உலகின் முன்னணி நாடுகள் மற்றும் இந்திய எண்ணெய் கம்பெனிகளின் தலைவர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நேற்று நடந்தது. 3 மணி நேரம் நடந்த இந்த கூட்டத்தில் இந்தியாவில் எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியை அதிகரிப்பது, எண்ணெய் வளத்தை கண்டறிவதற்கான ஆய்வுகளை மேற்கொள்வது, எண்ணெய் உற்பத்தியில் முதலீடு, பிரித்தெடுத்தல், குறித்த இடங்களுக்கு அனுப்பி வைப்பது, வினியோகம் செய்வது தொடர்பாக விரிவாக விவாதிக்கப்பட்டது.
அப்போது பேசிய எண்ணெய் நிறுவனங்களின் தலைவர்கள், தனியார் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு மும்பையில் உள்ள எண்ணெய் வயல்களில் அனுமதி அளிப்பதுபோல் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்தின் மற்ற எண்ணெய் வயல்களிலும் அனுமதி வழங்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.இயற்கை எரிவாயு மற்றும் மின்சாரத்தை சரக்கு சேவை வரி வளையத்துக்குள் கொண்டு வந்தால் பயன் அளிப்பதாக இருக்கும் என்றும் அதிகாரிகள் கருத்து தெரிவித்தனர். மேலும், வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் எண்ணெய் உற்பத்தியில் ஈடுபடும்போது ஒரு பேரலுக்கு இவ்வளவு அமெரிக்க டாலர் கள் தொகை என்ற நிபந்தனையுடன் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் அனுமதிக்கலாம் என்ற கருத்தும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.