உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் ஜே.வி.பி கட்சி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் என்ன காரணத்திற்காக ஒத்தி வைக்கப்பட்டது என்பது குறித்து அறிந்து கொள்ளும் நோக்கில் ஜே.வி.பி கட்சி ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்திக்க உள்ளது.
இதன்படி, எதிர்வரும் வாரங்களில் ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்திப்பதற்கான திகதி ஒன்றை ஒதுக்கிக் கொள்ள அண்மையில் கூடிய ஜே.வி.பி.யின் அரசியல் சபை தீர்மானித்துள்ளது.
இந்த சந்திப்பிற்கு முன்னதாக சிவில் அமைப்புக்கள் மற்றும் அரசியல் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தி அந்த தரப்பு கருத்துக்களை ஜே.வி.பி உள்வாங்கிக் கொள்ள உள்ளதாக கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் ஒருவர் கொழும்பு ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தேர்தலை ஒத்தி வைக்க அரசாங்கத்திற்கு அதிகாரமில்லை எனவும், அவ்வாறு தேர்தலை ஒத்தி வைத்தால் மக்களுடன் இணைந்து வீதியில் இறங்கி போராட்டம் நடத்த நேரிடும் எனவும் ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க அண்மையில் நடத்திய ஊடக சந்திப்பு ஒன்றில் அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.