ஐக்கிய தேசிய கட்சியின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டம் மட்டக்களப்பு நகரில் நடைபெற்றது.
ஐக்கிய தேசிய கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் அ.சசிதரன் தலைமையில் மட்டக்களப்பு பஸ் நிலையத்துக்கு முன்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்வில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க, ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளர் தயா கமகே மற்றும் மட்டக்களப்பு மாவட்ட தலைமை வேட்பாளர் அமீர் அலி உட்பட கட்சியின் வேட்பாளர்களும் கலந்துகொண்டனர்.
இங்கு கருத்து தெரிவித்த ரணில் விக்ரமசிங்க,
மகாவலி திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு உள்வாங்கப்பட்டு அதன் மூலம் நீர்பாசன வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கவுள்ளேன்.
இந்த நாட்டில் உறுதிமிக்க அரசாங்கம் ஒன்று தேவைப்படுகின்றது அதற்காக மக்கள் ஐக்கிய தேசிய கட்சிக்கு அணிதிரண்டு வாக்களிக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.
இக்கூட்டத்தில், தலைமை வேட்பாளர் அமீர் அலி, வேட்பாளரும் முன்னாள் பிரதியமைச்சருமான எஸ்.கணேசமூர்த்தி, மாவட்ட அமைப்பாளர் அ.சசிதரன் ஆகியோர் உரையாற்றினர்.
இனப்பிரச்சினை குறித்து வாய் திறக்காத ரணில்!
கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக தங்களது உரிமைகளுக்காக போராடிவரும் தமிழ் மக்களின் இனப்பிரச்சினை தீர்வு குறித்து இன்று மட்டக்களப்பு நகரில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வாய் திறக்காதது தமிழ் மக்கள் மத்தியில் பெருத்த விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
இன்று மாலை மட்டக்களப்பு நகரில் நடைபெற்ற ஐக்கிய தேசிய முன்னனியின் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய ரணில் விக்கிரமசிங்க,
இந்த நாட்டில் கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாகவுள்ள சிறுபான்மையின மக்களின் இனப்பிரச்சினை குறித்து பேசவில்லை என்பதுடன், இந்தநாட்டில் தமிழ் மக்களுக்கு பிரச்சினையே இல்லாததுபோல் வெறுமனே அபிவிருத்தியை பற்றி மாத்திரமே பேசிச் சென்றுள்ளமையானது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிறுபான்மையின மக்களின் வாக்குகளினால் ஆட்சிபீடமேரிய ரணில் விக்கிரமசிங்கா அவர்கள் கடந்த ஒரு வருட காலத்தில் எந்த மேடைகளிளும் சிறுபான்மையினரின் இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து பேசவில்லை என்பதுடன் அது குறித்த ஊடகவியளாலர்களின் கேள்விகளையும் புறந்தள்ளியே வந்துள்ளார்.
இந்நிலையில் தமிழர்களின் பிரதிநிதிகளாக வரவுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் இம்முறை தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு குறித்து வரவிருக்கின்ற இலங்கை அரசுடன் தீர்க்கமான முடிவு ஒன்றை எடுப்பதற்கான கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர் .