உலக அமைதியை நிலைகுலைய வைத்துள்ள தாக்குதல்கள்

241

பயங்கரவாத நடவடிக்கைகள் எந்த வடிவத்தில் முன்னெடுக்கப்பட்டாலும் அவற்றுக்கு ஒருபோதும் இடமளிக்கக்கூடாது என்பதிலும் அவற்றை அடியோடு முழுமையாக முறியடித்துவிடவேண்டும்
என்பதிலும் பொதுவான ஒரு கருத்து உலக மட்டத்தில் நிலவுகிறது.

விசேடமாக பயங்கரவாத செயற்பாடு என்பது மனிதனுக்கு அழிவை ஏற்படுத்துவதாகவும் எதிர்காலத்தை இருள்மயமாக்குவதாகவுமே காணப்படுகின்றது.

பல்வேறு காரணங்களையும் நோக்கங்களையும் முன்வைத்து பயங்கரவாத செயற்பாடுகளை பல அமைப்புக்கள் முன்னெடுத்தாலும் அதனால் மக்களுக்கும் உலகிற்கும் அழிவு ஏற்படுகின்றது என்பதே இறுதி நிலையாகும்.

இதனை மனதில் கொண்டு சர்வதேச மட்டத்தில் எவ்வாறான வடிவத்தில் பயங்கரவாத அணுகுமுறைகள் முன்னெடுக்கப்பட்டாலும் அவற்றை அடியோடு ஒழித்துவிடுவதற்கு நடவடிக்கைகள் அவசியமாகும்.

30 வருடகால யுத்த அனுபவத்தை கொண்டுள்ள நாடு என்ற வகையில் பயங்கரவாத செயற்பாடுகளினால் எந்தளவு தூரம் வலியும் வடுக்களும் ஏற்படும் என்பது இலங்கை மக்களுக்கு நன்றாகவே தெரியும்.

அந்த வகையில் தற்போது முழு ஐரோப்பாவையே உலுக்கியுள்ள பெல்ஜியத்தின் பிரஸல்ஸ் விமான நிலையம் மற்றும் ரயில் நிலையங்கள் மீதான குண்டு வெடிப்புச் சம்பவங்கள் உலக அமைதி தொடர்பில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளன.

பெல்ஜியத்தின் பிரஸல்ஸ் நகரில் விமான நிலையம், மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமையகத்திற்கு அருகிலுள்ள ரயில் நிலையம் என்பவற்றின் மீது கடந்த செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களில் 30க்கும் அதிகமானோர் பலியானதுடன் பலர் காயமடைந்துள்ளனர். இந்த தொடர் குண்டு வெடிப்புச் சம்பவங்கள் முழு ஐரோப்பாவையுமே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளன.

பிரஸல்ஸ் விமான நிலையத்தில் குண்டு வெடிப்பு இடம்பெற்று ஒரு மணித்தியாலத்திற்குப் பின்னரேயே அந்த நகரில் உள்ள ரயில் நிலையத்தின் மீது குண்டுத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் இந்த பயங்கரவாத தாக்குதலையடுத்து பெல்ஜியத்திலுள்ள விமான நிலையங்கள் மற்றும் அனைத்துப் புகையிரத நிலையங்களும் மூடப்பட்டுள்ளன. அத்துடன் பெல்ஜியத்தில் தற்போது மிகவும் உயர்மட்டத்திலான பயங்கரவாத அச்சுறுத்தல் எச்சரிக்கையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

விமான நிலைய குண்டுவெடிப்பின் பின்னர் மீட்புப் பணியில் ஈடுபட்ட அவசரசேவைப் பிரிவினர் அங்கு மேலும் சில குண்டுகளை கைப்பற்றியுள்ளனர்.

விமான நிலையத்தின் மீதான தாக்குதலையடுத்து அந்த விமான நிலையத்தை நோக்கி பறந்து கொண்டிருந்த விமானங்களும் திசைதிருப்பப்பட்டன. பெல்ஜியத்தின் தலைநகரில் தாக்குதல் இடம்பெற்றதையடுத்து பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இது இவ்வாறு இருக்க ஐரோப்பிய ஒன்றிய தலைமையகத்தில் நடைபெறவிருந்த அனைத்துக் கூட்டங்களும் இரத்து செய்யப்பட்டுள்ளன. ஐரோப்பிய ஒன்றியம் அமைந்துள்ள பிரஸல்ஸ் நகரிலுள்ள தனது உத்தியோகத்தர்களை வெளியில் நடமாடுவதை தவிர்த்து வீடுகளில் தங்கியிருக்குமாறு ஒன்றியம் அறிவுறுத்தியுள்ளது.

கடந்த வருடம் பிரான்ஸின் பாரிஸ் நகரில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதல் தொடர்பான பிரதான சந்தேகநபர் பிரஸல்ஸ் நகரில் வைத்து கைது செய்யப்பட்டு 4 தினங்களின் பின்னர் இந்த பயங்கரவாத தாக்குதல் இடம்பெற்றுள்ளமை இங்கு அவதானிக்கத்தக்கதாகும்.

பிரஸல்ஸ் விமானநிலையம் என்பது எப்போதும் மிகவும் பரபரப்பாக இயங்கும் பகுதியாகும். ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தலைமையகம் பிரஸல்ஸ் நகரில் அமைந்துள்ளமையினால் அங்கு உயர்மட்ட அதிகாரிகளின் விஜயங்களும் செயற்பாடுகளும் மிகவும் அதிகமாகக் காணப்படும் .

அந்த வகையில் பிரஸல்ஸ் விமான நிலையம் எப்போதுமே அதிகளவு மக்களை சந்திக்கும் ஒரு இடமாகும். கடந்த 2015 ஆம் ஆண்டில் மட்டும் இந்த விமான நிலையத்திற்கு 23 மில்லியன் பயணிகள் வருகை தந்துள்ளனர் என்பது ஒரு விசேட அம்சமாகும்.

அப்படிப் பார்க்கும் போது சனநடமாட்டம் அதிகமாக இருக்கின்ற மிகவும் முக்கியமானதொரு பிரதேசத்தில் இந்த பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இது இவ்வாறிருக்க பெல்ஜியத்தின் பிரஸல்ஸ் நகரில் இடம்பெற்ற இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு ஐ.எஸ். அமைப்பு உரிமை கோரியுள்ளது. கடந்த வருடம் பிரான்ஸின் பாரிஸ் நகரில் இடம்பெற்ற தொடர் பயங்கரவாத தாக்குதல்களுக்கும் இந்த ஐ.எஸ்.அமைப்பு பொறுப்பேற்றிருந்தமை இங்கு குறிப்பிடவேண்டிய விடயமாகும்.

இதேவேளை பல உலகநாடுகளின் தலைவர்களும் பெல்ஜியம் தலைநகர் மீதான பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தை கடுமையாகக் கண்டித்துள்ளனர். அந்தவகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இந்த சம்பவத்தை வன்மையாக கண்டித்துள்ளதுடன் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு முழு உலகமும் ஒன்றிணைந்து செயற்படவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

பயங்கரவாதத்தினால் நீண்டகாலமாக பாதிக்கப்பட்டிருந்த நாடு என்ற வகையில் இவ்வாறான பயங்கரவாத தாக்குதல்களை வன்மையாக கண்டிப்பதாக குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி இந்த துன்பகரமான சந்தர்ப்பத்தில் இலங்கை அரசாங்கமும் மக்களும் பெல்ஜிய அரசாங்கத்தினதும் மக்களினதும் துன்பத்தில் பங்கு கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான கோழைத்தனமான பயங்கரவாத செயற்பாடுகள் முழு உலகத்தினாலும் கண்டிக்கப்பட வேண்டியதாகும். இந்த சம்பவமானது அனைத்து வகையான பயங்கரவாதத்திற்கும் எதிரான எம்முடைய ஒன்றிணைந்த செயற்பாட்டின் தேவையை வலியுறுத்தி நிற்கின்றது என்றும் ஜனாதிபதி தனது அனுதாபச் செய்தியில் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

பயங்கரவாதம் என்பது எந்தவொரு காரணத்திற்காகவும் நியாயப்படுத்தக்கூடிய விடயமல்ல. பயங்கரவாத நடவடிக்கைகள் காரணமாக மனித உயிரிழப்புக்களும் அதனுடன் கூடிய ஏனைய அழிவுகளும் இடம்பெறும்போது இந்த செயற்பாடுகள் தொடர்பில் எந்தவகையிலும், யாராலும் நியாயம் கற்பிக்க முடியாது.

அதனை பரிசீலிக்கக்கூட எவரும் தயாராக இல்லை என்பதனை புரிந்துகொள்ளவேண்டும். பயங்கரவாத தாக்குதலினால் எதனையும் சாதிக்க முடியாது என்பது இங்கு பிரதான விடயமாகும். காரணம் பயங்கரவாதம் என்பது அழிவையே நோக்கமாகக் கொண்டு செயற்படுகின்றது.

எனவே உலக நாடுகள் தற்போது தோன்றியிருக்கின்ற இந்த அசாதாரண சூழல் தொடர்பிலும் பயங்கரவாத அச்சுறுத்தல் குறித்தும் ஆராயவேண்டியது அவசியமாகும். அத்துடன் இந்த பயங்கரவாதத்தை அடியோடு முறியடிப்பது தொடர்பாக உலக நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து செயற்படுவதன் அவசியமும் இங்கு உணரப்பட்டுள்ளது.

கடந்த 2001 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 11ம் திகதி அமெரிக்காவின் உலக வர்த்தக மையம் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டபோது அனைத்து உலக நாடுகளும் பயங்கரவாதத்திற்கு எதிராக போர்க்கொடி தூக்கின. பயங்கரவாத செயற்பாடுகளை முழுமையாக முறியடிக்கவேண்டும் என்பது தொடர்பில் அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து செயற்பட ஆரம்பித்தன.

ஆனாலும் கடந்த 15 வருடகால வரலாற்றைப் பார்க்கும் போது உலகத்தில் பயங்கரவாத செயற்பாடுகள் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன. உலக நாடுகளில் எங்கோ ஒரு மூலையில் அவ்வப்போது பயங்கரவாத தாக்குதல்கள் இடம்பெறுவதும் உயிரிழப்புக்களும் சேதங்களும் பதிவாகுவதும் வழமையாகியுள்ளன.

அந்தவகையில் அண்மைக்காலமாக ஐரோப்பிய நாடுகளை இந்த தீவிரவாத தாக்குதல்கள் இலக்குவைத்துள்ளதை அவதானிக்க முடிகின்றது. அதுமட்டுமன்றி இரண்டு தரப்புக்களுக்கிடையிலான தாக்குதல் நடவடிக்கைகளில் அப்பாவிப் பொதுமக்கள் சிக்கி சின்னாபின்னமாவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

இந்நிலையில் உலகளாவியரீதியில் உருவெடுத்துள்ள இந்த பயங்கரவாத நிலைமையை அடியோடு ஒழிப்பதற்கு அனைத்துநாடுகளும் ஒற்றுமையுடன் இணைந்து செயற்பட முன்வரவேண்டும். ஐக்கியநாடுகள் சபை இந்த விடயத்தில் மிகப் பிரதானமாக செயற்படுவதுடன் தனது முறையான வகிபாகத்தை வகிப்பதற்கு முன்வரவேண்டும்.

உலக நாடுகளின் அரசாங்கங்களும் இந்த விடயத்தில் தமது ஒத்துழைப்பை வழங்கவேண்டியது மிகவும் அவசியமாகும். அனைத்து வகையான பயங்கரவாதத்தையும் முற்றாக ஒழிப்பதற்கு நாடுகள் இணைந்து செயற்படுவதன் அவசியத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் வலியுறுத்தியிருக்கின்றார்.

எனவே உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் இவ்வாறான பயங்கரவாத செயற்பாடுகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும் உலகில் நிலையான அமைதியை ஏற்படுத்துவதற்கும் அனைத்து நாடுகளும் இணைந்து செயற்படுவது அவசியமாகும்.

SHARE