
இலங்கையின் மிக முக்கியமான ஊடகவியலாளர்களில் ஒருவரான சிவராம் படுகொலை செய்யப்பட்டு ஒன்பது ஆண்டுகள் கடந்துவிட்டன. இன்று அவரது நினைவு தினமாகும். பிரபல ஊடகவியலாளர் சிவராம் ஏப்ரல் 28, 2005ஆம் ஆண்டில் பாதுகாப்பு மிகுந்த இலங்கைத் தலைநகர் கொழும்பில் பாராளுமன்றத்திற்கு அருகில் வைத்து கடத்தப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டார்.
1959, ஆகஸ்ட் 11, ஈழத்தின் கிழக்கே மட்டக்களப்பில் பிறந்த சிவராம் தராகி என்ற பெயரில் த ஐலன்ட் ஆங்கிலப் பத்திரிகையில் 1989இல் தன் முதல் கட்டுரையை எழுதினார். அரசியல், போரியல், பாதுகாப்பு சார்ந்த அவரது கட்டுரைகள் உள் நாட்டில் மாத்திரமின்றி உலகளவிலும் பரவாக வாசிக்கப்பட்டன.
பத்தி எழுத்தாளராக அரசியல் ஆய்வாளராக படைத்துறை ஆய்வாளராக பல்வேறு பரிமாணங்களை கொண்ட சிவராம் ஆரம்பத்தில் 1980களில் விடுதலைப் போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்டார்.
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தில் (புளொட்) முழுநேர செயற்பாட்டாளராக மாறிய சிவராம் 1990களின் நடுப்பகுதியில் அதன் அரசியல் கட்சியான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகமாகக் கடமையாற்றியவர்.
1990களின் இறுதிப்பகுதியில் இருந்து விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளில் நடைமுறைகளில் ஈர்க்கப்பட்டவராகி, விடுதலைப் புலிகளின் படைத்துறை வெற்றிகள் ஈழப் போராட்டத்திற்கு வலுவை வழங்கும் என சிவராம் தனது எழுத்துக்களில் எழுதினார்.
தமிழ் தேசியம் சார்ந்து ஆங்கிலப் பத்திரிகைகளில் எழுதிவந்த சிவராம் பல்வேறு நெருக்கடிகளையும் எதிர்ப்புக்களையும் கடந்தே எழுதிவந்த அவர் அரசாங்கத்தினாலும், அரசாங்க சார்புக் குழுக்களாலும் புலிகளின் ஆதரவாளராக, அனுதாபியாக, செயற்பாட்டாளராக பார்க்கப்பட்டு கடுமையான நெருக்குதல்களை சந்தித்து, இறுதியில் படைப் புலனாய்வாளர்கள், மற்றும் அரசசார்பு கூட்டு செயற்பாட்டாளர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். சிவராமுக்கு விடுதலைப் புலிகள் மாமனிதர் என்ற தமது விருதை வழங்கினர்.
இலங்கையில் நிலவும் கொடூரமான ஊடக – கருத்துச் சுதந்திர மறுப்பு சூழலை காட்டும் சிவராமின் படுகொலை நடந்து பதினொரு வருடங்கள் கடந்தபோதும் இதுவரையில் நிமலராஜன் முதல் சிவராம் உட்பட அவரின் பின்பும் சுட்டுக் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களின் கொலைகளுக்கு பொறுப்பான குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை ஊடகவியலாளர் சிவராமின்11ஆவது ஞாபகார்த்த நினைவு நிகழ்வு நாளை சனிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு அக்கரைப்பற்று விபுலானந்தர் சிறுவர் இல்ல மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
அம்பாறை மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியம் ஆகியன இணைந்து ஏற்பாடுசெய்துள்ள இந்த நிகழ்வில் சிவராமின் பார்வையில், எமது ஊடகமும், அரசியலும் நிரப்பப்பட வேண்டிய இடைவெளி என்ற தலைப்பில் மட்டக்களப்பு ஆசிரிய கலாசாலை விரிவுரையாளர் கல்வியியலாளர், கலாநிதி எம்.பி.ரவிச்சந்திரா உரை நிகழ்த்துகின்றார்.