(பாகம் – 01)
வீதிக்கு இரு மருங்கும் சீருடையில் நாம் அணி வகுத்து நின்றோம். எமக்குப்பின்னால் எமது மக்கள் நின்றார்கள் பலத்த எதிர்பார்ப்போடு. எல்லோரையும் இடறியபடி குறுக்கும் மறுக்கும் பாய்ந்து தம் நிழற்படக் கருவிகளாலும், ஒளிப்படக் கருவிகளாலும் எம்மைச் சுட்டுத் தள்ளிக்கொண்டும், கேள்விகளால் துளைத்துக்கொண்டுமிருந்தனர் உலக, இலங்கை ஊடகவியலாளர்கள்.
யாழ்.நெடுஞ்சாலையைக் கன்காணித்தவாறு வீதியின் இடதுபுறமாக நாம் அமைத்திருந்த காப்பரணில், தீச்சுவாலை எதிர் நடவடிக்கையின்போது கப்டன் தண்ணிலா நின்று சண்டையிட்ட அதே காப்பரணில் இப்போது அனைத்துலகச் செஞ்சிலுவைச் சங்கத்தினர் நிற்கின்றனர். காப்பரண்களுக்குப் பின்னாலான எமது நகர்வகழி நெடுஞ்சாலையைக் குறுக்கறுத்தவாறும் போயிருந்தது. ஆனால், அது இரண்டு நாட்களின் முன் புல்டோசர் கொண்டு குறிப்பிட்ட சில மணிநேரத்தில் தூர்க்கப்பட்டு, வீதி சமப்படுத்தப்பட்டிருந்தது. சண்டையின்போது படையினரின் பலத்த எறிகணைவீச்சின் மத்தியில், கிபிர் விமானக் குண்டுவீச்சின் மத்தியில் இதைக் கைகளால் வெட்ட ஒரு வாரத்துக்கும் மேலாக நாம் உழைத்தோம்.
வீதியிலும், வீதியின் அயற்புறங்களிலும் ஒரு வாரமாகக் கண்ணிவெடி அகற்றும் பாரிய பணியைச் செய்த கண்ணிவெடிப் பிரிவினரும் எம்மோடு வரிசையாக நின்றனர். அவரவர் வைத்த கண்ணிவெடிகளை அவரவரே அகற்றுவதாகத்தான் ஏற்பாடு. எமது தரப்பில் பெண் போராளிகள் கண்ணிவெடி அகற்றிக்கொண்டிருந்ததைப் படையினர் ஒருவாரமும் ஆச்சரியமாகப் பார்த்தவாறிருந்தனர். கடைசி நாளன்று எம்மவர்கள், படையினரின் காவலரண்களுக்கு மிக அருகில் எம்மால் புதைக்கப்பட்டிருந்த ஊர்திக்குரிய கண்ணிவெடியொன்றை அகற்றியபோது அதிர்ச்சியடைந்தது படையினர் மட்டுமல்ல, வேலைகளைப் பார்வையிட்டுக் கொண்டிருந்த அனைத்துலக கன்காணிப்பாளர்களும் தான். அதை அங்கே வைப்பதற்குப் பாதுகாப்பு வழங்கியவர்களும், வைத்தவர்களும் நின்றுகொண்டிருந்தோம். புலிகளின் கரங்கள் எதுவரை நீளும் என்பதை யாராலும் ஒருபோதும் அறுதியிட்டுச் சொல்லமுடியாது.
நேரம் நெருங்கிக்கொண்டிருந்தது. ஆறு வருடங்களாக எம்மைப் பிரிந்திருந்த யாழ்ப்பாண மக்கள் எம்மைக் காண்பதற்காகப் படையினரின் எல்லையருகே முண்டியடித்துக்கொண்டிருந்தனர். யாழ்ப்பாணத்துள்ளே அரசியற் பணி செய்வதற்காகப் போகவுள்ள அரசியற்றுறைப்போராளிகள், எங்களுடைய முன்னரங்க நிலையருகே நின்றனர். கூடவே மக்கள். எங்கள் மக்கள். எல்லா இடங்களிலும் எமைவிட்டுப் பிரியாமல் தோள் தந்த மக்கள் தம் உறவுகளை, வீடு வாசலை, நிலத்தைக் காணும் ஆவலுடன், பரபரப்புடன்…
இவை யாவற்றுக்கும் காரணமானவர்கள் சீருடையோடு வீதியின் இருமருங்கும் அணிவகுத்தபடி மிக அமைதியாக…காரணகர்த்தாக்களில் பலர் துயில் நிலங்களில் தலை சாய்ந்தபடி மிக மிக அமைதியாக… அனைத்துக்கும் பின்னால் இருந்த அவர், தமிழீழத்தை மீட்பதற்கான தனது இடையறாத பணிகளுள் எப்போதும்போல் இப்போதும் மூழ்கியபடி அமைதியாக…
நேரம் நெருங்கிக்கொண்டிருந்தது. விளக்குவைத்தகுளத்திலும், முகமாலையிலும் அன்று ஒரே நேரத்தில் யாழ் நெடுஞ்சாலை திறந்துவைக்கப்படவிருந்தது. பாதை திறப்பேன் எனச் சூளுரைத்துப் படைகளை நகர்த்தி, படுதோல்வியைச் சந்தித்த ஸ்ரீலங்காவின் பாதுகாப்பு இணையமைச்சர் போன இடம் தெரியவில்லை. சொல்லைவிடச் செயலுக்கே முன்னுரிமை தருகின்ற எங்கள் தலைவரின் நுட்பமான காய் நகர்த்தலால், எந்தப் பலனையும் எதிர்பாராமல் தாய் நிலத்துக்கான தம் கடமையைச் செய்து விதையாகிப் போனவர்கள் வெளிப்படுத்திய பலத்தின் விளைவால், பாதை இன்று திறக்கப்படப்போகின்றது.
2002.04.08 நேரம் மதியமாகிக்கொண்டிருந்தது. மழை பெய்யத் தொடங்கிவிட்டிருந்தது. கன்காணிப்பாளர் ஒருவர் நாடாவை வெட்ட, அனைத்துலகச்செஞ்சிலுவைச் சங்க ஊர்தியொன்று முதலில் இங்கிருந்து அங்கே செல்ல, அதைத்தொடர்ந்து போராளிகள் செல்ல, அவர்களோடு மக்களும் செல்ல, முன்சென்ற போராளிகளைப் படையினரின் எல்லையைக் கடந்து யாழ்ப்பாணத்துள்ளிருந்து ஓடிவந்த மக்கள் கட்டித்தழுவி, முத்தமிட்டு, தம் தோள்களிலே காவிச் சுமந்து ஆடிப்பாடியவாறு யாழ்ப்பாணத்தினுள்ளே, படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதியினுள்ளே போனார்கள். வீதி நிறைய மக்கள், உள்ளே போவோரும் வருவோருமாய். எங்களை மறுபடி ஊடகவியலாளர்கள் சூழ்ந்துகொண்டார்கள்.
‘நீங்கள் எந்தப் பிரிவு?’ ‘மாலதி படையணி”
‘மாலதி படையணி…! ஆ, நல்லது. இந்தப் பாதை திறக்கிறதைப்பற்றி நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?’ எதைச் சொல்வது நண்பர்களே?
பாதை திறக்கப்போகின்றோம் என்று கதைவிட்டவாறு வவுனியாவிலிருந்து மாங்குளம் வரையும், கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணம் வரையும் பாதையை மூடி வைத்திருந்த படையினரை முறியடித்து, பாதையை நாம் இன்று திறப்பதைப்பற்றிச் சொல்வதா?
சமாதானத்துக்கான போர் என்று பெயர் சூட்டி, தமிழர்களை அழித்தொழிக்கும் போரைச் செய்தவர்களின் முகமூடியைக் கிழித்து, உண்மையான சமாதானத்துக்கான கதவுகளை இப்போது நாமே திறந்துவிட்டிருப்பதைச் சொல்வதா? எதைச் சொல்வது?
இந்தப் பாதை திறப்பதற்காக எமது படையணி கொடுத்த விலை…ஒட்டுமொத்தமாக எமது விடுதலை அமைப்புக்கொடுத்த விலை…
அங்குலம் அங்குலமாக இந்த வீதியெங்கும் இரத்தம் சிந்தி நாம் நடந்துவந்த பாதை… மிகப்பெரிது.
அன்று புலோப்பளையிலிருந்த 1.3 தளம் களைகட்டியது. மாலதி படையணிப்போராளிகள் 1996ஆம் ஆண்டின் முதலாவது நாளை வரவேற்பதற்கான ஏற்பாடுகளில் தடல்புடலாக ஈடுபட்டிருந்தனர். மேடையைத் தயார்படுத்தும் வேலையில் சிலர் ஈடுபட்டிருக்க, கலை நிகழ்வுகளைக் கடைசி முறையாகச் சரிபார்த்தபடி பலர், உணவு ஒழுங்குகளோடு சிலர் என்று ஒருவருமே ஓய்வாக இல்லை.
ஆயிரத்துநூறுக்கும் மேலான போராளிகள் கேணல் விதுஷா அவர்களின் நிர்வாகத்தின் கீழ் மாலதி படையணியாக இயங்கினர். லேப்.கேணல் சூரியகலா, மேஜர்.பமிலா, அசோகா ஆகியோரினது மூன்று கொம்பனிகள் மேலதிகமாக இரண்டு பிளாட்டூன்கள் என்பவற்றுடன், அடிப்படைப்பயிற்சி முடித்த புதியவர்களுமாக 1.3இல் கூடியிருந்தனர்.
எங்களுக்கான பின்னணி நிர்வாகக் கட்டமைப்புகள் யாவும் ஏற்கனவே தென்மராட்சியிலிருந்தன. 1.3 தளத்தை விட சோதியா, விடியல் என இருபெரும் தளங்கள், ஆயுத எரிபொருட்களஞ்சிய விநியோகத் தளங்கள் அனைத்தும் அங்கேதான். துள, வெளி நிர்வாகங்களைத் துணைத்தளபதி அஜந்தியும், பயிற்சித் திட்டங்களை ஆஷாவும், நிதி வழங்கற் செயற்பாடுகளை லெப்.கேணல் மதியும், தொலைத்தொடர்புக் கட்டமைப்பை மேஜர் லக்சனாவும், கள மருத்துவ நிர்வாகத்தை வானதியும், தையல் வேலைகளை டொறினும் கவனித்துக்கொண்டிருந்தார்கள்.
இவை அனைத்தையும் மேற்பார்வை செய்வதோடு, களம் சார்ந்த அனைத்து நடவடிக்கைகளையும் நேரடியாக நெறிப்படுத்துவது சிறப்புத் தளபதி கேணல் விதுஷாவின் பணியாக இருந்தது. எமது வேவு அணியினர் லெப்.கேணல் மைதிலியினதும், கண்ணிவெடி அணியினர் அஸ்வினியினதும் வழிநடத்தலில் இயங்கிக்கொண்டிருந்தனர்.
இவர்களைவிட, அருந்ததி பாசறையில் கனரக ஆயுதப் பயிற்சிகளை வழங்கிக்கொண்டிருந்த, பெற்றுக்கொண்டிருந்த எமது பயிற்சியாசிரியர்களும், பயிற்சியாளர்களும் வருகை தந்து எம்முடன் கை கோர்த்துக்கொள்ள, 1.3 தளம் திருவிழாக்கோலம் பூண்டது.
மாலையில் ஆரம்பித்த கலை நிகழ்வுகள் மழை பெய்தபோது சிறிது இடைவெளிவிட்டு, அதிகாலைவரை நீடித்தன. படையணியில் எல்லோரையும் கவர்ந்த LMG பயிற்சியாசிரியர் மேஜர் மாதுரியின் நடனம் அன்றைய நிகழ்வுக்குச் சிகரம் அமைத்தது.
தொடரும்…