உள்ளுராட்சி தேர்தலை தடுப்பதற்கு சில முயற்சிகள் நடக்கக்கூடும். அவ்வாறு முயற்சிகள் எடுக்கப்படுமிடத்து உடனடியாக நீதிமன்றத்தினை நாடி சட்டத்தின் அடிப்படையில் தேர்தல் நடத்துவதற்கான எங்களுடைய முழுமையான அழுத்தத்தினை கொடுப்போம் என இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். சாவகச்சேரியில் ஊடகங்களுக்கு நேற்று (04) கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்துள்ளார்.
உள்ளுராட்சி தேர்தல் வேட்புமனு தாக்கலுக்கான திகதி தேர்தல் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்டுள்ளது. எமது கட்சியின் சார்பிலே தேர்தல்கள் பிற்போடக்கூடாது, அது ஜனநாயகத்தினை மீறுகின்ற செயல் என தொடர்ச்சியாக கூறி வந்திருக்கிறோம். அரசாங்கம் இந்த தேர்தலினை பிற்போடுவதற்கு எடுத்த முயற்சிகள் எங்களுக்கு தெரியும். எதுவும் கைகூடாத நிலைமையில் தேர்தல் ஆணைக்குழு சட்ட ரீதியாக அறிவித்துள்ளது. இந்த வேளையில் இதனை தடுப்பதற்கு சில முயற்சிகள் நடக்கக்கூடும். அவ்வாறு முயற்சிகள் எடுக்கப்படுமிடத்து உடனடியாக நாங்கள் நீதிமன்றத்தினை நாடி சட்டத்தின் அடிப்படையில் தேர்தல் நடத்துவதற்கான எங்களுடைய முழுமையான அழுத்தத்தினை கொடுப்போம்.
சில வருடங்களாக நடத்தப்படாமல் இருக்கின்ற மாகாண சபை தேர்தலும் உடனடியாக நடத்தப்பட வேண்டும். மாகாண சபைகள் இயங்காமல் இருப்பது என்பது மிகவும் பாரிய பின்னடைவு. இலங்கை தமிழரசுக்கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பினை பொறுத்தவரையில், எங்களின் மூலக்கிளையில், இருந்து இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கான விண்ணப்பதாரிகளை முன்வருமாறு கோரியிருக்கிறோம். இந்த தடவை சரியானவர்களையும், இளைஞர்களையும், யுவதிகளையும் இந்த தேர்தலில் முன் நிறுத்துவோம். மக்களின் ஆதரவினை நாங்கள் எதிர்பார்க்கின்றோம் எனத் தெரிவித்துள்ளார். – ada derana tamil news