இலங்கையில் தெற்கிலும் வடக்கிலும் மக்களை அணி திரட்டும் இரு வெவ்வேறு அரசியல் செயற்பாடுகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இரு அணித்திரட்டல்களுமே முற்றிலும் முரண்பட்ட நோக்கங்களைத் கொண்டிருக்கின்ற அதேவேளை, ஒன்றை மற்றையது பரஸ்பரம் வசதிப்படுத்துவதாகவும் அமைந்திருக்கிறது. அத்துடன் இந்த எதிர்முனைப்பட்ட இரு செயற்பாடுகளுமே இறுதியில் புதிய அரசியல் கட்சிகளை அல்லது புதிய அரசியல் அணிகளைத் தோற்றுவிக்கக்கூடிய வாய்ப்புக்களைக் கொண்டிருக்கின்றன என்றும் கூறலாம்.
தென்னிலங்கையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவும் அவருக்கு ஆதரவான அரசியல் சக்திகளும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினதும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினதும் தலைமையிலான தேசிய ஐக்கிய அரசாங்கத்துக்கு எதிராக மக்களை அணிதிரட்டி மீண்டும் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றும் நோக்குடன் செயற்பட்டுக் கொண்டிருக்கின்ற அதேவேளை, மறுபுறத்தில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும் அவரை இணைத்தலைவராகக் கொண்ட சிவில் சமூக அமைப்பு என்று சொல்லப்படுகின்ற தமிழ் மக்கள் பேரவைக்கு அனுசரணையான தமிழ் அரசியல் சக்திகளும் தமிழ் மக்களை அழுத்துகின்ற பிரச்சினைகள் தொடர்பிலான கரிசனைகளையும் கவலைகளையும் கண்டனங்களையும் வெளிப்படுத்தி விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதற்காக மக்களை அணிதிரட்ட ஆரம்பித்திருக்கின்றனர். இந்த அணி திரட்டல் தமிழ் பேசும் மக்களின் நியாயபூர்வமான நீண்டகால அரசியல் அபிலாசைகளை நிறைவு செய்யக்கூடிய அரசியல் இணக்கத் தீர்வொன்றைக் காண வேண்டிய அவசியத்தை முன்னிறுத்தி மேற்கொள்ளப்படுகின்ற அதேவேளை, தென்னிலங்கையில் ராஜபக் ஷ முகாமின் அணிதிரட்டல் அடிப்படையில் சிறுபான்மை இனத்தவர்களின் நியாயபூர்வமான எந்தவொரு அரசியல் அபிலாசையையுமே அங்கீகரிக்கத் தயாரில்லாத நிகழ்ச்சித் திட்டத்துடன் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது.
2015 ஜனவரி ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்று முழுமையாக இரு மாதங்கள் கடந்துவிடுவதற்கு முன்னதாக தலைநகர் கொழும்புக்கு வெளியே நுகேகொடையில் ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக்கூட்டத்துடன் தொடங்கிய ராஜபக் ஷ ஆதரவுச் சக்திகளின் அணித்திரட்டல் செயற்பாடுகள் இறுதியாக கடந்த 8 ஆம் திகதி சனிக்கிழமை இரத்தினபுரியில் நடைபெற்ற பேரணியில் வந்து நிற்கிறன. வடக்கில் தமிழ் மக்கள் பேரவையின் அணி திரட்டல் கடந்த மாதம் 24 ஆம் திகதி யாழ் நகரில் ‘ எழுக தமிழ் ‘ என்ற பெயரில் ஆர்ப்பாட்ட ஊர்வலத்துடனும் முற்றவெளியில் பேரணியுடனும் தொடங்கியிருக்கிறது. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தொடர்ச்சியாக ‘எழுக தமிழ்’ பேரணிகளை நடத்தப்போவதாக தமிழ் மக்கள் பேரவை அறிவித்திருந்த போதிலும் , அடுத்த பேரணி குறித்து இக் கட்டுரை எழுதப்படும் வரை இன்னமும் தகவலைக் காணவில்லை.
ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற சில வாரங்களுக்குள்ளாகவே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைத்துவத்தை மைத்திரிபால சிறிசேனவினால் கைப்பற்றக்கூடியதாக இருந்த போதிலும், 20 மாதங்கள் கடந்த நிலையிலும் இன்னமும் கட்சியை முழுமையாகத் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர அவரால் முடியவில்லை. இடைப்பட்ட காலத்தில் சுதந்திரக்கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 2015 ஆகஸ்ட் பாராளுமன்றத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி ராஜபக் ஷவை முன்னிலைப்படுத்தி களமிறங்குவதைக் கூட ஜனாதிபதி சிறிசேனவினால் தடுக்க முடியாதிருந்தது. சுதந்திரக் கட்சியின் தலைமைத்துவத்தை மீண்டும் கைப்பற்றும் நோக்குடன் ராஜபக் ஷாக்கள் செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்ற போதிலும், அது முடியாமல் போகும் பட்சத்தில் தங்கள் தலைமையில் புதியதொரு கட்சியை தோற்றுவிப்பதற்கான ஏற்பாடுகள் பற்றியும் அவ்வப்போது அவர்கள் அறிவித்துக் கொண்டே இருக்கிறார்கள். தென்னிலங்கை மக்களுக்கு புதியதொரு கட்சி தேவைப்படுகிறது என்று மஹிந்த ராஜபக் ஷ வெளிப்படையாகவே கூறியிருந்தார் என்பது கவனிக்கத்தக்கது.
பிரதமர் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியுடன் சேர்ந்து அமைக்கப்பட்டிருக்கும் தேசிய ஐக்கிய அரசாங்கத்தில் இணைந்து கொண்டு பதவிகளைப் பெற்றிருக்கும் சுதந் திரக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களைத் தவிர, அக்கட்சியினதும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சிறிய பங்காளிக் கட்சிகளினதும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சுமார் 50 பேர் முன்னாள் ஜனாதிபதிக்கே விசுவாசமாக இருந்து பாராளுமன்றத்தில் ‘கூட்டு எதிரணி’ என்று தங்களை அழைத்துக்கொண்டு செயற்படுகின்றார்கள். இவர்களுக்கு எதிராக ஜனாதிபதி சிறிசேனவினால் சுதந்திரக் கட்சியின் தலைவர் என்ற வகையில் உருப்படியான நடவடிக்கைகளை எடுக்கவும் முடியவில்லை. இவர்களை கட்சியின் மாவட்ட மற்றும் தொகுதி அமைப்பாளர்கள் பதவிகளில் இருந்து நீக்கிய போதிலும், கட்சியின் அடிமட்டங்களில் தனக்கு ஆதரவான நிலையை ஏற்படுத்த ஜனாதிபதியினால் இன்னமும் இயலாமல் இருக்கிறது.
ராஜபக் ஷ முகாம் உள்ளூராட்சித் தேர்தல்களுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறது. ஆனால் இதை நடத்துவதில் அரசாங்கத்திற்கு எந்த அவசரமும் இல்லை.
அடுத்து நடைபெறக்கூடிய எந்தவொரு தேர்தலிலும் ராஜபக் ஷ விசுவாசிகளுக்கு சுதந்திரக் கட்சியினதோ அல்லது அதன் தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினதோ சார்பில் போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் வழங்கப்படக்கூடிய சாத்தியம் இல்லை என்பதால், அவர்கள் தனியான அணியாகப் போட்டியிடத் தாங்கள் தயாராயிருப்பதாக அறிவித்திருக்கிறார்கள். தங்களுக்கு இருப்பதாக அவர்கள் நம்புகின்ற மக்கள் ஆதரவை நிரூபிப்பதற்கு ராஜபக் ஷ முகாம் உள்ளூராட்சித் தேர்தல்களையே முக்கியமான களமாக பயன்படுத்தத் திட்டம் தீட்டியிருக்கிறது என்பது வெளிப்படையானது.
புதிய கட்சியை ஆரம்பிப்பது தொடர்பில் அவர்கள் அடிக்கடி பேசுகின்ற போதிலு கூட, உள்ளூராட்சித் தேர்தலுக்கு முன்னதாக கட்சி ஆரம்பிக்கப்படக்கூடிய சாத்தியத்தை எதிர்பார்ப்பதற்கில்லை. உள்ளூராட்சித் தேர்தலை தொடர்ச்சியாக ஒத்திவைத்துக்கொண்டு போவதற்கு அரசாங்கத் தரப்பில் கூறப்படுகின்ற நடைமுறைக் காரணங்களுக்கு அப்பால் அதற்கு பிரத்தியேகமான அரசியல் காரணம் ஒன்று இருக்கிறது என்பதை புரிந்துகொள்வதற்கு எவரும் அரசியல் மேதையாக-இருக்கவேண்டியதில்லை. உள்ளூராட்சித் தேர்தலில் தனது முகாமுக்கு இருக்க கூடிய மக்கள் செல்வாக்கை நிரூபிக்க முடியுமானால் அதற்குப் பிறகு சுதந்திரக்கட்சியின் தலைமைத்துவத்தை மீண்டும் தன்வசப்படுத்துவதற்காக ஜனாதிபதி சிறிசேனவை கட்சிக்குள் மேலும் பலவீனப்படுத்தக்கூடிய வியூகங்களை ராஜபக் ஷவினால் இலகுவாக முன்னெடுக்கக் கூடியதாக இருக்கும். எதற்கும் தென்னிலங்கையில் புதிய கட்சியொன்று அவர் தலைமையில் உருவாகுமா இல்லையா என்பதை அடுத்து நடத்தப்படக்கூடிய ஒரு தேர்தலே நிர்ணயிக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இது இவ்வாறிருக்க, யாழ் நகரில் தமிழ் மக்கள் பேரவையினால் நடத்தப்பட்ட ‘எழுக தமிழ்’ பேரணி கொழும்பு அரசாங்கத்துக்கு நெருக்குதலைக் கொடுத்ததோ இல்லையோ தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு குறிப்பாக, கூட்டமைப்பின் பெரிய கட்சியாக இருக்கும் தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவத்துக்கு சங்கடத்தைக் கொடுத்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. முன்னர் கூறப்பட்டது போன்று, உள்நாட்டுப் போரின் முடிவுக்குப் பின்னரான கால கட்டத்தில் தங்களது பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு வேண்டி தமிழ் மக்கள் அணிதிரண்ட முதன் முதலான பெரியதொரு அரசியல் போராட்ட இயக்கமாக யாழ் நகர்ப் பேரணி அமைந்திருந்தது.
இதன் காரணத்தினால், உள் நாட்டிலும் வெளி நாட்டிலும் பெரும் கவனத்தை அது இயல்பாகவே ஈர்த்தது. அந்தப் பேரணிக்குப் பிறகு இலங்கை அரசியல் அரங்கில் பெரும் சர்ச்சைக்குரியவராக முதலமைச்சர் விக்னேஸ்வரன் மாறியிருப்பதையும் காணக்கூடியதாக இருகிறது. இலங்கைத் தமிழ் மக்களின் அரசியல் தலைமைத்துவத்தில் ஏற்படக்கூடிய மாற்றத்தை விக்னேஸ்வரனின் பேச்சுகளும் செயல்களும் பிரதிபலிக்கின்றனவா என்ற கேள்வியும் பிறந்திருக்கின்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் 2013 செப்டெம்பர் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று முதலமைச்சராக முன்னாள் உச்ச நீதிமன்ற நீதியரசர் வந்தபோதிலும், குறிப்பாக கடந்த ஒரு வருடத்துக்கும் அதிகமான கால கட்டத்தில் அவரது பேச்சுக்களும் செயல்களும் ஏனைய மூத்த தமிழ் அரசியல்வாதிகள் பலரை கிரகணம் செய்ய ஆரம்பித்து விட்டன என்று என்று பல அவதானிகள் கருதுகிறார்கள்.
இத்தகையதொரு பின்புலத்தில் முதலமைச்சர் விக்னேஸ்வரனை முன்னிலைப்படுத்தி புதியதொரு அரசியல் கட்சி அல்லது அரசியல் அணி உருவாகுமா என்ற கேள்விகளும் பிறந்திருக்கின்றன. 2015 ஆகஸ்ட் பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கட்டமைப்பை ஆதரிக்க மறுத்த விக்னேஸ்வரன் கூட்டமைப்பை விமர்சிக்கின்ற அரசியல்வாதிகளுக்கு நெருக்கமானவராக மாறி, தமிழ் மக்கள் பேரவையின் செயற்பாடுகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள ஆரம்பித்தபோது புதிய அரசியல் கட்சியை தொடங்குவதற்கான முன்னோடி நடவடிக்கையாக அது இல்லை என்று வெளிப்படையாகவே கூறியிருந்தார். கடந்த வருடம் டிசம்பர் மாத நடுப்பகுதியில் யாழ். நகரில் தமிழ் மக்கள் பேரவையின் அங்குரார்ப்பணக் கூட்டத்தில் ஆற்றிய உரையிலும் முதலமைச்சர் ‘தமிழ் மக்கள் பேரவை ஒரு அரசியல் இயக்கம் அல்ல. அது அரசியலில் பங்கேற்பதற்கான உத்தேசத்தையும் கூட கொண்டதல்ல’ என்று குறிப்பிட்டிருந்தார். ‘எழுக தமிழ்’ பேரணியில் ஆற்றிய உரையில் கூட அவர் ‘ இன்றைய கால கட்டத்தில் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்படுவதினாலோ அல்லது மாகாண சபைகளுக்குத் தெரிவு செய்யப்படுவதினாலோ எமது உரிமைகளை நாம் வென்றெடுக்க முடியாது. மக்கள் சக்தி எமது அரசியல் பயணத்துக்கு அவசியம். அதனால்தான் தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைமைப் பதவியை ஏற்றேன்’ என்று கூறியதும் கவனிக்கத்தக்கது. அரசியல் கட்சியாகவோ அல்லது அரசியல் அணியொன்றாகவோ செயற்படும் நோக்கம் பேரவைக்கு இல்லை என்று தெளிவுபடுத்தப்பட்ட பின்னரே அதன் செயற்பாடுகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள முன்வந்ததாகவே முதலமைச்சரின் விளக்கங்கள் அமைந்திருந்தன.
ஆனால் தமிழ் மக்கள் பேரவையின் செயற்பாடுகளில் தீவிர பங்கேற்கும் அரசியல்வாதிகளில் ஒருவரான ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (ஈ.பி.ஆர்.எல்.எப்.) தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் அண்மையில் கொழும்பு ஆங்கில வாரப் பத்திரிகையொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்த கருத்துக்கள் ‘எழுக தமிழ்’ பேரணிக்கு பிறகு அவர்களுக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய ‘மருட்சியை ‘ பிரதிபலிப்பதாக அமைந்திருக்கிறது.
மாற்று அரசியல் கட்சியொன்றுக்கான தேவையிருப்பதாக நீங்கள் கருதுகின்றீர்களா? என்று பிரேமச்சந்திரனிடம் கேட்கப்பட்ட போது அவர் அளித்த பதில் வருமாறு;
“புதிய அரசியல் கட்சியொன்று நிச்சயமாகத் தேவை. எழுக தமிழ் பேரணியின் போதும் அது விளங்கிக் கொள்ளப்பட்டது. இன்னொரு தமிழ்க் கட்சிக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமை கொடுக்க வேண்டும் என்று பலர் யோசனை தெரிவித்திருக்கிறார்கள். பெருமளவு தமிழ் மக்கள் இப்போது முதலமைச்சரை சுற்றி அணி திரளுகிறார்கள். தமிழர்களின் அக்கறைகளுக்காக குரல் கொடுக்கும் ஒரு மனிதராக அவரை அவர்கள் நோக்குகிறார்கள். அத்தகைய மாற்றுக் கட்சிக்கான அவசர தேவையொன்று இருப்பதாக நான் நினைக்கிறேன். ஆனால் முதலமைச்சர் இன்னொரு அரசியல் கட்சியை ஆரம்பிக்கப் போகிறார் என்று நான் நிச்சயமாகக் கூறவில்லை. நானும் அவ்வாறு புதிய கட்சியை ஆரம்பிக்கப் போவதுமில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மாற்றாக ஒரு கட்சிக்கான தேவை இருப்பதாக மக்கள் நிச்சயமாகக் கருதுகிறார்கள். அத்தகைய கட்சியின் தலைமைத்துவத்தை ஏற்றுக் கொள்ளுமாறு விக்னேஸ்வரனை அவர்கள் உற்சாகப்படுத்துகிறார்கள். இப்போது உள்ளதைப் போன்று நிலைவரங்கள் தொடருமாக இருந்தால், தமிழ் மக்களின் அக்கறைகளுக்கும் பிரச்சினைகளுக்கும் குரல் கொடுக்கக்கூடிய புதியதொரு அரசியல் கட்சியை அமைக்க வேண்டிய தேவை நிச்சயம் ஏற்படும்.” புதிய தமிழ் கட்சியின் தேவை குறித்து பிரேமச்சந்திரன் தெரிவித்திருக்கும் இக்கருத்துக்கள் தொடர்பில் தமிழ் மக்கள் பேரவைக்கு அனுசரணையாகச் செயற்படுகின்ற ஏனைய அரசியல்வாதிகளின் அபிப்பிராயங்கள் எதுவோ தெரியவில்லை. (பிரேமச்சந்திரனைப் போன்றே அவர்கள் ஒவ்வொருவரும் ஏற்கெனவே தங்கள் சொந்தத்தில் கட்சிகளைக் கொண்டிருக்கிறார்கள்) குறிப்பாக, இது குறித்து முதலமைச்சர் விக்னேஸ்வரனின் பிரதிபலிப்பை அறிய தமிழர்கள் ஆர்வமாக இருப்பார்கள்.
Virakesari