை இயக்குவதற்கு மட்டும் சொல்லித் தந்தவர் அல்ல அவர்.மிகச்சிறந்த இலக்கியங்களை படிக்க கொண்டுவந்து தந்தவர்.லியோ டால்ஸ்டாயின் போரும் அமைதியும் போன்ற உலக இலக்கியங்கள் முதற்கொண்டு மைக்கல்கோலின்ஸ் போன்ற விடுதலை வரலாறுகள் வரைக்கும் படிக்க சொல்லி பிறகு அதில் கேள்வியும் கேட்பார்.

தான் தவறவிட்ட ஆங்கிலமொழிக்கல்வியை கற்கவேணும் என்பதற்காக உடுப்பிட்டி அரியம் மாஸ்ரரிடம் கிட்டுவையும் எம்மையும் ரியூசனுக்கு அனுப்பியவர் அவர்.

இவை எல்லாவற்றினும் இன்னுமொரு அவரது ஆளுமை மீண்டும் மீண்டும் சொல்லத்தக்கது.எல்லாவற்றிலும் முக்கியமானது அவர் முடிவெடுப்பது என்பது ஒரு தனிமனித முடிவாக ஒருபோதும் இருந்தது இல்லை..எல்லோருடனும் கூடி கதைத்தே முடிவுகளை எடுக்கும் பண்பு நிறைந்தவர்.

.உதாரணத்துக்கு ஒரு சம்பவம்,83ம் ஆண்டு மேமாதம் யாழ். குடாவின் மூன்று நகரசபைகளுக்கும், யாழ். மாநகரசபைக்கும் தேர்தல் நடாத்தப் போவதாக சிங்கள தேசம் அறிவித்ததும் அதனை எவ்வாறு எதிர்கொள்வது என்ற கருத்துகள் அப்போதிருந்த போராளிகளிடம் கதைத்தே எடுக்கப்பட்டது என்பது பலருக்கும் வெளித்தெரியாத உண்மை.

அந்த தேர்தலை நிராகரிக்கும்படி,வாக்களிப்பை புறக்கணிக்கும்படி மக்களை கோருவது என்று மக்களிடம் கோரவேண்டும் என்ற தலைவரின் கருத்து பலமணி நேரம் பல உறுப்பினர்களால் விவாதத்துக்கும் உட்படுத்தப்பட்டது.

நாமோ 28பேர். முப்படைகளினதும் பொலீஸ்படையினதும் உதவியுடன் தேர்தலை நடாத்த சிங்களம் தேசம் முற்பட்டால் எவ்வாறு நாம் வெல்லமுடியும் என்ற அவநம்பிக்கை குரல்கள் எழுந்தன.

மக்கள் எமது கோரிக்கையை நிராகரித்து தேர்தலில் வாக்களித்தால் சிங்களதேசம் அதனை வைத்து போராளிகளை தமிழ்மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்று பிரச்சாரம் செய்யும்.அது அமைப்பை அழிவுக்கு கொண்டு சென்று விடும் என்று சில உறுப்பினர்கள் தயக்கத்துடன் கதைத்தனர்.

நாம் பலமான பின்னர் இத்தகைய முயற்சிகளை செய்யலாம் என்று கருத்து தெரிவித்தனர்.

தலைவர் மிக ஆறுதலாக மிகமிக தெளிவாக விளக்கம் கொடுத்தார்.மறுநாள்கூட நீண்டது அந்த விவாதம். அப்போது தலைவர் சொன்ன ஒருவிடயம் ‘ அவன் எல்லா படையையும் வைத்திருக்கிறான் என்று பயந்து கொண்டிருந்தால் எங்களால் ஒன்றுமே செய்ய முடியாமல் போய்விடும்.

நாம் எமது மக்களை நம்பி இறங்குவோம். இருக்கின்ற எல்லா போராளிகளும் இருபத்துநான்கு மணிநேரமும் இதனை மட்டுமே இலக்காக வைத்து வேலை செய்தால் இது முடியும் ‘ என்றார்.

இறுதியில் எல்லோரது சம்மதத்துடன் தலைவரது கருத்தே ஏற்றுக்கொள்ளப்பட்டு தேர்தல் நிராகரிப்புக்கு மக்களை கோருவது என்று தீர்மானிக்கப்பட்டது.சிங்களஅரச இயந்திரத்துக்கான அனைத்து தேர்தல்களையும் நிராகரிப்போம் என்ற தலைப்புடன் மறுநாளே துண்டுப்பிரசுரம் எம்மால் வெளியிடப்பட்டது.

தொடர்ச்சியான வேலைகளை தலைவரே முன்னின்று செய்தார். செய்வித்தார்.

83மே 18ம்திகதி தேர்தல் முடிவு வந்தபோது 94 வீதமான மக்கள் எம் கோரிக்கையை ஏற்று தேர்தலை நிராகரித்திருந்தனர். நாம் எல்லோரும் வெற்றி குதூகலிப்பில் இருந்த போது தலைவர் அடுத்த கட்டத்துக்கான வேலையில் இருந்தார்.

இன்றும் தலைவர் சொன்ன அதே வசனம்தான் இந்த இனத்துக்கு மிக முக்கியமாக தேவைப்படுகிறது.

‘இலக்கை நிர்ணயித்து அர்ப்பண உணர்வோடு வேலை செய்தால் எந்த படைபலத்தையும் வெல்லலாம்’ அறுபது அகவை காணும் அந்த அதிமானுடன் எமக்கு நேற்றும் இன்றும் இனி என்றும் வழிகாட்டியாக முன் செல்வார்.

அதுவே இந்த இனத்தின் விடுதலைக்கான பாதை. அவரே இந்த இனத்தின் பேரொளி

**

மாபெரும் தமிழ் வீரனுக்கு இன்று அகவை அறுபது..

அவனுக்கு முன்னும் அவனுக்கு பின்னும் அவன் போல் ஒருவன் இல்லை..

தமிழினத்தின் மாபெரும் வீரனான தேசியத் தலைவர் மேதகு. வேலுப்பிள்ளை பிரபாகரனின் அறுபதாவது அகவை இன்று..

வைரவிழா காணும் தலைவர் வாழ்க என்ற மகிழ்வுடன் உலகம் முழுவதும் அவருடைய பிறந்த நாள் விழா எழுச்சியுடன் நடைபெறுகிறது.

எப்படி தமிழர்களின் வீர வரலாற்றில் ராஜராஜ சோழன், அவனுக்குப் பின்னர் இராஜேந்திர சோழன் ஆகிய இருவரும் உயர் பெரும் போர்க்கலையாளர் என்று போற்றப்படுகிறார்களோ… அவர்கள் வரிசையில் போற்றப்படும் உன்னத வீரன் பிரபாகரன்.

உலகத்தின் மிகச்சிறந்த கெரில்லாப் போர் வீரன் என்று பீ.பீ.சி செய்திச் சேவையே பிரபாகரனை தேர்வு செய்து புகழ்ந்தது ஒரு காலம்.

அதையெல்லாம் தாண்டி மரபு ரீதியான படை அமைத்து, போலீஸ் படை அமைத்து, நீதி மன்றுகளை அமைத்து, சமுதாய நிறுவனங்களை உருவாக்கி, வங்கித் தொழிற்பாடுகளை ஏற்படுத்தி, கலைகளை வளர்த்து, கடற்படை அமைத்து, வான்படை அமைக்கும் வரை முன்னேறிய உலகத்தின் ஒரேயொரு வீரன் பிரபாகரன்.

நீர்மூழ்கிக் கப்பலும், வான்படையும் கண்ட ஒரேயொரு தமிழ் வீரன்..

நெப்போலியனோ, அலக்சாண்டரோ, ராஜராஜ சோழனோ எட்டித் தொட்டிருக்காத முகடுகளை எல்லாம் தனது படைப்பிரிவால் எட்டித் தொட்ட ஒரேயொரு போர்த் தலைவன் பிரபாகரன்.

முப்பது ஆண்டு காலம் உலகத்தின் கண்களில் விரலைவிட்டு ஆட்டிய மாபெரும் போர்க்காவிய நாயகன்.

அவரைப்போல ஒரு வீரன் ஈழத் தமிழினத்தில் பிறந்தது அந்த இனம் செய்த மாபெரும் பெருமையாகும்.

கன்னடர்களிடம் அடி வாங்கி காயங்களுடன் வந்த தமிழக மக்களும் இந்திய நடுவண் அரசு இருக்கிறதென்றோ, தமிழகத்தில் ஓர் அரசு இருக்கிறது என்றோ பேசவில்லை பிரபாகரன் வருவான் கன்னட வெறியரை உதைக்க என்று பேசியதே வரலாறு.

தமிழ் வீரத்தின் சின்னமாக, தமிழர் மானத்தின் கவசமாக, தமிழர் வாழ்வின் தலை நிமிர்வாக இன்றும் இலங்கும் ஒரேயொரு அடையாளம் தேசியத் தலைவர் திரு. பிரபாகரன் அவர்களே.

சரியான திட்டமிடுகையும், அதற்கான இடையறாத உழைப்பும், அசைக்க முடியாத நம்பிக்கையும் இருந்தாலே போதும் இலக்கை எட்டித் தொட்டுவிடலாம் என்று கூறி சின்னஞ்சிறு இனத்தை பென்னம் பெரும் சாதனை படைக்கச் செய்த செயல் வீரன்.

இன்று உலகத்தில் உள்ள போராட்டக்காரரை எல்லாம் நிதி வழங்கி நெறிப்படுத்திக் கொண்டிருப்பது ஐ.நாவில் அங்கத்துவம் பெற்றுள்ள நாடுகளே.

இன்றும் உலகப் பயங்கரவாதிகளுக்கு பைனான்ஸ் செய்வது ஐ.நாவில் அங்கத்துவம் பெற்ற நாடுகள்தான், ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பிற்கான நிதி மத்திய கிழக்கில் இருந்தே போகிறதாக கூறுகிறார்கள்.

ஆனால் உலகத்தில் எந்த நாட்டின் சிந்தனையையும் ஏற்றுக் கொள்ளாது, எந்தவொரு உலக சித்தாந்தங்களையும் தமது சித்தாந்தமாக வரித்துக் கொள்ளாது, நமது நிலத்தோடு கூடிய தமிழ் சித்தாந்தமே என் சித்தாத்தம் என்று உறுதிபட நின்று அதில் கடுகளவும் மாற்றம் செய்யாது போராடியவர் பிரபாகரன்.

உன்னதங்களை இழக்காது போராடிய உன்னதங்களின் உச்சம் பிரபாகரன்.

நோர்வே நாட்டு தூதுவர் எரிக் சோல்கெய்ம் விடுதலைப் புலிகள் சிறந்த போராளிகள் ஆனால் அவர்களுக்கு உலக அரசியல் போதாது என்றார்.

உலக அரசியலின் அவலங்களை தெரிந்த எவனும் அதை ஏற்றுக் கொள்ள மாட்டான், இவ்வளவு பெரிய மாவீர தியாகங்களை சுமந்த இனம் களங்கம் நிறைந்த உலக அரசியலுக்கு வளைந்து போகாது என்ற பிரபாகரனின் மௌனமான பதிலை இன்றுவரை அவரால் விளங்க முடியவில்லை என்பதுதான் உண்மை.

உலகத்தால் விளங்க முடியாத உன்னதம் நிறைந்த ஆளுமையின் வடிவமே பிரபாகரன்.

தமிழன் பயங்கரவாதி அல்ல..

தமிழன் உலகத்தின் உயர் நாகரிகமுள்ள இனம்…

அவன் மரணத்திற்கு பயந்து மண்டியிடும் கோழை அல்ல..

அவன் சுயநலவாதியும் அல்ல..

அவன் அறிந்த அரசியலின் அரிச்சுவட்டையும் நீங்கள் கற்றுக்கொள்ளவில்லை என்பதை துணிச்சலுடன் ஐ.நாவில் அங்கம் பெற்று பாதுகாப்பு அடைந்துள்ள உலக சமுதாயத்திற்கு நாடில்லாத ஓர் இனத்தின் சார்பில் உணர்த்திய ஒரே ஒரு வீரன் பிரபாகரன்.

அவனுக்கு இணையான ஒருவன் அவனுக்கு முன்னும் இந்த உலகில் இல்லை அவனுக்கும் பின்னும் இந்த உலகில் இல்லை..

தம்பி பிரபாகரன் தமிழினத்தில் பிறந்தமைக்காக பெருமைப்பட்டு தமிழ்த்தாய் தன் புதல்வனுக்கு அறுபதாவது பிறந்த நாளை இன்று அக மகிழ்ந்து கொண்டாடுகிறாள்.

பிறந்த நாள் இன்று பிறந்த நாள்..
வைரவிழா காணும் எங்கள் வீரனுக்கு இன்று பிறந்தநாள்..
வெண்ணிலா வாழும்வரை நீ வாழ வேண்டும் என்று
எண்ணிலா ஆசை கொண்டு ஏற்றுவோம் சுடர்கள் இன்று..
பிறந்த நாள் தலைவர் பிறந்த நாள்…

 

அகவை 60 காணும் தலைவா! நீ பிறந்தமண்ணில் பிறந்ததே பெருமை எமக்கு

prabakaran birthday wishesஉலகத்தின் எத்தனையோ நாடுகளில் மக்கள் மூடநம்பிக்கைக்குள்ளும் அடிமைத்தனத்துள்ளுள்ளும் அகப்பட்டு முன்னேற்றமடைவதற்கோ முடியாதவர்களாக உணவுக்காக மட்டும் உழைப்பதும் உழைத்ததை உண்பதும் இனப்பெருக்கம் செய்வதும் என்று மனிதமந்தைகளாக வாழ்ந்தார்கள் என்ற சரித்திரம் உள்ளது. ஆனால் அப்படி வாழ்ந்த மக்களின் இன்றய வாழ்க்கை எப்படி இருக்கின்றது அவர்கள் இப்போது எப்படி வாழ்கின்றார்கள் என்று பார்த்தால் உலகத்தில் நாகரிகம் மிக்கவர்களாகவும் அறிவாளிகளாகவும் எத்தனையோ சட்டதிட்டங்களை உருவாக்கியவர்களாகவும் எங்கும் சுதந்திரமாக நடமாடக்கூடிய வல்லமை மிக்கவர்களாகவும் மாறியுள்ளமை தெளிவாகும் .எப்படி இந்த மாற்றம் ? மந்தைக்கூட்டங்களாக வாழ்ந்துகொண்டிருந்த மனிதர்கள் எவ்வாறு இப்படி ஒரு நல்ல நிலையினை அடைந்தார்கள் அந்த மாற்றத்தினை செய்தது யார் ? என்ற வினா எழும்போது அதற்கு ஒரே பதில் அவர்களுக்கு கிடைத்த தலைமை என்பதேயாகும் நல்ல மனிதர்களின் பிறப்பினால்தான் ஒரு சமூகமே விழித்துக்கொள்கின்றது விடுதலையடைகின்றது.

இதேபோலத்தான் ஈழமண்ணிலே அழியப்போகும் தனது இனத்தினை காப்பாற்ற தமிழினத்தின் நீதிக்காகவும் நியாயத்திற்காகவும் போராட 1954ஆம் ஆண்டு கார்திகை மாதம் வீரத்தமிழ்மகன் உலகத்திமிழினத்தின் ஒப்பற்ற தலைவன் அதிமேதகு வே.பிரபாகரன் அவர்கள் வல்வெட்டித்துறையிலே பிறந்தார் பிரபாகரன் வல்வெட்டித்துறையில் ஊரிக்காடு எனும் இடத்திலுள்ள சிதம்பரா கல்லூரியில் 10ம் வகுப்பு வரையிலும் கற்றார். தமிழ் மாணவர்கள் பாடசாலைக் கல்வியை முடித்தபிறகு மேற்படிப்புக்குச் செல்ல இலங்கை அரசின் மேற்கல்வி தரப்படுத்தல் கொள்கை ஒரு தடையாக இருந்தது. 10ம் வகுப்புவரையிலும் படித்த பிரபாகரன் விடுதலைப் போராளியாகச் செயற்படத் தொடங்கி விட்டதனால் படிப்பைத் தொடரவில்லை. பக்கத்துவீட்டு நிலவரம்கூடதெரியாத சிறுபிள்ளைகளாக அனேகமான பிள்ளைகள் வாழ்ந்துகொண்டிருக்கும்போது தன் இனம் படும் வேதனைகளையும் சிங்களப்பேரினவாத அரசினால் தன் இனம் அடக்கியாளப்படுகின்றது என்பதனையும் புரிந்துகொள்வதற்குக்கூட பக்குவமில்லாத அந்த பதினைந்து வயதிலேயே. பேராடவேண்டும் தன் இனத்தினை சிங்களப்பேரினவாதிகளிடம் இருந்து மீட்டெடுக்க வேண்டும் என்ற எண்ணம் எவ்வாறு உருவாகியது ?அரசகுடும்பத்தில் அல்லாது சாதாரண குடும்பத்தில் பிறந்து தனது பதினைந்து வயதிலேயே தன் இனத்திற்காக ஒருவன் போராடப்புறப்பட்டான் என்பதும் தானாகவே ஒரு விடுதலை அமைப்பினை உருவாக்கினான் என்பது உலகத்தில் வரையப்படாத வரலாறு. அதிசயிக்கத்தக்க விடயம் ஆதாலால்த்தான் உலகத்தமிழினத்தின் ஒப்பற்றதலைவனாக பிரபாகரனை தமிழினம் ஏற்றுக்கொண்டுள்ளது.

பிரபாகரன் அவர்களின் போக்கு அவரது பெற்றோருக்குப் புரியவில்லை. ஒருநாள் காவல்துறை பிரபாகரனை தேடி முதன்முதலில் அதிகாலை 3 மணிக்கு வீடுவந்த போதே அவர்களால் அறிந்து கொள்ள முடிந்தது. காவல்துறையினரிடம் இருந்து தப்பிச் சென்ற பிரபாகரன் அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு தன் வீட்டிற்குத் நிரந்தரமாக திரும்பவே இல்லை பதினைந்து வயதிலே தாய் தந்தையின் அரவணைப்பிலே உறங்கவேண்டிய அந்தச்சின்னஞ்சிறு பிள்ளை தலைமறைவுப்போராளியாக மாறியது தன் இனத்திற்காக அதற்காக எத்தனையோ பழிகளையும் பயங்கரவாதி என்ற பட்டத்தினையும் இன்றுவரைக்கும் சுமந்துகொண்டிருக்கின்றான்

அந்த உத்தமபுத்திரன் பிரபாகரன் சிறுவனாக இருந்தபோது 1958 ஆம் ஆண்டில் நடந்த தமிழர் இன அழிப்பில் நிகழ்ந்த பயங்கர சம்பவங்கள் அவர் மனதில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தின.

சிங்கள இனவெறியரால் ஈழத்தமிழர்கள், கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவங்களை அவர் கேள்விப்பட்டார். அவருடைய பெற்றோருக்கு நன்கு தெரிந்த ஒரு விதவைத்தாய் தனக்கு நேர்ந்த துயரச் சம்பவத்தைச் சிறுவனாக இருந்த பிரபாகரனுக்குக் கூறினார். பாணந்துறையில் இந்து குரு ஒருவர் உயிரோடு தீ மூட்டி எரிக்கப்பட்ட சம்பவம் போன்ற கொடூரமான வன்முறைகளை அவர் அறிந்தபோது, சிங்கள அரசின் பிடிக்குள்ளிருக்கும் தமிழ் மக்களை மீட்டெடுக்க வேண்டுமென்ற உள்ளுணர்வும் முனைப்பும் அவர் மனதில் உருவாகியது. நிராயுதபாணிகளான அப்பாவித் தமிழர்களுக்கெதிராக ஆயுத வலிமையைப் பிரயோகிக்கும் இனவெறி அரசினை ஆயுதப் போராட்டத்தின் மூலமே எதிர்கொள்ள முடியும் என்று அவர் முடிவு செய்தார். தாமும் தமது குடும்பமும் வாழ்ந்தால்போதும் என்று
சுயநலவாதப்பேய்கள் வாழும் இந்த உலகத்தில் தன் இனம் வாழவேண்டும் என்ற எண்ணம் எல்லோருக்கும் வந்துவிடுவதில்லை ஆனால் அப்படிப்பட்ட உயர்ந்த எண்ணமும் எல்லோரும் வாழவேண்டும் என்ற சிந்தனையும் எங்கள் தேசியத்தலைவனது எண்ணத்தில் தேன்றிய காரணத்தினால் 1972ல் புதிய தமிழ்ப் புலிகள் என்ற அமைப்பை தனது 18-ஆவது வயதில் பிரபாகரன் தொடங்கினார். மிண்டும் வைகாசி 5, 1976 இல் புதிய தமிழ்ப்புலிகள் இயக்கம் தமிழீழ விடுதலைப் புலிகள் என்று பெயர் மாற்றப்பட்டது.

“‘நான் பேச்சுக்கு எப்பொழுதுமே குறைந்த முக்கியத்துவத்தையே தருகிறேன். நாம் செயல் மூலம் வளர்ந்து வந்த பின்தான் பேச ஆரம்பிக்கவேண்டும்.’”இது அந்த உத்தமமான தலைவனின் கூற்று இதையே அவர் செயலிலும் காட்டினார்.கூட்டம் கூட்டியவன் வெறும் கூச்சல்போட்டவன் எல்லாம் தலைவனாகமுடியாது. ஏழு பேருடன் ஆரம்பிக்கப்பட்ட தமிழீழவிடுதலைப்புலிகள் என்ற இயக்கம் இன்று உலகத்தின் மூலைமுடுக்குகளெங்கும் பரவியுள்ளது எப்படி? அடிவாங்கி அடிவாங்கி அழுதுகொண்டிருந்த தமிழினம் திருப்பி அடிக்கும் வல்லமையினைப்பெற்றது எப்படி? அதில்தான் இருக்கின்றது அந்தத்தலைவனின் தலைமைத்துவம் உன்மையான அற்பணிப்பு நுன்னறிவு வீரம் விவேகம் இன்னும் எத்தனையோ காரணங்கள் கூறிக்கொண்டேபோகலாம் எங்களில் அனேகமானவர்கள் எப்போதும் மற்றவரை குறைகூறிக்கொள்வதிலே காலத்தை கடத்துகின்றோம் ஆனால் எங்கள் தாலைவனோ “ஒரு தவறு நடந்தால் பிழைகளை உங்களில்
இருந்து தேடுங்கள். மற்றவர்களில் இருந்து தேடாதீர்கள்.” என்று கூறி மானிடசமூகத்திற்கே வெற்றிக்காண பல வழிகளைக்காட்டியுள்ளார்.

நானே உலகத்தில் உத்தமன் நானே உலகத்தில் உன்னதமானன் என்று பலர் தலையில் அடித்து சத்தியம் செய்யும் அதே நேரம் எங்கள் ஒப்பற்றதலைவன் இவ்வாறு கூறுகின்றான் “உண்மையானவராக இருந்தால் அவர் இலட்சியத்திற்காக செத்திருக்க வேண்டும். அல்லது இலட்சியத்தை அடைந்திருக்க வேண்டும். இப்படிப் பார்த்தால் எங்களில் மாவீரர்கள்தான் உண்மையானவர்கள் உயர்ந்தவர்கள் நானும் உண்மையானவனல்லன்.” என்று தன்னையும் தாழ்த்திக்கொள்வார். இப்படிப்பட்ட மனிதர்கள் உலகத்தில் பிறப்பதினால்தான் என்னவோ இன்னமும் நீதியும் நியாயமும் உயிர்வாழ்கினறது இறந்தவனை புதைத்துவிட்டு அந்த இடத்தையே மறந்துவிடும் மனிதர்களுக்கு மத்தியிலே “வெற்றிகளைப் போராளிகளுக்கு கொடுங்கள். தோல்விகளை நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள்.” “எதோ ஒருவன் பிறந்தான், வளர்ந்தான், சண்டை பிடித்தான், மடிந்தான் என்றுதான் நாங்கள் வீரச்சாவடையும் போராளிகளைப் பார்க்கிறோம். இந்தநிலை மாறவேண்டும். இவர்கள் நாம் வணங்கும் தெய்வங்களாக போற்றப்படவேண்டும்.” என்று விடுதைலைக்காகவீழ்ந்துபோன வீரர்களை பூசைக்குரிய புனிதர்களாகவும் அராதனைக்குரிய தெய்வங்களாகவும் மதித்தார் அதனால்தான் இத்தனை வீரர்களும் ஒருவர்பின் ஒருவராக களத்திலே குதித்தார்கள்.

கால்மிதிக்கும் கற்களாகவும் கரும் பாறைகளாகவும் இருந்த தமிழர்களை சிற்பங்களாக செதுக்கிய தலைசிறந்த சிற்பி எங்கள் தலைவன் அச்சம் என்ற சொல்லே அச்சப்படும் அவனைக்கண்டால் வீரத்தின் மறுவடிவமாக எங்கள் மண்ணிலே அவன் தலைநிமிர்ந்து நின்றபோது அவன் பின்னாலே ஆயிரம் ஆயிரம் போராளிகள் அணிவகுத்துக்கொண்டார்கள் போராளிகளுக்கு அறிவைப்புகட்டும் சிறந்த ஆசானாகவும் பாசத்தினைக்காட்டும் நல்ல நண்பனாகவும் களத்திலே தோளோடு தோள் கொடுத்துநின்றான் தமிழர்கள் என்றால் நாய்கள் என்று நகைபேசிய சிங்களப்பேரினவாதிகள் தமிழர்கள் என்றால் புலிகள் என்று கிலிகொள்ளும் அளவிற்கு ஒவ்வொரு தமிழனையும் தமிழிச்சியையும் வளத்தெடுத்தான் காற்றுக்கூட நுளையமுடியாது என்ற இரும்புக்கோட்டைகளுக்குள் எல்லாம் புலிகளால் நுளைந்துவிடமுடியும் என்று மெய்ப்பித்துக்காட்டினான்.

ஒன்றா இரண்டா எத்தனையோ வீரதீரச்செயல்களையெல்லாம் நடுக்காடுகளுக்குள் இருந்தபடியே செய்துகாட்டியவீரத்தமிழன் பிரபாகரன் உலகநாடுகளால் அங்கீகரிக்கப்படத ஒரு சுதந்திரதமிழீழதேசத்தின் தலைவனாகவும் தளபதியாகவும் தமிழினத்தின் விடியலுக்காய் பொறுப்பேற்று போராடினான்.

எத்தனை படையணிகள் எத்தனை உற்கட்டமைப்புக்கள் வியக்கத்தக்க விடயங்களையெல்லாம் எப்படி எங்கள் தலைவனால் மட்டும் சாதரணமாக செய்ய முடிந்தது தன் நாட்டின் மக்களின் நலனுக்காக எத்தனையோ நல்ல சட்டதிட்டங்களை உருவாக்கினான் நீதி நெறிதவறாது தமிழீழ அரசின் மன்னனாக அவன் அரசாண்ட காலத்தில் அந்த மாவீரனின் ஆட்சியிலே வாழ்ந்தோம் என்பதும் அவன் பிறந்த மன்ணிலே நாம் பிறந்தோம் என்பதும் எமக்கு பெருமையும் எம்மையும் அறியாமல் செருக்கினையும் கொடுக்கின்றது.

எத்தனையோ நாடுகள் தடைசெய்தும் பயங்கரவாதி என்று முத்திரை குற்றியும் அதையெல்லாம் பொருட்படுத்தாது யாருக்கும் தலைகுனியாது புலிகள் என்றால் அய்யோ அம்மே என்று சிங்களம் இன்றுவரைக்கும் அலறும்படி தமிழீழவிடுதலைப்புலிகளை வளத்தெடுத்தான்

கடற்புலிகள்-வான்புலிகள்-லெப். கேணல் இராதா விமான எதிர்ப்புப் படையணி-மாலதி படையணி (பெண்புலிகள்)-சோதியா படையணி (பெண்புலிகள்) -அன்பரசி படையணி சிறுத்தைகள்-கரும்புலிகள்-கடற்கரும்புலிகள்-கேணல் கிட்டுப் பீரங்கிப் படையணி-லெப். கேணல் விக்ரர் கவசவாகன எதிர்ப்புப் படையணி-லெப். கேணல் குட்டிசிறி மோட்டார்ப் படையணி-ஜெயந்தன் படையணி-இம்ரான் பாண்டியன் படையணி-இம்ரான் பாண்டியன் உந்துருளி அணி-எல்லைப் படை-துணைப்படை என சிங்களப்பேரினவாதத்தின் முதுகெலும்பினை முறிக்கவும் தமிழர்கள் தலைநிமிர்ந்து துணிச்சலுடன் நடமாடவும் இத்தனை படையணிகளையும் உருவாக்கினார்.

தமிழ்மக்களின் நலனுக்காகவும் தமிழினத்தின் நலனுக்காகவும் ஆட்சி அதிகாரங்கள் யாவும் மக்களை பாதித்துவிடக்கூடாது என்பதிற்காகவும் அவரால் எத்தனையோ உற்கட்டமைப்புக்கள் உருவாக்கப்பட்டன (வழங்கற் பிரிவு-மருத்துவப் பிரிவு-கொள்முதல் பிரிவு-பரப்புரைப் பிரிவு-தமிழீழப் பொறியியற்றுறை-வெடிபொருள் தொழில்நுட்பப் பிரிவு-கணிணி தொழில்நுட்பப் பிரிவு இலத்திரனியல் தொழில்நுட்பப் பிரிவு-போர்கருவித் தொழிற்சாலை-தமிழீழ இராணுவ விஞ்ஞானக் கல்லூரி-விடுதலைப்புலிகளின் ஆங்கிலக் கல்லூரி திரைப்பட, புத்தக மொழிபெயர்ப்புத் துறை-புலனாய்வுத் துறை-தமிழீழ விடுதகலைப்புலிகளின் அரசியற்றுறை – -தமிழீழ விளையாட்டுத் துறை -தமிழீழக் கல்வி மேம்பாட்டுக் கழகம்-தமிழீழக் கலை பண்பாட்டுக் கழகம்-தமிழீழ நீதித்துறை-தமிழீழ நிர்வாக துறை-தமிழீழ நிதித் துறை – தமிழீழ வைப்பகம் (வங்கி) – தமிழீழக் காவல்துறை-விடுதலைப்புலிகளின் சுகாதாரப் பிரிவு – சூழல் நல்லாட்சி ஆணையம்-தமிழீழ வனவளப் பாதுகாப்புப் பிரிவு-தமிழீழப் பொருண்மிய மேம்பாட்டு நிறுவனம் -பொருண்மிய மதியுரையகம் -தமிழீழக் காலநிலை அவதானிப்பு நிலையம்-தமிழீழக் காட்டுமானப் பொறியியற் செயலகம் -வடகிழக்கு மனித உரிமைகள் செயலகம் – ஓளிக்கலைப்பிரிவு (நிதர்சனம், ஒளி வீச்சு) – /விடுதலைப்புலிகளின் வெளியீட்டுப் பிரிவு -புலிகளின் குரல் (வானொலி) – விடு தலைப்புலிகள் பத்திரிகை -எரிமலை சஞ்சிகை – தமிழீழத் தேசியத் தொலைக்காட்சி – என இவை யாவும் மக்களின் நலனுக்காகவே தவிர எந்தவிதத்திலும் அது தமிழ்மக்களைப்பாதிப்பதில்லை.

இப்படி தமிழினத்தின் விடியலுக்காகவும் விடுதலைக்காகவும் போராடி தமிழினத்தின் அடையாளத்தினை உலகிற்கு காட்டிய ஒரு மாபெரும்தலைவன் இந்த காத்திகைமாதத்தில் பிறந்தான் என்பதால் அது கார்த்திகை மாதத்திற்கே பெருமை ஈழத்தமிழர்களுக்கு கிடைத்த பிரபாகரன் என்ற தலைவனைப்போல் தம்மை தலைவன் என்று சொல்லும் எல்லோருமே இருப்பதில்லை .ஆட்சியும் அதிகாராமும் கைகளில் இருக்கும்வரை கிடைத்ததை எல்லாம் சுறுட்டிவிடவேண்டும். என்ற எண்ணத்தில்தான் அதிகமாணவர்கள் தலைவர்களாக ஆசைப்படுகின்றனர் உதரணமாக எமது அண்மையிலே இருக்கும் தமிழகத்தினை எடுத்துக்கொண்டால் தம்மை தலைவர்கள் என்று சொல்லிக்கொள்வோர் அதிகமானவர்கள் இருந்தபோதும் உனமையான தலைவர்களாக மக்களின் நலம்காக்கும் எண்ணத்துடன் இதுவரை
எந்தத்தலைவர்களும் செயற்படவில்லை மக்களைத்தெளிவுபடுத்தவேண்டிய தலைவர்களாலேயே அங்கே மக்கள் ஏமாற்றப்படுகின்றனர் அரசியல் சினிமா என்ற இரண்டு கொடிய நோய்களால் அங்கே மக்கள் பீடிக்கப்பட்டு முன்னேறமுடியாதவர்களாக இன்றுவரைக்கும் வாழ்கின்றனர்.

ஈழத்தீவில் வல்வெட்டித்துறையிலே பிறந்த பிரபாகரன் இந்தியா மலேசியா சிங்கப்பூர் தென்னாபிரிக்கா அமெரிக்கா ஐரோப்பியா என்று உலகமெங்கும் வாழும் தமிழர்களின் உள்ளங்களிலே நீங்காத இடத்தினைப்பிடித்து உலகத்தமிழர்களின் ஒரே தலைவனாக முடிந்தது அங்கேதான் அந்தத்தலைவனின் வீரதீரமும் தியாகமும் உயர்ந்தபண்புகளும் உள்ளன தமது தலைவன் தமக்கான விடுதலையினை பொற்றுக்கிடுக்காது மரணித்துப்போகமாட்டான் என்ற நம்பிக்கையினை ஒட்டுமொத்த தமிழர்களின் மனங்களிலே ஆழமாக பதியச்செய்தது அந்த தலைவனின் தனித்துவத்தினை வெளிச்சமிட்டுக்காட்டும்.

எங்கோ ஒரு தேசத்தில் எங்கள் தலைவன் வாழ்ந்துகொண்டிருகின்றான் என்ற நம்பிக்கையுடன் இன்றுவரை காத்திருக்கின்றது தமிழினம் ஆனால் இதற்கான பதிலை காலாம்தான் பெற்றுத்தரவேண்டும் நீதியும் நியாயமும் நிலைத்திருப்பது உன்மையாக இருந்தால் நம்பிக்கையுடன் காத்திருக்கும் தமிழர்கள் ஏமார்ந்துபோகாமாட்டார்கள் எங்கள் மண்ணைச்சூழ்ந்துகொண்ட சிங்களப்பனி விலக ஈழமண்ணின் கதிரவன் காரிருளினைக்கிழித்து உதயமாகுவான் விரைவிலே …

இரணியன்

SHARE