உள்ளுராட்சி மன்றங்களுக்கான வேட்புமனுக்களை தேர்தல்கள் ஆணைக்குழு கோரியுள்ள சூழலில், வடக்கு கிழக்கில் மாத்திரமல்ல இலங்கை முழுவதும் அரசியற் கட்சிகள் பல கட்டப் பேச்சுவார்த்தைகளை நடாத்தி வருகின்றனர். தெற்கில் மொட்டுக் கட்சியும் யானையும் கூட்டணி அமைத்து உள்ளுராட்சி மன்றங்களுக்கானத் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகியுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் ஐக்கிய தேசியக் கட்சி இன்று நாட்டில் பிளவுபட்டு பலமிழந்து போயுள்ள சூழலில், பாராளுமன்றில் மொட்டுக் கட்சியின் பெரும்பான்மைப் பலத்தை நம்பியே தான், ஜனாதிபதியாக பதவியில் இருக்கின்ற நிலையில், பல விமர்சனங்களுடன் இதுவரை காலமும் இருந்து வந்த மஹிந்த மற்றும் ரணில் தரப்பு ஒன்றிணைந்துள்ளது.
சஜித் தலைமையிலான அணியினர் தனித்து இத் தேர்தலை எதிர்கொள்வதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். வடக்கிலும் இவர்களின் அரசியல் வேலைத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளதைக் காண முடிகிறது.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, டலஸ் அழகப்பெரும, விமல் வீரவன்ச உட்பட்ட 10 அரசியற் கட்சிகள் ஒன்றாக இணைந்து கூட்டணி அமைத்து இத்தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகியுள்ள சூழலில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான நீதிமன்றத் தீர்ப்பும் நேற்றைய தினம் வெளியாகி நாடு முழுவதும் பரபரப்பை அரசியல் மட்டத்தில் ஏற்படுத்தியுள்ளது. மைத்திரிபால சிறிசேன அவர்கள் நஷ்ட ஈடாக 100 மில்லியன் ரூபாய் செலுத்தவேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. இவ்விடயம் இக்கூட்டணிக்கு மக்கள் மத்தியில் சரிவினை ஏற்படுத்தவும் கூடும்.
மறுபக்கத்தில் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் மற்றும் ஹிஸ்புல்லா போன்றோர் மீண்டும் மறுபடியும் கூட்டுச்சேர்ந்துள்ளனர். இதற்கான பேச்சுக்கள் நடைபெற்று முடிந்துள்ளதாக அறிகிறோம். கூட்டணிகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது மீண்டும் கட்சியில் ஹிஸ்புல்லா இணைந்துள்ளார். முஸ்லீம் மக்களுக்காக இந்த இணைவு என்கிறார். கிழக்கில் முஸ்லீம் மக்கள் பெரும்பான்மையாக வாழும் இடங்களில் உள்ள சபைகளை ஒட்டுமொத்தமாக கைப்பற்றுவதே இவர்களின் இணைவின் நோக்கம் எனவும் தெரிவித்துள்ளார். இவர்களுடன் முஸ்லீம் காங்கிரசில் இருந்து வெளியேறிய பலரும் இணைய வாய்ப்புக்கள் இருப்பதாகவும் தெரிகிறது. அரசியல் மேடைகளில் ஹிஸ்புல்லா மற்றும் ரவூப் ஹக்கீம் இருவரும் மாறி மாறி கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வந்தாலும் இன்றைய இக்கூட்டு கிழக்கில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும்.
வடக்கு கிழக்கில் உள்ள தமிழ்க் கட்சிகள் பல கட்டப்பேச்சுக்களை நடாத்தி வருகின்றனர். கருத்து மோதல்கள் தொடர்கின்றன. கூட்டணிகள் அமைப்பது பற்றி தீவிரமாகக் கலந்தாலோசித்து வருகின்றனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலுள்ள தமிழரசுக் கட்சி இத் தேர்தலை தனித்து எதிர்கொள்ளவிருப்பதாக அறிய முடிகிறது. ஏற்கனவே தமிழரசுக் கட்சியுடனான மோதல் ஏனைய பங்காளிக் கட்சிகளான ரெலோ மற்றும் புளொட் கட்சிகளுக்குள் தொடர்கிறது. இவர்கள் இத்தேர்தலில் ஏனைய தமிழ்க் கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது பற்றி தீவிரமாகக் கலந்தாலோசித்து வருகின்றனர். இன்றும் பேச்சுக்கள் இருப்பதாக அறிகிறோம்.
தமிழ் மக்கள் வடக்கு கிழக்கில் தமிழ்க் கட்சிகள் ஒன்றாகப் பயணிக்கவேண்டும் அதுவே எமது பிரச்சினைகளைத் தீர்க்க ஒன்றாகக் குரல்கொடுக்க தேவையானது. எமது பலமே ஒற்றுமை என்று வலியுறுத்துகிற சூழலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தமிழரசுக் கட்சியின் செயற்பாடு, எதிர்காலத்தில் மாற்று ஒரு கூட்டமைப்பை புதிதாக உருவாக்க வாய்ப்பாக அமையலாம். மக்களும் தமிழ்க் கட்சிகளின் தனித்தனியான தேர்தல் போட்டிகளை விரும்பவில்லை. வீட்டுச் சின்னம் தான் தமிழ் மக்களின் சின்னம் என்கிற நிலைப்பாடு தமிழ் மக்களின் மத்தியில் இருக்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.