
இந்திய கடற்படையின் ஆறு வீராங்கனைகள் உலகம் சுற்றும் பயணத்தை துவக்கினர்.
கோவா தலைநகர் பனாஜியில் இந்திய கடற்படை தளத்திலிருந்து கடற்படை வீராங்கனைகள் ஆறு பேர், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ‘ஐ.என்.எஸ்.வி., தாரிணி’ கப்பலில் உலகம் சுற்றும் பயணத்தை துவக்கினர்.
உலகம் சுற்றும் இந்த குழுவுக்கு, லெப்டினென்ட் கமாண்டர், வர்த்திகா ஜோஷி தலைமை வகிக்கிறார். லெப்டினென்ட் கமாண்டர்கள், பிரதிபா ஜம்வல், பி.சுவாதி, விஜயா தேவி, பயல் குப்தா, ஐஸ்வர்யா ஆகியோர், இந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
இவர்கள், சுமார் 165 நாள் பயணம் மேற்கொள்ள உள்ளனர். பயணத்தின் போது, ஆஸ்திரேலியாவின் பிரீமான்டில், நியூசிலாந்தின் லைடெல்டன், பால்க் தீவின் போர்ட் ஸ்டான்லி, தென் ஆப்பிரிக்காவின் கேப் டவுன் ஆகிய துறைமுகங்களில், இந்த கப்பல் நிறுத்தப்படும்.
இதன்பின், பத்திரிக்கையாளர்களிடம் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில், ”முப்படையிலும் சேர பெண்கள் அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர். திறமை மீது அவர்களுக்கு நம்பிக்கை உள்ளது. அவர்களுக்கு தேவையான உதவியை அரசு செய்யும்,” என்றார்.