ஐக்கிய இராஜ்ஜியத்தில் அங்கம் வகிக்கும் ஸ்கொட்லாந்தின் சமஷ்டி அரசமைப்பு தொடர்பில் ஆராய்வதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் லண்டனுக்கு நேற்று திங்கட்கிழமை காலை பயணமாகியுள்ளார்.
நாட்டில் புதிய அரசமைப்புத் தொடர்பில் ஆராயப்பட்டு வருகின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் புதிய அரசமைப்புக்கு முன்வைப்பதற்கான யோசனைகளைத் தயாரிக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறானதொரு நிலையில், கூட்டமைப்பின் தலைவர் பிரிட்டனுக்குப் புறப்பட்டுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் அந்தக் கட்சியின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன், இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக நாளை புதன்கிழமை பிரிட்டனுக்குப் புறப்படவுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, பிரிட்டனில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. அந்தக் கலந்துரையாடலிலும், கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் பங்கெடுக்கவுள்ளனர்.
இந்தப் பயணத்தின்போது பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கமரூனை, எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் சந்தித்துப் பேசுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும் அது இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை.
பிரிட்டனில் நடைபெறும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடனான கலந்துரையாடலின் பின்னர், கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் ஸ்கொட்லாந்துக்குச் செல்லவுள்ளனர். அங்கு சமஷ்டி அரசமைப்பு தொடர்பில் ஆராயவுள்ளனர்.
இலங்கையின் புதிய அரசமைப்பில் அதியுச்ச சமஷ்டித் தீர்வே தேவை என்று கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சில தினங்களுக்கு முன்னர் கிளிநொச்சியில் தெரிவித்திருந்தார்.
சர்வதேச நாடுகளில் உள்ள சமஷ்டி ஆட்சி முறைகளில் பிரிட்டனின் கீழ் உள்ள ஸ்கொட்லாந்திலேயே அதி உச்ச சமஷ்டி அதிகாரப் பரவலாக்கம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.