எதனையும் தனியார்மயப்படுத்த போவதில்லை – பிரதமர்

260

எதனையும் தனியார்மயப்படுத்தும் தேவை அரசாங்கத்திற்கு இல்லை எனவும், ட்ரிலியன் ரூபா கடன் பற்றி தேடி அறிய வேண்டியுள்ளதாகவும், அதற்காக நாடாளுமன்ற தெரிவுக்குழு ஒன்றை நியமிக்க வேண்டும் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற ஸ்ரீலங்கன் விமான சேவை சம்பந்தமான சபை ஒத்திவைப்பு நேர விவாதத்தில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

திறைசேரி முறிப்பத்திரங்களை வெளியிட்ட பின்னர், இறுதி அறிக்கை மத்திய வங்கியின் நிதிச் சபையிடம் சமர்ப்பிக்க வேண்டியது அவசியம். அந்நிய செலாவணி கையிருப்பு குறித்த அறிக்கையையும் அவர்களுக்கு வழங்க வேண்டும் என கூறியுள்ளார்.

பொருளாதாரம் தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழுவிடம் மாதம் தோறும் மூன்று அறிக்கைகளை சமர்பிக்க வேண்டும் எனவும், தகவல் அறியும் உரிமை சட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர் அனைத்து விடயங்களும் வெளியாகும் என்றும் தெரிவித்ததோடு, கடந்த 10 வருடங்களாக இந்த சட்டமூலத்தை மறைத்து வைத்திருந்தனர் என குற்றம் சுமத்தியுள்ளார்.

மேலும் எமக்கு தனியார்மயப்படுத்தும் தேவையில்லை, 2001 ஆம் ஆண்டு நாங்கள் அரசாங்கத்தை பொறுப்பேற்ற போது ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் இலாபத்தில் இயங்கியது.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் 2008 ஆம் ஆண்டு வரை இலாபத்தில் இயங்கியது. இந்த நிறுவனத்தை மிஹின் லங்கா என்ற பெயரில் விமான சேவை நிறுவனம் ஒன்றை ஆரம்பித்து உடைத்து போட்டனர் என கூறியுள்ளார்.

2010 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை 202 மில்லியன் நஷ்டம், 2011 ஆம் ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்டு வரை 17.8 மில்லியன் நஷ்டம், 2013 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை 26.6 மில்லியன் நஷ்டம், 2014 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை 16.3 மிலலியன் நஷ்டம், மற்றும் 2015 ஆம் ஆண்டில் நஷ்டத்தை 8 மில்லியனாக குறைக்க முடிந்துள்ளது.

ஹம்பாந்தோட்டைக்கும் கொழும்புக்கும் இடையில் ஆரம்பிக்கப்பட்ட விமான சேவை மூலம் 48 மில்லியன் நஷ்டம் ஏற்பட்டுள்ளது எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதன்போது தெரிவித்துள்ளார்.

ranil-shriyan-wickremesinghe-22-1456139655

SHARE