கடந்த மூன்றரை ஆண்டுகளில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்தப்படுவது வரவேற்கப்பட வேண்டிய விடயமாகும் என ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது.
ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவி வகித்த காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு ஆணைக்குழு ஒன்றை நிறுவ உள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று சர்வதேச ஊடகங்களிடம் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், இவ்வாறான ஓர் ஆணைக்குழு அமைக்கப்படுவது வரவேற்கப்பட வேண்டியது என ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் சாகல ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.
கடந்த மூன்றரை ஆண்டுகளில் ஊழல் மோசடிகள் இடம்பெற்றிருந்தால் அமைச்சரவையின் தலைவர் என்ற ரீதியில் சம அளவிலான பொறுப்பு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் உண்டு என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான ஓர் பின்னணியில் ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றை நிறுவி விசாரணை நடத்துவது வரவேற்கப்பட வேண்டியது என தெரிவித்துள்ளார்.
எனினும், இந்த விசாரணைகளின் போது குற்றச் செயல்களிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளும் போக்கினை ஜனாதிபதி பின்பற்றக்கூடாது என சாகல ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.