
எதிர்க்கட்சித் தலைவர் முன் அறிவித்தலின்றி இராணுவ முகாமிற்கு சென்றிருக்கக் கூடாது என பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
இராணுவ முகாம்களுக்கு செல்லும் முன்னதாக அறிவித்தல் வழங்கிவிட்டு செல்வது பொருத்தமானதாக இருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இராணுவ முகாமிற்கு விஜயம் செய்வதற்கு ஒன்று அல்லது இரண்டு தினங்களுக்கு முன்னரேனும் விஜயம் பற்றி இராணுவத்திற்கு கட்டாயம் அறிவிக்க வேண்டுமென இராணுவத்தினர் எதிர்க்கட்சித் தலைவருக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டின் எந்தவொரு பகுதிக்கும் எந்தவொரு நேரத்திலும் விஜயம் செய்வதற்கான பூரண அதிகாரம் எதிர்க்கட்சித் தலைவருக்கு உண்டு என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், அவர் இராணுவ முகாம் ஒன்றிற்கு செல்லும் முன் அது பற்றி முன்கூட்டியே அறிவிக்க வேண்டுமென அமைச்சர் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் பலவந்தமாக அத்து மீறி இராணுவ முகாமிற்குள் பிரவேசிக்கவில்லை எனவும் இதனை ஓர் பாரதூரமான சம்பவமாக கருதவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கிளிநொச்சி மக்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினை குறித்து கவனம் செலுத்த அங்கு சென்றுள்ளதாகவும், படையினரோ காவல்துறையினரோ அவருக்கு எவ்வித சிரமத்தையும் ஏற்படுத்தவில்லை எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இராணுவ முகாமிற்குள் பிரவேசிக்க முன்னதாக முன் அறிவித்தல் ஒன்றை வழங்குமாறு மட்டுமே படையினர் கோரியதாகத் தெரிவித்துள்ளார்.
நாட்டின் இறைமைக்கும், பௌதீக ஒருமைப்பாட்டுக்கும் ஐக்கியத்திற்கும் குந்தகம் ஏற்படுவதற்கு எந்த வகையிலும் சந்தர்ப்பம் வழங்கப்படாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறெனினும், அதிகாரத்தை பகிர்வது தொடர்பிலான காத்திரமான பொறிமுறைமையொன்று உருவாக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசாங்கத்துடன் இணைந்தே வட மாகாணசபை செயற்பட வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.