சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கு ஆதரவாக தங்களை உளவு பார்த்தவர்களை ஐ.எஸ் அமைப்பினர் கொன்று சிலுவையில் அறைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஐ.எஸ் அமைப்பினர் சமீப காலமாக மிகப்பெரிய தோல்வியை சந்தித்து வருகின்றனர்.
இதையடுத்து தங்கள் அமைப்பு தொடர்பாக உளவு பார்ப்பவர்களை கொடூரமாக கொன்று வருகின்றனர். இந்நிலையில் சிரிய அதிபர் பஷார் அல் அசாத்துக்கு ஆதரவாக தங்களது அமைப்பை உளவு பார்த்த 4 பேரை ஐ.எஸ் அமைப்பினர் சுட்டுக்கொன்றனர். பின்னர் அவரது உடல்களை சிலுவையில் அறைந்து பொதுமக்கள் பார்வைக்காக தலைநகர் ரக்காவில் தொங்கவிட்டுள்ளனர். கடந்த ஒருவாரத்தில் மட்டும் 12க்கும் மேற்பட்ட சிரிய குடிமக்களை ஐ.எஸ் தீவிரவாதிகள் கொன்றுள்ளதாக மனித உரிமைகள் பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தனது ஆட்சிக்காலம் முடிவதற்குள் ஐ.எஸ். அமைப்பை அழித்தே தீருவேன் என அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் மூத்த ராணுவ தலைவர்களுடன் அலோசனை நடத்திய ஒபாமா, ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் உள்ள பகுதிகள், அவர்களது பொருளாதார பலம் மற்றும் உள்கட்டமைப்பு ஆகியவையை கைப்பற்றி ஐ.எஸ். தீவிரவாதிகளை வீழ்த்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அப்போது ரக்கா சம்பவம் தொடர்பாக குறிப்பிட்ட ஒபாமா, இது போன்ற செயல்களை நாம் பொறுத்துக்கொள்ள கூடாது. எனது ஆட்சி முடிவதற்குள் ஐ.எஸ். தீவிரவாதிகளை அழிக்க வேண்டும் என்பதை முதல் கடமையாக கொண்டுள்ளேன் என்றும் தெரிவித்தார். |