ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவை கடத்தியதாக சந்தேகிக்கப்பட்டு, கைதுசெய்யப்பட்ட 5 இராணுவ வீரர்களையும் வெலிக்கடை சிறைச்சாலைக்குச் சென்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பார்வையிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று செவ்வாய்க்கிழமை காலை சென்று பார்வையிட்டுள்ளதாக மஹிந்த ராஜபக்சவின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கைதுசெய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ள இராணுவ வீரர்களில் இருவர் லெப்டினன்கள், மற்றும் சாஜன்கள் உள்ளடங்குவதுடன் இவர்கள் யுத்த காலத்தில் இராணுவ புலனாய்வு சேவைகளை வழங்கியதாக குறிப்பிடப்படுகின்றது.
அது தொடர்பான விசாரணைகளும் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவும் குறித்த இராணுவ வீரர்களை சென்று சந்தித்து கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
(2ம் இணைப்பு)
பிரகீத் எக்னெலிகொட காணாமல் போன சம்வபம் தொடர்பில் ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு குறித்து ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அவருடைய ஆட்சிக் காலத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவித்த மஹிந்த ராஜபக்ஷ அவரை யார் கொலை செய்தது என்பது குறித்து தமக்குப் பிரச்சினை உள்ளதாக தெரிவித்துள்ளார்.