எக்னெலிகொடவின் புலிகளுடனான உரையாடல் – ஒலிப்பதிவு நாடா பொலிசாரிடம் கையளிப்பு

300
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட, விடுதலைப் புலிகளுடன் மேற்கொண்ட உரையாடல்கள் அடங்கிய ஒலிப்பதிவு நாடா பொலிசாரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

கடத்தப்பட்டு, காணாமல் போகச் செய்யப்பட்டுள்ள சிங்கள ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட விவகாரம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் சம்பவம் தொடர்பில் ஏழு இராணுவத்தினரை கைது செய்து விசாரணைக்குட்படுத்தியுள்ளனர்.

எனினும் பிரகீத் எக்னெலிகொட பிரதீப் என்ற பெயரில் விடுதலைப் புலிகளின் உளவாளியாக செயற்பட்டதாகவும், அவர் ஜனாதிபதி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலரை படுகொலை செய்ய விடுதலைப் புலிகளுடன் இணைந்து சதித்திட்டங்கள் தீட்டியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அதற்கான ஒலிப்பதிவு நாடாக்கள் தம்மிடம் இருப்பதாக விசாரணையின் ஆரம்ப கட்டத்தில் இருந்தே இராணுவத்தினர் கருத்து வெளியிட்டிருந்தனர்.

இந்நிலையில் தற்போது பிரதீப் என்ற பெயரில் தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளும் ஒரு நபர் விடுதலைப் புலிகளுடன் மேற்கொள்ளும் உரையாடல்கள் தொடர்பான இறுவட்டு ஒன்றை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் இராணுவத்தினர் ஒப்படைத்துள்ளனர்.

விடுதலைப் புலிகள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்களை தேடிக் கண்டழிப்பதற்காக இராணுவத்தினர் மேற்கொண்ட ஒபரேசன் டபள் எட்ஜ் நடவடிக்கையின் போது குறித்த ஒலிப்பதிவு மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

prageeth_eknaligoda-640x453

SHARE