ஊழலும் மோசடிகளையும் மறைப்பதற்காக புலம்பெயர் புலிகளை திருப்திப்படுத்த முற்படும் விக்னேஸ்வரன்

384

 

vicki 2மக்களால் தெரிவு செய்யப்பட்ட வடமாகாணசபை உருவாக்கப்பட்டு இரண்டு வருடங்கள் கழிந்து விட்டன. வடமாகாணசபை தேர்தல் நடந்த மறுநாள் தமிழர் அரசு மலர்ந்தது என உள்ளுர் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.

முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் முதலமைச்சராக நியமிக்கப்பட்டதால் வடமாகாணசபை நிர்வாகம் ஏனைய மாகாணசபைகளை விட முன்மாதிரியாகவும் சிறப்பாகவும் நிர்வாக வினைத்திறனுடனும் இயங்கும் என்றும் மக்கள் எதிர்பார்த்தனர்.

IMG_5686-1

ஆனால் இரண்டு வருடங்கள் கடந்த நிலையில் வடமாகாணசபை சாதித்தது என்ன என்ற கேள்வி எழும்போது நூற்றுக்கு மேற்பட்ட தீர்மானங்களை நிறைவேற்றியதை தவிர எதனையும் சாதிக்கவில்லை என்பது தெளிவாகிறது.

உறுப்பினர்களால் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் மாகாணசபையின் அதிகாரத்திற்கு உட்பட தீர்மானங்களும் பல உள்ளன. அவற்றையாவது ஏன் நடைமுறைப்படுத்தவில்லை என்ற கேள்விக்கு மாகாணசபை நிர்வாகமும் முதலமைச்சரும் மக்களுக்கு பதில் சொல்லவேண்டியது அவசியமாகும்.

வடமாகாணசபையின் முதலமைச்சராக பதவி ஏற்ற சில மாதங்களின் பின் மாகாணசபை உறுப்பினர்கள் மத்தியில் பேசும் போது தேசியப்பிரச்சினைகளைப் பற்றியும் இனப்பிரச்சினை தீர்வு பற்றியும் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட தமிழ் உறுப்பினர்கள் பார்த்துக்கொள்வார்கள். வடமாகாணசபை உறுப்பினர்கள் மாகாணத்திற்கு உட்பட பிரச்சினைகளை பற்றியே கவனம் செலுத்த வேண்டும் என முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்திருந்தார்.

ஆனால் கடந்த ஜனவரி மாதம் ஜனாதிபதி தேர்தல் முடிந்து இரு தினங்களில் வடமாகாணசபையில் இலங்கையில் தமிழர்கள் மீது நடத்தப்பட்டது இனப்படுகொலை என்ற தீர்மானத்தை வடமாகாணசபை முதலமைச்சர் விக்னேஸ்வரன் கொண்டு வந்து நிறைவேற்றினார்.

அதனை தொடர்ந்து போர்க்குற்றங்கள் பற்றி விசாரிப்பதற்கு சர்வதேச நீதிகளை கொண்ட நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும் என்றும் மற்றொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தேசியப்பிரச்சினைகளையும் இனப்பிரச்சினைகளையும் மாகாணசபை கையாளத்தேவையில்லை என முன்னர் கூறிய முதலமைச்சர் விக்னேஸ்வரன் பின்னர் இனப்படுகொலை என்ற தீரமானத்தையும்

போர்க்குற்றத்தை விசாரிப்பதற்கு சர்வதேச விசாரணை தேவை என்ற தீர்மானத்தையும் நிறைவேற்றியதற்கு முக்கிய காரணங்கள் உண்டு.

வடமாகாணசபையின் கீழ் வரும் பல திணைக்களங்கள் மற்றும் சபைகளில் நிர்வாக சீர்கேடுகள் மலிந்து ஊழலும் மோசடிகளும் தலைவிரித்தாடும் நிலையில் அதனால் முதலமைச்சர் மீது மக்களுக்கு ஏற்பட்டு வந்த அவநம்பிக்கையை மறைக்கும் வகையிலும் புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள விடுதலைப்புலி ஆதரவாளர்களை திருப்திபடுத்தும் நோக்கத்துடனுமே இத்தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக நடுநிலையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

வடமாகாணசபையில் முதலமைச்சரின் நேரடி நிர்வாகத்தில் உள்ளுராட்சி மன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த உள்ளுராட்சி மன்றங்கள் ஊழலும் மோசடிகளும் நிறைந்ததாகவே காணப்படுகின்றன.

ஒதுக்கப்படும் நிதிகள் பொதுவேலைகளுக்கு உரியமுறையில் பயன்படுத்தப்படாமல் மோசடி செய்யப்படுவதாக முதலமைச்சரிடம் சுட்டிக்காட்டப்பட்ட போதிலும் அவை கவனத்தில் எடுக்கப்படவில்லை.

கடந்த காலங்களில் ஆளுநர்களின் கீழ் சில நிர்வாக சேவை அதிகாரிகள் சர்வாதிகாரப் போக்கில் மக்கள் நலத்திட்டங்களை கொள்ளை அடிப்பதில் ஈடுபட்டதை நிலமையே மக்களால் தெரிவு செய்யப்பட்ட வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனின் காலத்திலும் தொடர்கின்றன.

வடமாகாணசபை கவனத்தில் எடுத்து செயல்படுத்தியிருக்க வேண்டிய முக்கிய பிரச்சினைகளில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையிலான மாகாணசபை நிர்வாகம் கவனம் செலுத்தாது அசமந்தப்போக்கில் செயல்பட்டுள்ளனர் என்பது வெளிப்படையான உண்மை.

முக்கியமாக சில விடங்களை சுட்டிக்காட்டலாம்.
சுன்னாகம் நிலத்தடி நீரில் கழிவு ஒயில் கலந்து குடிநீர் மாசடைந்த சம்பவத்தில் வடமாகாணசபையும் அதன் முதலமைச்சரும் அசமந்த போக்கில் செயல்பட்டதுடன் மக்களை தவறாக வழிநடத்தும் வகையில் குடிநீர் மாசடையவில்லை என அறிக்கையை ஒன்றையும் வெளியிட்டனர்.

சுன்னாகம் நிலத்தடி நீரில் கழிவு ஒயில் கலந்து குடிநீர் மாசடைந்திருக்கிறது என அதனை ஆய்வு செய்த பலர் தெரிவித்த நிலையில் அதில் கழிவு ஒயில் கலக்கவில்லைஇ நீர் மாசடையவில்லைஇ அந்நீரை பருகலாம் என வடமாகாணசபை அறிக்கை வெளியிட்டது.

இதன் மூலம் வடமாகாணசபை வலிகாமம் மக்களின் நம்பிக்கையை மட்டுமல்ல முழுமையாக யாழ். குடாநாட்டு மக்களின் நம்பிக்கையையும் இழந்திருந்தது.
யாழ். குடாநாட்டிற்கான குடிநீர் விடயத்திலும் வடமாகாணசபையின் நடவடிக்கைகள் மக்களுக்கு அவநம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

இரணைமடு குளத்திலிருந்து யாழ். குடாநாட்டிற்கு குடிநீரை பெறும் திட்டமும் தோல்வியடைந்த நிலையில் வடமராட்சி கிழக்கு கடல் நீரை நன்னீராக்கும் திட்டத்தை வடமாகாணசபை முன்மொழிந்திருந்தது. இத்திட்டம் கூட வடமராட்சி கிழக்கின் கடல் வளம் மற்றும் சூழல் பாதுகாப்பை சரியாக ஆய்வு செய்யாமல் எடுக்கப்பட்ட முடிவு என்பதை பின்னர் அறிந்து கொண்டனர். இதனால் இத்திட்டமும் கைவிடப்பட்டது.

வடமாகாண சபை நூற்றுக்கணக்கான தீர்மானங்களை நிறைவேற்றியிருந்தது. ஆனால் வடமாகாணத்தின் ஒரு பகுதி மக்கள் தினமும் பாதிக்கப்படும் பிரச்சினை பற்றி கவனத்திலேயே எடுக்கவில்லை.
வடமாகாணத்தின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிப்பது மீன்பிடித்தொழிலாகும். மன்னாரிலிருந்து முல்லைத்தீவு வரை நீண்ட கடல்பரப்பை கொண்ட வடமாகாணம் இலங்கையின் மீன் தேவையை பூர்த்தி செய்யும் பிரதேசமாக காணப்பட்டது. ஆனால் போர் முடிந்த பின்னர் இந்திய மீனவர்கள் வடபகுதி கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து தடைசெய்யப்பட்ட வலைகளை உபயோகித்து மீன்பிடிப்பதால் வடபகுதியின் கடல்வளங்கள் அழிக்கப்படுவதுடன் வடபகுதி மீனவர்களின் வலைகள் உட்பட தொழில் உபகரணங்களும் அழிக்கப்படுகிறது.

இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் மற்றும் றோளர் படகுகளில் பாவிக்கப்படும் தடைசெய்யப்பட்ட இரட்டைமடி வலைகளால் இலங்கையின் கடல்வளம் அழிக்கப்படுகிறது. பவளப்பாறைகளும் கடல்வாழ் தாவரங்களும் அழிக்கப்படுவதால் எதிர்காலத்தில் வடபகுதி கடலில் மீன் இனம் இல்லாது அழிந்து போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
வடமாகாணத்தின் ஒரு பகுதி மக்களின் வாழ்வாதாரம் அழிக்கப்பட்டு அந்த மக்கள் பட்டினிசாவை எதிர்நோக்கிவரும் அவலங்கள் பற்றி வடமாகாண முதலமைச்சரும் வடமாகாணசபையும் கவனத்தில் கொள்ளாதது ஏன்?

அதேபோன்று வடமாகாணத்தில் இடம்பெறும் காடு அழிப்புக்களும் வெளிமாகாணத்தை சேர்ந்தவர்கள் திட்டமிட்டு குடியமர்த்தப்படும் போது அதனைப்பற்றி சிறிதும் கலைப்படாத போக்கையே வடமாகாணசபை முதலமைச்சர் கொண்டுள்ளார் என்பது அப்பகுதி மக்களை மேலும் கவலை கொள்ள வைத்துள்ளது.

முல்லைத்தீவு – குமுழமுனை பகுதியில் பெருமளவு காடுகள் வெட்டி அழிக்கப்பட்டு திட்டமிட்ட குடியேற்றம் இடம்பெற்றுவருகிறது. வட மாகாண சபை உட்பட பொறுப்புவாய்ந்த தரப்பினர் தொடர்ந்து இந்த விடயத்தைக் கண்டுகொள்ளாமல் மௌனம் சாதித்து வருவது குறித்து வடமாகாணசபையில் கடந்த வியாழக்கிழமை மாகாணசபை உறுப்பினர் ரவிகரன் பிரேரணை ஒன்றை முன்வைத்த போது அப்பிரேரணையை காரணம் கூறாது முதலமைச்சர் ஒத்தி வைத்துள்ளார்.

மாகாண காணி அமைச்சர் என்ற வகையில் முதலமைச்சர் இந்த காடழிப்பு நடவடிக்கையை உடனடியாக நிறுத்தவேண்டும் என பிரேரணையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் அரசாங்க அதிபர்இ பிரதேச செயலாளர் உட்பட சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்த போதிலும் அது பற்றி தமக்கு தெரியாது என அந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மன்னார் நானாட்டான் பகுதியிலிருந்து முல்லைத்தீவு வரை நீளமான பகுதியின் காடுகள் அழிக்கப்பட்டு அங்கு புத்தளம் போன்ற வெளிமாகாண முஸ்லீம்களுக்கு இந்த காணிகள் வழங்கப்பட்டு வருகிறது.

அமைச்சர் றிசாத் பதியுதீன் கடந்த காலங்களிலும் அமைச்சர் என்ற அதிகாரத்தை வைத்துக்கொண்டு தனது சொல்லுக்கு ஆடும் அதிகாரிகளை பிரதேச செயலாளர்களாகவும் அரசாங்க அதிபர்களாகவும் நியமித்து தனது காரியங்களை நிறைவேற்றி வந்தார். அந்நிலையே இப்போதும் தொடர்வதாக அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

வில்பத்து காட்டை அழித்து அமைச்சர் றிசாத் பதியுதீன் சட்டவிரோதமாக முஸ்லீகளை அங்கு குடியேற்றிய போது சிங்கள அமைப்புக்கள் கிளர்ந்தெழுந்து அதனை தடுக்க முற்பட்டன.
ஆனால் முல்லைத்தீவு முள்ளியவளை குமுழமுனை தமிழ் பிரதேசத்தில் றிசாத் பதியுதீனின் அரசியல் பலத்தை வைத்துக்கொண்டு அங்குள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர்களை அழித்து வெளிமாவட்ட முஸ்லீம்களை குடியேற்றுகின்ற போது வடமாகாணசபையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் மௌனம் காப்பதேன் என்ற கேள்வி எழுகிறது.

போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் காணிகள் இன்றி வாழும் போது ஒவ்வொரு முஸ்லீம் குடும்பத்திற்கும் 30இ 40 ஏக்கர்கள் என பகிர்ந்தளிக்கப்படுகின்றது. வடக்கு கிழக்கில் பலமான அரசியல் சக்தியாக இருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையிலான வடமாகாணசபையும் இவை எதுவுமே நடைபெறாதது போல மௌனம் காப்பதேன்?
தமிழ் மக்களுக்காக குரல் கொடுப்பதாக காட்டிக்கொள்ளும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் இந்த விடயத்தில் அமைச்சர் றிசாத் பதியுதீனிடம் சோரம் போய்விட்டாரா என்ற கேள்விகள் எழுகின்றன.
தமிழ் மக்களின் பாரம்பரிய நிலம் பறிபோவதை தமிழ் தேசியக் கூட்டமைப்பும் அதன் கட்டுப்பாட்டில் இருக்கும் வடமாகாணசபையும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பதேன் என்ற கேள்விக்கு அவர்கள் தமிழ் மக்களுக்கு பதில் சொல்லியாக வேண்டும்.

வில்பத்துக்காடழிப்புக்கும்இ குடியேற்றத்துக்கும் பக்கபலமாக இருந்த அதே அமைச்சர் றிசாத் பதியுதீன் தான் முல்லைத்தீவு குமுளமுனை காடு அழிப்பிலும் பக்கபலமாக இருந்து செயல்படுகிறார்.
முள்ளியவளையிலிருந்து குமுழமுனை செல்லும் வீதியில்இ குமாரபுரம் என்னும் பகுதியின் கிழக்கு எல்லையில் இருந்துதான் இந்தக் காடழிப்பு இடம்பெறுகின்றது. இதுவரை முள்ளியவளையின் எல்லைக் கிராமமாக இருந்த கற்பூரபுல்வெளி கடந்துஇ வன்னியன்மேடு எனப்படும் வன்னியின் முக்கிய வரலாற்றுடன் தொடர்பு பட்ட காட்டைத்தான் மிகவேகமாக அழித்துக்கொண்டிருக்கிறார்கள்.

இதுவரை 600 ஏக்கர்கள் வரையில் காடழிக்கப்பட்டு அந் நிலம் தனிநபர்களுக்குப் பிரித்துக்கொடுக்கப்பட்டள்ளது. 25 ஏக்கர்இ 30 ஏக்கர் என சிலர் பிரித்து பெரியளவு தோட்டங்களையும் செய்யத் தொடங்கியிருக்கின்றனர்.

வன்னியன்மேட்டின் மறுகரையில் இருக்கின்ற உப்புமாவெளிஇ தங்கபுரம் கிராமங்களின் எல்லை வரை இந்தக் காடழிப்பு நடைபெற்றுள்ளது.
இந்தக் காடழிப்பு இன்று நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டதல்ல. மீள்குடியேற்றம் ஆரம்பிக்கப்பட்ட நாள் தொட்டு தொடர்ச்சியாக நடந்திருக்கிறது.

அண்மையில் மரநடுகை மாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் மன்னார் நானாட்டான் பகுதியிலிருந்து முல்லைத்தீவு வரை நீண்டபிரதேசத்தில் உள்ள காடுகள் அழிக்கப்பட்டிருப்பதை தான் கூகிள் வரைபடத்தில் பார்த்ததாகவும் அதனை யார் அழிக்கிறார்கள் என தெரியாது என்றும் கூறியிருந்தார்.
இந்த காடு அழிப்பையும் திட்டமிட்ட குடியேற்றங்களையும் அமைச்சர் றிசாத் பதியுதீனே செய்கிறார் என தெரிந்தும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் அதனை யார் செய்கிறார்கள் என தெரியாது என கூறியதேன்?

வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள விடுதலைப்புலிகளிடம் விலைபோய் விட்டார் என்ற பலமான குற்றச்சாட்டு நிலவி வருகிறது. அதுபோல அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கும் விக்னேஸ்வரன் விலைபோய்விட்டரா என்ற நியாயமான சந்தேகம் எழுந்துள்ளது.

சட்டவிரோதமாகக் காடழிக்கும்போதும்இ காணி தொடர்பான சட்டங்களை மீறி காணியைக் கையகப்படுத்தும்போதும் அரச அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுப்பதே வழமை. ஆனால் இந்த விடயத்தில் முல்லைத்தீவு கச்சேரிஇ கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தை சேர்ந்த அதிகாரிகள் தம்மால் நடவடிக்கை எடுக்க முடியாது என கைவிரித்துள்ளனர்.

கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்துக்குட்பட்ட பகுதிக்குள் நடக்கும் சட்டவிரோத காணி பிடிப்பு நடவடிக்கைகளை எதிர்த்தால்இ அதனை உரிய இடங்களுக்கு அறிவித்தால் தமக்கு உடனடி இடம்மாற்றம் கிடைக்கும் என்பதை அனுபவ ரீதியாகச் சொல்கின்றனர். இந்த சட்டவிரோத காணி பிடிப்பு நடவடிக்கைகளுக்கு முட்டுக்கட்டையாக இருந்தனர் என்பதற்காகஇ போர் முடிந்து இதுவரையான 6 ஆண்டுகளுக்குள் கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தில் பணியாற்றிய பிரதேச செயலாளர்கள் ஐவர் இடம்மாற்றலுக்குள்ளாகியிருக்கின்றனர் என்பதையும் அதிகாரிகள் அச்சத்தோடு நினைவுகூர்கின்றனர். 6 செயலாளர்களை அடுத்தடுத்து இடம்மாற்றி 7 ஆவது செயலாளராக றிசாத் பதியுதீனின் கைப்பொம்மை ஒருவர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து 1990 ஆண்டு இடம்பெயர்ந்து சென்ற மொத்த முஸ்லிம் குடும்பங்களுமே 1000 தான் என வடக்கு முஸ்லிம்கள் தொடர்பான பிரஜைகளின் விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை சொல்கிறது.

அதன்படி 2010 ஆம் ஆண்டுக்குப் பின்னர் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் முஸ்லிம்கள் மீள்குடியேற்றம் செய்யப்படும்போது 1032 குடும்பங்கள் சொந்த காணிகளை வைத்திருப்பதற்கான உறுதியுடன் இருந்தனர். அவர்கள் கரைதுறைப்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குள் வருகின்ற கிச்சிராபுரம்இ நிராவிப்பிட்டிஇ தணியூற்றுஇ முள்ளியவளைஇ வண்ணாங்குளம் பகுதிகளில் உள்ள தமது காணிகளில் குடியேறினர்.

ஆனால் மீளக்குடியேற்றம் செய்யப்படும்போது கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்துக்குட்பட்ட பகுதியில் மட்டும் 1455 குடும்பங்கள் காணியற்றவர்களாகப் பதிவு செய்துஇ அவர்களுக்கு காணி வழங்குவதற்கான காணி கச்சேரியும் நடத்தப்பட்டுள்ளது. அவ்வாறு காணி கோரிய 1455 குடும்பங்களில் 902 பேருக்கு காணி வழங்குவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
இதனைவிட இரண்டாம் கட்டமாக கடந்த ஜனவரியில் குறித்த பிரதேச செயலகப் பிரிவுக்குள் 448 குடும்பங்கள் காணியற்றவர்களாகத் தம்மை பதிவுசெய்திருக்கின்றனர். அவர்களுக்கும் காணி வழங்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றது.

எனவே கரைதுறைப்பற்று பிரதேச செயலகர் பிரிவுக்குள் இப்போது காணி கோரியிருக்கின்ற மக்களின் எண்ணிக்கையை மொத்தமாகக் கூட்டிப் பார்த்தால் 2935 முஸ்லிம் குடும்பங்கள் கரைதுறைப்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குள் மீள்குடியேறியிருக்கின்றனர்.
ஆனால் கரைதுறைப்பற்று பிரதேச செயலம் விடுத்துள்ள மீள்குடியேற்றம் தொடர்பிலான புள்ளிவிபர அறிக்கையில் 2158 முஸ்லிம் குடும்பங்களே மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டள்ளது.

எனவே கரைதுரைப் பற்று பிரதேச செயலகத்துக்குள் காணி மற்றும் வீட்டுத்திட்டம்இ சமுர்த்தி உள்ளிட்ட மீள்குடியேற்ற உதவி கோரியும்இ அதற்கு அனுமதிக்கப்பட்டும் உள்ள 2938 முஸ்லிம் குடும்பங்களில் மீள்குடியேற்ற அறிக்கையில் வரும் 2158 குடும்பங்களின் எண்ணிக்கையைக் கழித்தால் மீதியாக வரும் 777 குடும்பங்கள் எங்கிருந்து வந்தனர்?
முழு முல்லைத்தீவு மாவட்டத்திலிலிருந்தும் 1990 ஆம் ஆண்டு வெளியேறிய 1000 முஸ்லிம் குடும்பங்கள் கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்துக்குட்பட்ட பிரதேச செயலர் பிரிவில் மட்டும் 15 வருட இடைவெளியில் எப்படி 3ஆயிரம் குடும்பங்களாக அதிகரித்தனர்?

ஒருவருக்கு அரச காணி வழங்கும் போது வேறு எங்கும் அவருக்கு காணி இல்லை என அவர் முன்னர் வசித்த கிராமசேவையாளர் உறுதிப்படுத்தினால் மட்டுமே காணி வழங்கப்படும். ஆனால் முல்லைத்தீவிலும் வன்னியிலும் காணிவழங்கப்படும் முஸ்லீம்கள் இந்த நிபந்தனைகள் எதுவும் இன்றி காணிகளை பெற்றுக்கொள்கின்றனர்.
அமைச்சர் ரிசாட் பதியுதீனால் உருவாக்கப்பட்டஇ இடம்பெயர்ந்த வடக்கு முஸ்லிம்களுக்கான செயலகம் கையெழுத்திட்டு அனுப்பும் விண்ணப்பப் படிவத்தை மீள்குடியேற விரும்பும் பகுதிகளில் உள்ள அரச அலுவலகங்களில் ஒப்படைத்தால் அதனை வைத்துக்கொண்டு பதிவினை மேற்கொள்ள வேண்டியதுதான்.

வன்னியில் தற்போது மீள்குடியமர்த்தப்படும் முஸ்லீம்களில் பெரும்பாலானவர்களுக்கு புத்தளம் உட்பட வேறு இடங்களில் காணிகளும் வீடுகளும் உள்ளன. இவை எதனையும் கவனத்தில் கொள்ளாது அமைச்சர் றிசாத் பதியுதீன் தனது அதிகாரத்தை பயன்படுத்தி சட்டவிரோத குடியேற்றத்தை மேற்கொண்டு வருகிறார் என அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
தமிழ் மக்களின் இனப்பரம்பலை பாதிக்கும் திட்டமிட்ட காடழிப்புஇ குடியேற்றம் ஒருபுறம் நடக்கிறது. மறுபுறத்தில் இந்திய மீனவர்களின் அத்துமீறலால் வடமாகாணத்தின் மூன்றில் ஒருபகுதி மக்களின் வாழ்வாதாரம் அழிக்கப்படுகிறது. யாழ். குடாநாட்டின் வலிகாமம் பகுதியின் குடிநீரில் நஞ்சு கலக்கப்பட்டிருக்கிறது. உள்ளுராட்சி மன்றங்களின் நிர்வாகங்கள் சீரழிந்து காணப்படுகிறது. வடமாகாணசபையின் கீழ் வரும் திணைக்களங்களில் ஊழலும் மோசடிகளும் மலிந்து காணப்படுகின்றன.

இவை எல்லாவற்றையும் மறைத்து கொள்வதற்காகவே வடமாகாண முதலமைச்சர் புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள விடுதலைப்புலிகளை குளிர்விப்பதற்காக சில தீர்மானங்களை நிறைவேற்றி தன்னை ஒரு ஈழத்தேசியவாதியாக காட்டிக்கொள்ள முற்பட்டிருக்கிறார் என்ற குற்றச்சாட்டும் எழுந்திருக்கிறது.
வடமாகாண முதலமைச்சராக பொறுப்பேற்ற விக்னேஸ்வரன் இரண்டு ஆண்டு சாதனை என்றால் ஈழத்தேசியவாதியாக தன்னை காட்டி இரு தீர்மானங்களை நிறைவேற்றியதை தவிர வேறு எதனை கூறமுடியும்?

( இரா.துரைரத்தினம்

SHARE