உலகக் கிண்ண டி20யை வெற்றியுடன் தொடங்கிய இந்தியா

485

மகளிர் உலகக் கிண்ண டி20 தொடரின் முதல் ஆட்டத்தில், இந்திய அணி 34 ஓட்டங்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது.

மேற்கிந்திய தீவுகளில் மகளிர் உலகக் கிண்ண டி20 கிரிக்கெட் தொடர் நேற்று தொடங்கியது. முதல் போட்டியில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதின. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.

தொடக்க வீராங்கனைகளான தானியா பாட்டியா(9), மந்தனா(2) ஆகியோர் சொற்ப ஓட்டங்களில் வெளியேறினர். பின்னர் வந்த ஜெமிமா ரோட்ரிகஸ் அதிரடியில் கலக்கினார். ஹேமலதா தனது பங்குக்கு 7 பந்துகளில் 15 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அவரைத் தொடர்ந்து வந்த ஹர்மன்பிரீத் கவுர் நியூசிலாந்தின் பந்துவீச்சை சிதறடித்தார். சிக்சர் மழையாக பொழிந்த அவர், விரைவாக அரைசதம் கடந்தார். அவருக்கு பக்கபலமாக விளையாடிய ஜெமிமா ரோட்ரிகஸும் அரைசதம் விளாசினார்.

இவர்களின் அதிரடி ஆட்டத்தினால் அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. இந்நிலையில் 45 பந்துகளில் 59 ஓட்டங்கள் எடுத்திருந்த ஜெமிமா ஆட்டமிழந்தார். அதன் பின்னர் அதிரடியில் மிரட்டிய ஹர்மன்பிரீத் சதம் விளாசினார்.

இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 194 ஓட்டங்கள் குவித்தது. ஹர்மன்பிரீத் கவுர் 51 பந்துகளில் 8 சிக்சர், 7 பவுண்டரிகளுடன் 103 ஓட்டங்கள் எடுத்தார். இந்திய அணி குவித்த இந்த ஸ்கோர் தான், டி20 உலகக் கிண்ண தொடரில் ஒரு அணி எடுத்த அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.

பின்னர் ஆடிய நியூசிலாந்து அணி தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்தது. அந்த அணியில் தொடக்க வீராங்கனை சூசி பேட்ஸ் அதிரடியாக 50 பந்துகளில் 67 ஓட்டங்களும், கேட்டி மார்டின் 25 பந்துகளில் 39 ஓட்டங்கள் எடுத்தனர்.

மற்ற வீராங்கனைகள் சொற்ப ஓட்டங்களில் வெளியேறியதால், நியூசிலாந்து அணி 9 விக்கெட் இழப்புக்கு 160 ஓட்டங்கள் எடுத்து 34 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்திய அணி தரப்பில் ஹேமலதா, பூனம் யாதவ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

SHARE