உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் கனடாக் கிளை “விருட்சம் 2016”என்ற நிகழ்வினை டொராண்டோவில் உள்ள ஐயப்பன் ஆலய கலாச்சார மண்டபத்தில் உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கத்தின் முன்னாள் தலைவரான அமரர் செல்லையா அரங்கில் 18-06-2016 ல் மிகச் சிறப்பாக நடத்தியது.
முதல் நிகழ்வாக ராகாலயா நுண்கலைக் கல்லூரி சங்கீத கலா வித்தகர் லசந்தி ராஜ்குமார் அவர்களின் மாணவர்களது வாத்திய இசைக் கச்சேரி இடம் பெற்றது.
வீணை, வயலின், மிருதங்கம், தபேலா ஆகிய இசைக் கருவிகளை மிக அருமையாகவும் நேர்த்தியாகவும் கையாண்டார்கள்.
அந்த இசையானது அனைவரயும் மயக்கியது. மாணவர்களை மிகச் சிறப்பாகப் பயிற்றுவித்த லசந்தி அவர்கள் பெரும் பாராட்டுதலுக்கு உரியவர்.
மௌன அஞ்சலியைத் தொடர்ந்து கணபதி ரவீந்திரன் வரவேற்பு உரை நிகழ்த்தினார். கனடாக் கிளையின் தலைவர் ரவிச்சந்திரனும் கீதவாணி அதிபர் நடா. ராஜ்குமார் அவர்களின் உரைகளைத் தொடர்ந்து கலைக்கோவில் நுண்கலைக் கல்லூரி வனிதா குகேந்திரன் அவர்களின் மாணவிகள் வரவேற்பு நடனத்தை ஆடினார்கள்.
வரவேற்பு நடனத்தைத் தொடர்ந்து சக்தி சங்கீத அகாடமி நிறுவனர் பராசக்தி விநாயக தேவராஜாவின் மாணவர்கள் நாட்டுப்புறப் பாடல்களைத் திறமையாகப் பாடினார்கள்.
உ.த.ப.இ மாணவர்களின் அகத்தியர் நாடகம் இடம் பெற்றது. தாய், தந்தையின் சிறப்பையும் அவர்களுக்குச் சேவை செய்வதே பெரும் புண்ணியம் என்பதை இந்த நாடகம் உணர்த்தியது.
அன்றைய சிறப்பு நிகழ்வாக புதுச்சேரி பட்ட மேற்படிப்பு மையத்தின் முனைவர் மு. இளங்கோவன் “நாட்டுப்புறப் பாடல்களில் தமிழ்ப் பண்பாட்டுக் கூறுகள் “ என்ற தலைப்பில் அருமையானதொரு உரை நிகழத்தினார்.
தனது இனிய குரலினால் பல நாட்டுப் புறப் பாடல்களைப் பாடி அனைவரையும் கவர்ந்தார். தமிழ் மொழியின் சிறப்பு, பெருமை, தொன்மை பற்றிய பல அரிய தகவல்களையும் பகிர்ந்து கொண்டார்.
ருத்திர ராகம் வர்மக் கல்லூரி மாணவர்கள் தமிழரின் பாரம்பரிய வீரக் கலையான சிலம்பாட்டத்தைப் பாடல்களுடன் நிகழ்த்தினர். அதனை அடுத்து வித்யா பவ நாட்டியப் பள்ளி மாணவிகள் நிவேதிக்கா நகுலராஜா, அமிர்தவர்சனி நகுலராஜா சகோதரிகள் “வீரம்” என்ற நாட்டிய நாடகத்தை அளித்தனர்.
மரணம் எப்போதும் வரும். ஆனால் கோழையாக வாழாமல் வீரத்துடன் வாழ வேண்டும் என்பதை இந்த நாடகம் உணர்த்தியது. இன்று பாரதியார் பிறந்து வந்தால் எப்படி இருக்கும் என்பதை அவரது பாடல்களை வைத்து சாயி இல்ல பாலவிகா மாணவர்கள் “நவீன பாரதியார்” என்ற நகைச் சுவை நாடகம் மூலம் அனைவரையும் மகிழ்சிக் கடலில் ஆழ்த்தினார்கள். வாசுகி வைகுந்தன் இதனைத் தயாரித்து வழங்கினார். நல்லதொரு விழாவினை நடத்தியமைக்கு உ.த.ப.இ கனடாக் கிளை பெருமைப் பட வேண்டும்.
இந்த நிகழ்வினைத் தமிழ்ப் பற்று காரணமாகவும் தமிழ் எல்லோரிடமும் சென்று அடைய வேண்டும் என்பதற்காக முற்றும் முழுதாக இந்த நிகழ்ச்சி இலவசமாக அளிக்கப்பட்டது.