எதிரணிகளை கதறவிடும் நிக்கோலஸ் பூரன்! அபுதாபியில் தாறுமாறு வெற்றி

150

 

MI எமிரேட்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபுதாபி நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தியது.

போராடிய ரசல்
இன்டர்நேஷனல் லீக் டி20 தொடரின் நேற்றையப் போட்டியில், பூரன் தலைமையிலான MI எமிரேட்ஸ் அணி அபுதாபி நைட் ரைடர்ஸை எதிர்கொண்டது.

நாணய சுழற்சியில் வென்ற MI அணி முதலில் பந்துவீசியது. தொடக்க வீரர் அலிஷான் ஷராஃபுவை 10 ஓட்டங்களில் அகேல் ஹொசைன் வெளியேற்றினார்.

அதன் பின்னர் களமிறங்கிய வீரர்கள் டிரென்ட் போல்ட்டின் வேகத்தில் அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினர். இதனால் அபுதாபி அணி 50 ஓட்டங்கள் எடுப்பதற்குள் 6 விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

அனுபவ வீரர் ரவி போபரா முதல் பந்திலேயே முகமது ரோஹித் கான் ஓவரில் அவுட் ஆக, அதே ஓவரில் டேவிட் வில்லியும் வெளியேறினார்.

ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்த நிலையிலும் ஆந்த்ரே ரசல் தனது அதிரடி ஆட்டத்தினை நிறுத்தவில்லை. 4 சிக்ஸர்களை பறக்கவிட்டு 48 (25) ஓட்டங்கள் எடுத்த அவர் கடைசி விக்கெட்டாக ஆட்டமிழக்க, அபுதாபி அணி 95 ஓட்டங்களுக்கு சுருண்டது.

போல்ட், முகமது ரோஹித் தலா 3 விக்கெட்டுகளும், அகேல் ஹொசைன் 2 விக்கெட்டுகளும், வாகர் மற்றும் பரூகி தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

முடித்து வைத்த பூரன்
பின்னர் எளிய இலக்குடன் களமிறங்கிய MI எமிரேட்ஸ், 9வது ஓவரிலேயே ஒரு விக்கெட் இழப்பிற்கு 96 ஓட்டங்கள் விளாசி வெற்றி பெற்றது.

கேப்டன் நிக்கோலஸ் பூரன் 5 சிக்ஸர்களை விளாசி 16 பந்துகளில் 39 ஓட்டங்கள் குவித்தார். முகமது வசீம் 26 (20) ஓட்டங்கள் எடுத்தார்.

இது MI அணிக்கு இரண்டாவது வெற்றி ஆகும். இதன்மூலம் புள்ளிப்பட்டியலில் MI எமிரேட்ஸ் முதலிடம் வகிக்கிறது.

 

SHARE